பாலின பாகுபாட்டைக் களைந்த 'ஆண்- பெண் நட்பு'

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு..
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு..
வானுக்கும் எல்லை உண்டு.. நட்புக்கில்லையே..’ 

என்ற நட்பின் இலக்கணத்தைக் கூறும் ‘முஸ்தபா, முஸ்தபா..’ பாடல் இன்றும் நண்பர்களால் கொண்டாடப்படும் ஒரு பாடல். உலகில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் மேலாக பார்க்கப்படுவது நட்பு.. நண்பர்கள்… வாழ்க்கையில் ஆயிரம் எதிரிகள் எதிர்த்து நின்றாலும் உண்மையான நண்பன் ஒருவன் இருந்தால் எதிரிகளை தோற்கடித்து விடலாம் என்று கூறுவார்கள்.

சங்க காலம் முதல் நவீன யுகம் வரை மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உன்னத உறவான உணமையான நட்பு ஒருவருக்கு தனது வாழ்க்கையில் கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் பாக்கியவான்களே. 

இதில், ஆண்-ஆண் நட்பை விட, ஆண்-பெண் நட்பில் இருக்கும் சுவாரசியங்கள் அலாதியானது. உண்மையான தோழியும், உண்மையான தோழனும் கிடைத்தவர்கள் இதனை உணர முடியும்.

ஆண்களுக்கு இடையே காணப்படும் நட்பையே போற்றி வந்த சமூகம் தற்போது ஆண் – பெண் நட்பையும் சரியான கண்ணோட்டத்தோடு பார்க்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. 

ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வந்து ஆண் நண்பர்களுடன் பழகும் போது, உளவியல் ரீதியாக தெளிவான விஷயங்களைப் பெறுகிறாள். ஆண்-பெண் நட்பில், பெண்ணைவிட ஆண், உளவியல் ரீதியாக அதிக பயன்களைப் பெறுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஒரு பெண் தன் தோழியிடம் பகிர தயக்கம் காட்டும் சில விஷயங்களைக் கூட தோழனிடம் பகிர்ந்துகொள்கிறாள். நண்பன் இருக்கும் தைரியத்தில் அவள் வாழ்க்கையைக் கடக்கிறாள். ஒரே பாலினத்தைச் சேர்ந்த நட்பை விட எதிர்பாலின நட்பில் கிடைக்கும் நம்பிக்கையும், ஆறுதலும் அதிகம். வாழ்க்கையில் சந்தோஷ நிகழ்வுகள் மட்டுமின்றி பிரச்னைகளை சமாளிக்கவும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர். ஏன், நண்பனை கொண்டிருக்கும் பெண், எதிர்காலத்தில் தனது வாழ்க்கைத்துணையாக வரும் ஆணின் மனதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். 

அதேநேரத்தில் வீட்டிலேயே இருக்கும் பெண், தனது குடும்ப உறவுகளைத் தவிர வாழ்க்கையில் பெரிதாக ஆண்களை சந்திக்காத பெண்கள், புதிதாக ஆண்களை சந்திக்கும்போது மனதளவில் ஏதோ ஒருவித பயத்தை உணர்கிறாள். ‘நீ ஆண், நீ பெண், இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று வளர்க்கப்படும் பெண்கள்தான் சமூகத்தில் ஆண்களைப் பற்றி புரிந்துகொள்ளாமல் போகிறார்கள். பிள்ளைகளை வீட்டிலேயே வைத்து வளர்ப்பதால் அவர்களது உணர்வுகளை கட்டிப்போட்டு விட முடியாது. பெண் பிள்ளைகளுக்கும் உலகத்தைக் காட்ட பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர். வீட்டிலேயே வைத்து பார்த்து பார்த்து வளர்க்கப்படும் பெண்கள் தான், எதிர்பாலின உறவுகளில் அதிக பிரச்னைகளை எதிர்கொள்வதாக மன நல ஆலோசகர்கள் கூறுகின்றனர். எனவே, பெற்றோர்கள், ‘வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது’ என்று சொல்வதற்கு பதிலாக, வெளியே சென்றால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒரு ஆண்-பெண் நட்பில், இருவருமே எதிர்பாலினங்களைப் பற்றி புரிந்துகொள்ளும் சூழல் நிலவுகிறது. எனவே, சிறு வயதில் இருந்தே எதிர்பாலின நட்பு வேண்டும். ஏனென்றால் பதின்பருவ வயதில் ஒரு ஆணை பார்க்கும்போதுதான் பெண்ணிற்கு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது. இதுவே, ஆண் நட்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம், புதிதாக ஒரு ஆண் வந்து பேசினால்கூட அவனின் மனநிலை என்ன?, அவன் நல்லவனா? கெட்டவனா? என்று ஓரளவு தெரிந்துகொள்ளும் பக்குவம் அந்த பெண்ணிடம் இருக்கும்.

ஒரு ஆண் தன்னிடம் வந்து காதலை சொன்னாலும், நிதானத்துடன் முடிவெடுக்கும் அளவுக்கு அந்த பெண் பக்குவப்பட்டிருப்பாள். ஏன், தன்னுடன் பழகும் ஆண் நண்பர்கள் வந்து, நட்பை மீறிய தங்களது காதலைச் சொல்லும்போது அதை கையாளும் விதத்தைக்கூட தெரிந்து வைத்திருப்பாள். 

உண்மையில் ஆண்-பெண் நட்பு உளவியல் ரீதியாக பல பயன்களைத் தருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. சிறு வயதில் இருந்தே எதிர்பாலினங்களை பற்றி தெரிந்து வளரும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பிரச்னைகள் குறைவாகவே உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

சில நேரங்களில் ஆண்-பெண் நட்பும் காதலாக மாறலாம். அவர்களின் பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் என அனைத்தும் பிடிக்கும்பட்சத்தில், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நண்பரை வாழ்க்கைத் துணையாகவும் ஏற்றுக்கொள்கின்றனர். இது தவறு என்று கூற இயலாது. தெரியாத ஒரு நபரை திருமணம் செய்துகொள்வதை விட நல்ல புரிதல் உணர்வு கொண்ட இருவரின் திருமண வாழ்க்கை சிறந்ததாகவே இருக்கும். இவ்வாறான சூழ்நிலை வரும்பட்சத்தில் இருவருமே தெளிவான புரிதலுடன் முடிவெடுக்க வேண்டியது அவசியம். புரிதலும், தெளிவும் கொண்ட உறவே வாழ்வில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். 

அதேபோன்று தற்போதைய கால்கட்டத்தில் ஆண் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு பெண்களை ஏமாற்றும் நிகழ்வுகளும் அதிகம். எனவே, சமூக வலைத்தளங்களில் நட்பு, முகம் பார்க்கா நட்பு என்றெல்லாம் இல்லாமல், சாதாரணமாக ஒரு ஆணிடம் பேசும்போது நட்பு ரீதியான உணர்வு ஏற்படும்பட்சத்தில், அந்த ஆணை பற்றி முழுவதுமாக தெரிந்து, புரிந்துகொண்டு நண்பனாக்குங்கள்.. அதுவே ஆண்களுக்கும்..

அதே நேரத்தில் அனைவரும் எல்லா நேரத்திலும் நல்லவர்களாக இருக்க முடியாது. நன்கு தெரிந்த, புரிந்துகொண்ட ஆண் நண்பரிடம் பிரச்னை ஏற்படும்பட்சத்தில், அதனை சமாளிக்கும் பக்குவமும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி தெரியாதவர்களுடன் ஏற்படும் நட்புதான் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. 

ஆண் நண்பர்களுடன் பழகும்போது, பெண்களும் தனது பெற்றோர்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கு தெரிந்து ஆண் நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும்.

அதேநேரத்தில், தேவையில்லாமல் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் வெளியே சுற்றுவது, அரட்டை அடிப்பது என்றெல்லாம் இல்லாமல் பெற்றோர்களின் மனநிலைக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும். 

சில நேரங்களில் நண்பனை வீட்டிற்கு வரச்சொல்லி சந்திக்கலாம், பெற்றோர்களிடமும் நண்பனை பேசவைத்து தங்களது நட்பின் புரிதலை ஏற்படுத்தலாம். முதலில் மாற்றம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை பெண் பிள்ளைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆணும், பெண்ணும் வாழ்நாள் முழுவதும் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது என்று கூறிய இந்த சமுதாயத்தில் தற்போது உண்மையான ஆண்- பெண் நண்பர்கள் உருவெடுத்து வருகிறார்கள். மற்ற உறவுகளைப் போலத்தான் ஆண்- பெண் நட்பும் என்பதை நாமும், இந்த சமுதாயமும் முழுவதுமாக புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. 

வாழ்க்கையில் சந்தோஷங்களை கொடுக்கும் நண்பர்கள் தான் சில சாதனைகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள். எனவே, நண்பர்களைக் கொண்டாடுங்கள்.. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்..

<!–

–>