புகைப்பழக்க அடிமைத்தனத்திலிருந்து (Smoking addiction) விடுதலை

மே 31 உலக புகையிலை எதிர்ப்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஆக்டோபஸ் போலப் பரவியிருக்கிறது புகையிலை. இது குறுக்கிய காலப் பணப்பயிராக உலகின் 100 நாடுகளின் பயிர்செய்யப்பட்டு வருகிறது. 10 கோடி மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் மொகலாயர்களின் வருகைக்கு பின் புகையிலை பழக்கம் மக்களிடம் பரவியது. அந்நியக் கலாச்சாரங்களின் நல்ல அம்சங்களை விட தீய அம்சங்கள் விரைந்து பரவுகின்றன.   

அதிகார பீடங்கள் தரும் அதிர்ச்சியான சில புள்ளி விவரங்கள்:      

இந்தியாவில் இன்று வருவாய் ஈட்டும் நான்கு துறைகளில் ஒன்றாக புகையிலைப் பொருட்கள் உற்பத்தி உள்ளது. மற்றவை  1.டெக்ஸ்டைல்ஸ் 2. பெட்ரொலியப் பொருட்கள் உற்பத்தி  3.  இரும்பு ஸ்டீல் உற்பத்தி. நாம் அறிய வேண்டிய சிந்திக்க வேண்டிய முக்கியமான மற்றொரு செய்தி….

புகையிலைப் பொருள்களால் இந்திய அரசுக்கு ஆண்டு வருமானம் ரூ.5,550 கோடி. ஆனால்  புகையிலைப் பொருள்களால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு செலவிடும் தொகை ரூ. 13,517 கோடி.  சுண்டைக்காய் கால் பணம்! சுமை கூலி முக்கால் பணம்! என்பது தமிழ் சொலவடை.

1990-ல் உலகில் புகைப்பழக்க தொடர்புள்ள வியாதிகளால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சம். இந்த எண்ணிக்கை 1998-ல் 48 லட்சமாக உயர்ந்தது. 2020ஆம் ஆண்டில் இந்த மரண எண்ணிக்கை 1 கோடியை எட்டிவிடும் என்று எச்சரிக்கிறது உலக நல நிறுவனம். உலகப் போர்களில் எற்பட்ட மனித இழப்புகளைவிட புகைபழக்க நோய் மரணங்களின் எண்ணிக்கை அதிகம்.

முன்னேறிய நாடுகளில் பெண்களும் புகை, மது, போதைப் பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். உலகளவில் 30 சதவிகித ஆண்களும் 19 சதவிகிதப் பெண்களும் புகைத்து வருகின்றனர். தினமும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 1,00,000 பேர்கள் புகைப்பிடிக்கத் துவங்குகின்றனர். உலகில் அன்றாடம் பலகாரணங்களால் நிகழும் 10 மரணங்களில் ஒரு மரணம் புகைப்பழக்கத்தால் எற்படுகிறது.

உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பிடிக்கின்றனர். இந்தியாவில்  இப்போதைய புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 12 கோடி. புகை தொடர்ப்பன நோய்களால் உலகளவில் தினமும் 11,000 பேர்கள் சாகின்றனர். இவர்களில் இந்தியர்கள் 2200 பேர்கள்- அதாவது  ஐந்தில் ஒருவர் இந்தியர். இன்றைய அமெரிக்காவில் ஒவ்வொரு  ஆண்டும் 3,90,000 உயிர்கள் புகைப்பழக்க விளைவுகளால் பலியாகின்றன.

இவை கற்பனையான புள்ளி விவரங்களல்ல! இந்திய சுகாதாரத் துறை சார்ந்த, அமெரிக்க அரசு சார்ந்த, உலக நல நிறுவனம் சார்ந்த ஆய்வுகளின், அறிவிப்புகளின் ஒரு சில அம்சங்கள்.

புகையிலையில் புதைந்துள்ள கேடுகள் :

புகையிலையில் 4000 க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இதிலுள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் போன்றவை நுரையீரலின் உட்பகுதிகள் வரை ஊடுருவி புற்று நோய் அல்லது புற்று நோய்க்கு சமமான வேறு பல நோய்களை உண்டாக்குகிறது. அதிக, ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதய தசைகளின் ஒரு பகுதி செயலிழப்பு, நரம்பியல் பாதிப்புகள் என ஏராளமான வியாதிகள் உருவாக்குகின்றன.

புகைபழக்கத்திற்கு காரணங்கள்

புகைபிடித்தல் பழக்கத்தினை துவங்கவும், தொடரவும் பல உளவியல் காரணங்கள் உள்ளன. வளர்பருவத்தில் இயற்கையாக ஏற்படும் புதிய ஆர்வங்களும் புதிய உணர்வுத் தேடல்களும், நண்பர்களின்  வற்புறுத்தலும், தன்னை பெரியவனாய் அடையாளப்படுத்தி கொள்ளவும், முன்மாதிரி மனிதர்கள், பெற்றோர்கள், உறவினர் , கதாநாயகன் போல மாறுவதற்கு முயற்சி செய்யவும் புகைப்பழக்கத்தை நாடுகின்றான்.

ஒரு பள்ளியின் ஆண்டு விழா. மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பிரபல ஓவியர்  ஒருவர் சிறப்பு விருந்தினராய் பங்கேற்றார். அவர் புன்னகை செய்யும் அழகிய முகம் ஒன்றை வரைந்து…. சில நிமிடங்களில் அதிலுள்ள சில கோடுகளை திருத்தினார். புன்னகை முகம் அழும் முகமாக  மாறிவிட்டது. மாணவர்களின் ஒரே ஒரு மாணவன் தவிர எல்லோரும் கரவொலி எழுப்பினர். ‘இந்த படம் வரைந்தது குறித்து உனக்கு எதும் மறுபட்ட கருத்து உள்ளதா தம்பி?’ என்று  மாணவனை ஓவியர் வினாவினார். அவன். ‘என் பெற்றோர் உங்களை விட திறமைசாலிகள் சார். ஒன்றிரண்டு கடும் சொற்களை சொல்லியே என் புன்னகை முகத்தை அழும் முகமாக்கி விடுவார்கள்’ என்று  உடைந்த குரலில் கூறியவுடன் அவனுக்கு பின் வரிசையில் இருந்த பெற்றோர் வெட்கி தலை குனிந்தனர். ஆம்! இம்மாணவனை போல பெற்றோரின் அன்பும் அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைக்காமல் சிறுவயதிலேயே புகைப்பழக்கத்தில் வீழ்கிறார்கள்.

பதின்பருவமும், புகைப்பழக்கமும்:  

பதின் பருவத்தினர் புகை, மது உபயோகிக்கும் நிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. சிலர் இப்பழக்கத்த இடையிலேயே நிறுத்தி விடுகின்றனர். சிலர் இடைவிடாமல் புகைபழக்கத்தினை வலிமையான பிடியில் சிக்கி விடுக்கின்றனர். இவர்களால் அருகிலுள்ள மற்றவர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இப்படி புகையின் பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களை [SECOND HAND SMOKERS] என்கின்றனர்.

முன்று வித புகைபழக்க அடிமை தனம்:

புகைபழக்க அடிமைத்தனத்தை மூன்று கோணங்களில் காணலாம். (1) உடல்ரீதியான அடிமையாகி விடுதல், உடல் சுறுசுறுப்புக்கும், தொழிலில் ஈடுபடவும், இரவு விழித்திருக்கவும் புகைப்பார்கள். (2) பழக்கத்தின்  காரணமாக அடிமைதனம் – தினசரி காலை தூங்கி விழித்தவுடன், கழிப்பறை செல்லும்போது, டீ, காபி, குளித்தவுடன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித நேரங்களில் புகையை நீடிப்பார்கள். மகிழ்ச்சியோ, கவலையோ எந்தவித உணர்வு எழுச்சிகளின் போதும் புகைபிடிக்கத் தவற மாட்டர்கள்.

எப்படி புகை பழக்கத்தை நிறுத்துவது?:

புகைப்பழக்கத்தை உடனடியாக நினைத்தவுடன் நிறுத்திவிடுவது சுலபமான செயல் அல்ல. அதே சமயம் நிறுத்துவது அசாத்தியமான செயலுமல்ல. புகைபழக்கத்தை விட்டு வெளியேற முதலில் தீர்மானம் ஆழ்மனதில் ஏற்படவேண்டும். உடல், மன தேவைகளுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி, அதிக திரவ உணவுகள், பழச்சாறுகள், புதிய ஈடுபாடுகள் அவசியம்.

நிறுத்திய பின் ஏற்படும் உடல், மன பின் விளைவுகள் மாற்றங்கள்:

நிக்கோடின் போதைக்கு நாள் முழுவதும் குருதியில் நிரம்பி வழிந்த  நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது இரண்டு வாரங்கள் சில அசெளகரியங்கள் எற்படும். அவை நிரந்தரமான நீடித்த பிரச்னைகள் அல்ல- முற்றிலும் தற்காலிகமானவை.  இச்சந்தர்ப்பங்களில் நோயாளி நலத்தில் அக்கறை கொண்ட நண்பர்கள், உறவினர், மருத்துவர்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும். புகைபிடித்தலை நிறுத்திய பின், ஒரே நாளில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே பின் விளைவு அறிகுறிகள் தெரிய துவங்கும். தூக்கம் பாதிப்பு, எரிச்சல், கோபம், மனமுடைதல், பதட்டம், அமைதி குலைதல், முழுகவனம் செலுத்த இயலா நிலை இந்த அறிகுறிகள் அனைத்தும்  2 முதல் 6 வாரங்களில் குறையும். மறையும்.

புகைபிடித்தலை நிறுத்திய பின்னர் நிகழும் நல்ல மாற்றங்கள்:

புகைபிடித்தலை நிறுத்திய 20 நிமிடங்களில் ரத்த அழுத்தமும், நாடி துடிப்பும் இயல்புக்கு வருகிறது. 8 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு பாதி குறைகிறது. 24 மணி  நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு உடலை விட்டு நீங்கி விடுகிறது. அதனை தொடர்ந்து  சுவை, மணம், உணரும் திறன், அதிகரிக்கிறது. 3 நாளில் சுவாச குழாய்கள் சீரடைந்து  சுவாசம் எளிதாகிறது. 3 முதல் 9 மாதங்களுக்கு இருமல், மூச்சடைப்பு, சுவாச கோளாறுகள் ஆகியன குறைந்து விடுகின்றன. 5 ஆண்டுகளில் இருதயத் தாக்குதல் அபாயம் குறைகிறது. 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் அபாயம் குறைகிறது. (ஆண்டு தோறும் புகையிலை தொடர்பான நோய்களால் ஏற்படும் நுரையீரல் புற்று நோயால் மில்லியன் கணக்கில் மரணமடைகின்றனர் என்பது சிந்திக்கத்தக்கது).

எனவே புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் முலம் உடனடியாக நற்பலன் கிட்ட ஆரம்பிக்கின்றன. ‘மனம் ஒர் வலிமையான வேலைக்காரன்; ஆனால் மோசமான எஜமான்’ என்பர்கள். புகைபிடிப்பவர்கள் தம் மனதை எப்பாடு பட்டேனும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கொடூரமான ஆபத்துகளுக்கு இரையாக கூடாது.

புகைபிடிப்பதை வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிட முடியாது. அது மீளமுடியாத போதைப்பழக்கம். அதனை நிக்கோடின் போதையடிமை நோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றன.

புகைப்பழக்கத்திலிருந்து மீள உதவும் ஹோமியோபதி மருத்துகள்:

கலாடியம் – புகைப்பழக்க அடிமைதனத்திலிருந்து விடுபட உதவும் முக்கிய மருந்து. புகைப்பவர்களுக்கு ஏற்படும் தலைவலி, இருதய பிரச்சனை, சுவாசக் கோளாறுகள் குறிப்பாக ஆஸ்துமா, மனநிலை மாறுபாடுகள் போன்ற குறிகளுக்கு தீர்வு தரும்.

பிளாண்டகோ – புகையிலை மோகத்தை மாற்றி வெறுப்பை ஏற்படுத்தும் ஆற்றலுள்ள மருந்து. புகைப்பழக்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தும். புகையிலை அடிமைத்தனத்தால் ஏற்பட்ட மனச்சோர்வையும் தூக்கமின்மையையும் விரட்டி நிவாரணமளிக்கும்.

நிக்கோடினம் – புகையிலையிலுள்ள நிக்கோடின் நஞ்சினை வீரியப்படுத்தி தயார் செய்யப்பட்ட மருத்து. உடலிலுள்ள நிக்கோடின் நஞ்சினை முழுமையாக சுத்திகரிக்கவும் புகையிலை மீதான ஆர்வத்தை கட்டுபடுத்தவும் உதவும்.

டபாகம் – புகையிலையை வீரியப்படுத்திய மருந்து. புகையிலை பொருள்கள் மீதான ஆர்வத்தை குறைக்கவும், புகையிலை பொருள்களால் எற்பட்ட குமட்டல், வாந்தி ,அஜீரணக் கோளாறு, மனச்சோர்வு, தலைசுற்று போன்ற குறிகளையும் குணப்படுத்தும்.

லொபீலியா – புகைப்பழக்க அடிமைதனம் இருத்த போதிலும், புகையிலையின் வாசனை ஒத்து கொள்ளாது. புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களின் வாயு கோளாறு, வயிற்றுவலி, மூச்சுத்திணறல், போன்ற பிரச்சனைகளையும் நலமாக்கும்.

டாப்னே இண்டிகா – புகைப்பதில் தீவிர நாட்டமும், புகைப்பதால்  தூக்கமின்மை பிரச்சனையும் இருப்பவர்களுக்கு ஏற்றது.

ஆர்ஸ்.ஆல்பம் – புகைப்பழக்கத்தின் பின் விளைவுகளுக்கு ஏற்றது.

பாஸ்பரஸ் & லைகோபோடியம் – புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாலியல்     பலவீனங்கள், ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு நம்பகமான நிவாரணிகள்.

Dr.S.வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்.

செல்;94431 45700  

Mail : alltmed@gmail.com

                            

<!–

–>