புதர் வேடமிட்டு சகோதரியின் திருமண புரப்போஸல் தருணத்தை கேமிராவில் சிறைபிடித்த தங்கை! 

bush_wedding_proposal

ஆணோ, பெண்ணோ ஒருவருக்கொருவர் திருமணத்திற்காக தங்களுக்குள் கோரிக் கொள்ளும் (அட அதாங்க புரப்போஸ் பண்றதுன்னு இந்தக் காலத்தில் சிம்பிளா சொல்லிக்கிறாங்களே அதே தான்…) அது மாதிரியான திருமண கோரிக்கைகள் அவர்களுடைய வாழ்வில் என்றென்றைக்குமாக மறக்கமுடியாதவையாக அமைந்து விடுவதுண்டு. ஆனால் அதன் தன்னியல்பான திடீர் சர்ப்பிரைஸ் தன்மையை பெரும்பாலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் ஆவணப்படுத்துவது கடினம். இருப்பினும், ஒரு பெண் தனது சகோதரியின் திருமண புரபோஸல் தருணத்தை மிகச் சரியாக புகைப்படங்கள் எடுப்பதற்காக தன்னை கண்ணுக்குத் தெரியாதவளாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தாள்.

அதாவது அக்கா, தன் வருங்காலக் கணவரிடம் திருமணத்திற்காகப் புரப்போஸ் செய்யும் போது அவளது முகத்தில் தெரியும் வெட்கம், திடீர் பரவசம், குதூகலம் இதையெல்லாம் மிகத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டி தங்கை தன்னை ஒரு புதர் போல ஜோடித்து அவர்களுக்கு அருகில் இருந்த புதரொன்றில் கேமிராவுடன் மறைந்து கொண்டாள். தங்கை இருப்பதை உணராத அக்காவும் அவரது வருங்காலக் கணவரும் தங்களது திருமணத்திற்காக ஒருவருக்கொருவர் புரப்போஸ் செய்து கொள்ளும் அற்புதக் கணத்தை நிகழ்த்தினர். அதை அப்படியே காட்சிப் படுத்திய தங்கை அப்படியே ட்விட்டரில் பகிர்ந்தார். மேலை நாடுகளைப் பொருத்தவரை எல்லா திருமண புரப்போஸல்களும் சுபமாகத் திருமணத்தில் முடிவதில்லை. ஆனால், தங்கை இத்தனை சிரத்தையாகப் படம் பிடித்த இந்த புரப்போஸல் அப்படியே அந்த வார இறுதியிலேயே திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்தது என்ற தகவலையும் அந்த சமத்காரத் தங்கை தனது ட்விட்டர் பகிர்வில் பகிர்ந்துள்ளார்.

மேர்க்கெல் எனும் பெயருடைய அந்தத் தங்கை பசுமையான புதர் போல மாறுவேடமிட்டுக் கொண்டு தன் சகோதரியின் திருமண கோரிக்கையைப் படம் பிடித்த ஆச்சர்யமான காட்சியை ஷாட் பை ஷாட் தனது ட்விட்டர் பதிவுகளில் விளக்கிய பதிவிற்கு ஏராளமான லைக்குகள் கிடைத்து அது நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

அழகிய தருணத்தைக் காட்சிப் படுத்த புதர் போல வேடமிட்ட தங்கை..

மேர்க்கெல் தன் சகோதரி குறித்துக் குறிப்பிடும் போது, அவளுக்கும் எனக்கும் பெரிதாக வயது வித்யாசமில்லை, நடுவில் ஒரு வருட இடைவெளி தான். ஆனால், எங்கள் வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கிறது. என் சகோதரியின் வெட்டிங் புரப்போஸல் குறித்து நான் வெளியிட்ட பகிர்வுக்கு பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதில், சிலருடைய கருத்தானது என் சகோதரியின் இனிமையான முகபாவனைகள் மற்றும் சைகைகளுக்காகப் பாராட்டுத் தெரிவித்திருந்தனர். சிலர் அந்தத் தருணத்தின் அழகியலுக்காகவும் பெருங்களிப்பூட்டிய அந்த பரவச நிமிடங்களை அப்படியே படம் பிடித்தமைக்காகவும் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

<!–

–>