புதையல் 24

(விசையுறு பந்தினைப் போலே மனம் விரும்பியபடி செல்லும் உடலைப் பெறும் பயிற்சி முறைகளைக் கற்றுக்கொடுக்கும் அறிவொளி மேலும் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் சந்தோஷ், கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகிய மூவரும்.)

கார்த்திக்: சார் உண்மையான பயிற்சி கற்பனையான பயிற்சி இதெல்லாம் நடைமுறையில் யாராவது வழக்கமா பயன்படுத்துறாங்களா சார்?

அறிவொளி:  ஆமா கார்த்திக், ஒலிம்பிக் போட்டிகளில் ஜெயிக்குறவங்க  இரண்டு முறை ஜெயிக்கிறாங்க. ஒன்னு மனதளவில், இன்னொருவாட்டி நிஜமா ஜெயிக்குறாங்க. தடகள வீரர்கள் அவங்க கடக்க வேண்டிய தூரத்தை மனதில் நினைத்து, குறிப்பிட்ட நேரத்தில் தான் அதை ஓடிக் கடந்து  வெற்றி பெறுவதாக கற்பனை செய்துக்குவாங்க. தான் இன்னும் அதிகமா பயிற்சி எடுக்கணும்னு நினைக்கும்போது உலகத்துலயே சிறந்த குரு ஒருத்தர் தன் தவறுகளைத்  திருத்தி தனக்கு நல்லா   சொல்லிக்  கொடுப்பது போலவும்  தான் ஒலிம்பிக்கில்  ஜெயிப்பது போலவும் மனக்காட்சிகளில் பார்ப்பாங்க. இந்த மனக்காட்சி அவங்களுக்கு அபரிமிதமான உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இப்படி மனத்தளவில் ஜெயிப்பவங்க மட்டும்தான் உண்மையிலும் ஜெயிப்பாங்க.

விஷ்ணு:  நாம கூட நமக்குத் தேவையான விஷயத்துல இதே மாதிரி பயிற்சி எடுக்கலாம் இல்லையா சார்?

அறிவொளி: ஆமா விஷ்ணு, நீ எதைக் கத்துக்கணும்னு நினைக்குறியோ, அதைக் கற்பனை ஆசிரியரிடம் கற்பது போல மனக்காட்சியில் பார்த்த  பிறகு, அதையே உண்மையா பயிற்சி செய்யணும். பத்து நிமிட கற்பனைப் பயிற்சி பத்து நிமிட உண்மை பயிற்சி என தொடர்ந்து கற்பனைக்கும் உண்மைக்கும் எந்த வித்தியாசமும் இல்லாதவரை இந்தப் பயிற்சியைத் தொடரலாம்.

சந்தோஷ்: மேடையில பேச பயப்படுறவங்க ஒரு ஐயாயிரம் பேர் இருக்க பெருங்கூட்டத்துக்கு முன்னாடி தான் பேசிக் கைத்தட்டல் வாங்குவது போலவும் எல்லாரும் தன்னைப் பாராட்டுவது போலவும் கற்பனை செய்துகொண்டு ஒத்திகை பார்த்து தயார் படுத்திக்கலாம்.

டெஸ்ட், எக்ஸாம்னாலே சில பசங்களுக்கு  ஜுரம் வந்துடும். அவங்க தான் அழகான கையெழுத்தோட தைரியமா பரிட்சை எழுத்துவதாகவும் நல்ல மார்க் எடுத்த தன்னை எல்லோரும் பாராட்டுவதாகவும் கற்பனை செய்துக்கணும். அதுவே அவங்களுக்கு நல்லாப் படிக்கணும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கும்.

இதே போல வேலைக்கான நேர்முகத்  தேர்வுக்குத் தன்னைத் தயாரிப்பவங்க அந்தச் சூழலை மனத்தில் கற்பனை செய்துகிட்டு  என்னென்ன கேள்வி கேட்பாங்க, அதுக்குத் தான் எப்படி பதில் சொல்லலாம்னு  மனதில் முன் தயாரிப்பு செய்துகிட்டா நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கார்த்திக்:  சார் நீங்க ரெண்டுப் பேரும் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லித் தரீங்க. இருந்தாலும் எனக்குள்ள நிறைய முட்டுக்கட்டைங்க இருக்குதே. அதையெல்லாம் தாண்டி என்னால வாழ்க்கையில முன்னேற முடியுமான்னு சந்தேகமா இருக்கு. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்களேன். 

அறிவொளி:  தடைகளைக் கண்டு பயந்து போகாதே  கார்த்திக். எல்லாமே சுலபமா கிடைச்சுட்டா  வாழ்க்கை ரொம்ப போரடிச்சுடும். பறக்குற பறவைக்கு காற்று ஒரு தடை தான். ஆனா காற்றே இல்லைன்னா பறவையால பறக்க முடியுமா?

கார்த்திக்:  அட, இது நல்லாயிருக்கே!

அறிவொளி: அதுதான் உண்மையும் கூட. தடைகளைத் தாண்டி வரும் அனுபவத்தில் தான் நம் வெற்றி தொடங்குகிறது.

கார்த்திக், விஷ்ணு ரெண்டு பேரும் கண்ணை மூடிக்கோங்க. எதெல்லாம் உங்களுக்கு முட்டுக்கட்டையா இருக்குன்னு நினைக்குறீங்களோ  அதையெல்லாம் மனசுக்குள்ள பட்டியல் போடுங்க.

(இருவரும் அமைதியாகப் பட்டியலிட ஆரம்பித்தனர். அதிக நேரம் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, டிவி பார்ப்பது, தவறான பழக்கங்களுடைய நண்பர்களால் ஆபாச புத்தகங்கள் படித்தல், செல் போனில் ஆபாச படங்கள் பார்த்தலால் படிப்பில் கவனமின்மை, காலையில் சீக்கிரம் எழ மனமில்லாமை என பட்டியல் நீண்டு கொண்டே போனது.)

சரி, உங்கப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொன்னையும் ஒரு கல்லா நினைச்சுக்கோங்க. ஒன்னோட இன்னொன்னை சேர்க்கும் போது அது அளவில் பெரிய கல்லா மாறுது. எல்லாம் இப்ப மொத்தமா சேர்த்து ஒரு பெரிய பாறாங்கல்லா நீங்கப் போகவேண்டியப் பாதையை மறிச்சுக்கிட்டு  உங்க முன்னாடி இருக்கு. இதை எப்படித் தாண்டிப் போறதுன்னு நீங்க யோசிக்கும்போது உங்க கையில ஒரு பெரிய சுத்தியல்  கிடைக்குது. அதை வெச்சு கல்லை உடைச்சிட முடியும்னு நம்பிக்கை வருது. உங்க சக்தி மொத்தத்தையும் திரட்டி சுத்தியலைத் தூக்கி ஓங்கி ஒரு அடி போடுறீங்க. பாறாங்கல் தூள் தூளா உடைஞ்சுப் போயிடுச்சு. இனி நீங்கப் போக வேண்டியப் பாதையில எந்தத் தடை வந்தாலும் இதே மாதிரி உடைச்சு எறிந்திட முடியும்னு இப்ப நம்பிக்கை வந்துடுச்சு. உங்கக் குறிக்கோளை நிச்சயமா உங்களால அடைய முடியும். மூன்று முறை ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு கண்ணை மெதுவாத் திறங்க.

(அறிவொளி சொல்லச் சொல்ல அதற்கேற்ற உணர்ச்சிகளை  கார்த்திக் விஷ்ணு இருவரின் முகத்திலும் உடலிலும் காண முடிந்தது. கண்ணைத் திறக்கும் போது இருவரின் முகத்திலும் நம்பிக்கை ஒளி பிரகாசமாய்த் தெரிந்தது.)

கார்த்திக்:  சார் நிஜம்மாவே  இப்ப எனக்கு என் இலட்சியத்தை அடைய முடியும்னு நம்பிக்கை வந்துடுச்சு சார். 

விஷ்ணு:  எனக்கும் தான் சார்.

அறிவொளி:  ரொம்ப சந்தோசம்ப்பா. இந்தக் கற்பனையோட நிறுத்திடாம நிஜத்திலும் கடிவாளம் கட்டிய குதிரை போல கவனத்தை திசை திருப்பாம குறிக்கோளை மட்டும் கவனத்தில் வெச்சு செயல்பட்டா எந்தத் தடை வந்தாலும் தகர்த்தெறிஞ்சு வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

இது உங்க மூளையை உங்களுக்கு ஏத்தபடி ப்ரோக்ராம் பண்ற பயிற்சி. இதோடு மூச்சை உள்வாங்கி, மெதுவாக வெளிவிடும் கணக்கான திட்டமிட்ட மூச்சுப் பயிற்சியான பிராணாயாமத்தையும் தினமும் பயிற்சி செய்தா உடல் ஆரோக்கியமா இருக்கும்.

விஷ்ணு:  அதை எங்களுக்கும் சொல்லிக் குடுங்க சார்.

அறிவொளி:  சரி சொல்லிக் கொடுக்குறேன், அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. நம்ம உடல் நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்’ என்பார்கள். நம்முள்  இந்த பஞ்ச பூதங்களின் விகிதாச்சாரம் சரியானபடி இருந்தா தான் நம் உடலும் ஆரோக்கியமா இருக்கும். அதற்கு இயற்கையோட இணைந்த வாழ்க்கை அவசியம். இப்ப நான் சொல்வதையெல்லாம் மனதில் உள்வாங்கி உடலின் ஒவ்வொரு செல்களிலும் உணர்வது ரொம்ப முக்கியம். புரியுதா?

விஷ்ணு:  புரியுது சார்.

அறிவொளி:  சரி, கண்ணை மூடி உடல் தளர்வான நிலைல உட்காருங்க.

(கார்த்திக், விஷ்ணு, சந்தோஷ் மூவரும் தியான நிலையில் அமர்ந்தனர்.){pagination-pagination}

வாழ்வை வளமாக்கும் மூச்சுப் பயிற்சி : 

அறிவொளி:  வலது கை கட்டைவிரலால் வலப்புற மூக்கை மூடி இடப்புற மூக்கு வழியாக மூச்சை மூன்று எண்ணிக்கை வரை உள்ளிழுத்து பின் ஆள்காட்டி விரலால் இடப்புற மூக்கை மூடி ஆறு எண்ணிக்கை வரை வலப்புற மூக்கு வழியாக நிதானமாக மூச்சை வெளி விடவும். மீண்டும் வலப்புற மூக்கு வழி மூன்று எண்ணிக்கை மூச்சை  உள்ளிழுத்து இடப்புற மூக்கு வழி  ஆறு எண்ணிக்கை வரை நிதானமா வெளிவிடனும். இதைத் தொடர்ந்து செய்து கொண்டே நம் காலின் கீழ் உள்ள நிலப்பரப்பை தியானிப்போம்.

நிலம்:

மூச்சினை உள்வாங்கும் போது நிலத்தின் உயிர் கொடுக்கும், வளமாக்கும் சக்தியினை சேர்த்து உள்வாங்கிப் பின் மூச்சினை வெளிவிடும் போது நிலத்தினுள் ஐக்கியமாவதாக உணர்வோம். எதையும் தாங்கும் பொறுமையும், ‘வாழு வாழ விடு’ என்ற நிலத்தின் உன்னத குணமும் நம்முள் குடிகொண்டு விட்டதை  உணர்வோம். இந்த வினாடி முதல் மிகப் பெரிய சக்தி ஒன்று நம் வாழ்வின் குறிக்கோளை நோக்கி நம்மை வழிநடத்துவதை உணர்வோம்.

(தியானிக்க பத்து வினாடிகள் இடைவெளி விட்டு மீண்டும் அறிவொளி பேசத்  தொடங்கினார்.)

நீர்:

மூக்கின் வழி மூச்சுக் காற்றை உள்வாங்கி மெல்லத் திறந்த உதடுகள் வழியே காற்றை வெளிவிடுவோம். உள்வாங்கும் மூச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை  நீரின் உயிரளிக்கும் ஜீவஆற்றலைப் பாய்ச்சுவதாக உணர்வோம். இந்த வழிந்தோடும் குளிர்விக்கும் ஆற்றலுடன் சமாதானம், பிறரை அரவணைக்கும் பண்போடு  நடந்து கொண்டிருக்கும் இலட்சியப் பாதையில் நடப்போம்.

நெருப்பு:

ஆழ்ந்த மூச்சினை வாய் வழியாக உள்வாங்கி மூக்கின் வழியாக வெளிவிடுவோம். உள்ளிழுக்கும் பிராண வாயுவால் வயிற்றில் எரியும் நெருப்பு அதிகத் தீப்பிழம்புகளுடன் எரிவதாகவும், நம் மன அழுக்குகளெல்லாம் அதில் எரிந்து முற்றிலும் நாம் தூய்மையாகி விட்டதாகவும் உணர்வோம். மூச்சினை வெளிவிடும் போது அந்நெருப்பின் சக்தி நம் உடலின் எல்லா பாகங்களிலிருந்தும் எல்லாத் திசைகளிலிருந்தும் வெளிப்படுவதாக உணர்வோம். இவ்வொளி வெள்ளம் நம் வாழ்வின் இருளகற்றி நாம் செல்ல வேண்டியப் பாதையில் மேலும் நம்மை வழி நடத்துவதாக உணர்வோம்.

காற்று:

வாயின் வழியாக தூய காற்றினை  உள்வாங்கி வெளிவிடுவோம். மூச்சினை வெளிவிடும் போது நம் மனம், எண்ணம், உணர்ச்சி யாவற்றையும் காற்றில் விட்டு நிர்மலமான மனநிலையில் சில வினாடிகள் தாமதித்து பின் மீண்டும் மூச்சினை மூக்கின் வழி உள்வாங்குவோம். சிறிது நேரம் இதைத் தொடர்ந்து செய்வோம்.

ஆகாயம்:

மூக்கின் வழி மூச்சை சில வினாடிகள்  உள்வாங்கி வெளிவிட்டு  கவனம் முழுவதையும் நம் தலையிலிருந்து பத்து அங்குல உயரத்தில் நிறுத்துவோம். இது நாம் பறப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். நம் குறுகிய மனப்பான்மையை காற்றில் கரைய விட்டு வானம் போன்ற பரந்த மனப்பான்மையைப் பெறுவோம். இந்நிலையில் நான், எனது என்ற சுயநலம் ஒழிந்து நாம் நமது என்ற பொதுநலம் மேலோங்கும். 

புடமிடப்பட்ட தங்கத்தைப் போன்ற  நம் தூய எண்ணங்களே நம் வாழ்வின் இலக்கினில் இனி நம்மைக் கொண்டு சேர்த்துவிடும். தியான வாழ்வின் மூலம் தனிமனித வெற்றியோடு சமூக முன்னேற்றம், மானுடநேயம், உயிர்க்குல அன்பு தழைத்தோங்கிடும். இவற்றையெல்லாம்  நடைமுறைப் படுத்த மீண்டும் கண்களை  மெல்லத் திறந்து நம் இயல்பு நிலைக்குத் திரும்புவோம். 

(அறிவொளியின் வசீகர குரலுக்குக் கட்டுப்பட்டு மெல்லக் கண்களைத் திறந்தனர் மூவரும். கண்களில் ஒளியுடன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரவச நிலையில் இருக்கும் இவர்களது அனுபவத்தைக் கேட்டுத்  தொல்லை செய்யாமல் இந்நிலை அடைய நாமும் முயன்று பார்ப்போம். அடுத்த வாரம் சந்திப்போமா!)

தொடரும்…

priyasahi20673@gmail.com   

<!–

–>