புதையல் 25

இசையென்னும் அருமருந்து!

(உடலியக்கத் திறனை மேம்படுத்தும் பயிற்சிகளால் உற்சாகமான சந்தோஷ், விஷ்ணு, கார்த்திக் மூவரும் அறிவொளி மேலும் என்ன செய்ய போகிறார் எனக் கேட்க ஆர்வமாய்க் காத்திருந்தனர்)

அறிவொளி: மனிதனோட மனம், உடல் செயல்பாடுகளுக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தெரியுமா ?

சந்தோஷ்: தெரியும் சார் கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் தாலாட்டுல தொடங்கி ஒப்பாரியில் முடியிறது தானே மனுஷனோட வாழ்க்கை. ஆப்ரிக்க பழங்குடியினரோட தாள வாத்திய இசை முதல் இசைஞானியோட சிம்பொனி வரை எல்லாமே இசையோட வெவ்வேறு பரிமாணங்கள் தானே.

அறிவொளி : ஆமா, பாட்டு வகுப்புக்கு போய் ஸ ரி க ம ப த நி ஸா  காத்துக்கிட்டா தான் இசை பற்றிய அடிப்படை அறிவே மனிதனுக்கு கிடைக்கும்னு இல்லை.ஆராய்ச்சிகள் சொல்றதைப் பார்த்தா தாயின் கருவில் இருக்கும் போதே குழந்தை தன் தாயின் பேச்சு, சிரிப்பு, இதயத்துடிப்பொலி, இசை, சுற்றி  நிகழும் சம்பவங்களின் அதிர்வுகளுக்கேற்ப சில அசைவுகளைக் காட்டுகிறது. அழும் குழந்தையைத் தாய் அணைத்துக் கொள்ளும்போது தாயின் இதயத் துடிப்பொலியே இதமானத் தாலாட்டுப் பாடலாகக் குழந்தையை உறங்கச் செய்கிறது. மாறாகத் தாயின் அழுகையும், அதிக இரைச்சலான இசையின் அதிர்வுகளும் கருக்குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

சந்தோஷ் : ஆமா, தமிழர் கலாச்சாரத்தில் இசையென்பது ஒரு அங்கமாவேத்தான் இருக்கு.

கார்த்திக் : எப்படி சொல்றீங்க சார் ? எதாவது உதாரணம் சொல்லுங்களேன்.

சந்தோஷ் : ‘மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே‘ என்று ஒரு ஏற்றக்காரர் பாடிய பாட்டு கவிச் சக்கரவர்த்தி கம்பரையே வியக்க வைச்சுது . அடுத்த வரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள் கம்பர் காத்திருந்து கவனித்ததில், ‘தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே ‘ ! என்று முடிந்த அந்த ஏற்றப் பாட்டு அவரை சிந்திக்கச் செய்தது. இப்படி உழைக்கும் வர்க்கத்தினர் களைப்பு தெரியாமலிருக்க நாற்று நட, களை பறிக்க, ஏற்றம் இறைக்க, அறுவடை செய்ய, படகு ஓட்ட என்று ஒவ்வொன்றுக்கும் பாட்டுக்கட்டி பாடுவார்கள். இசை என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்த ஒன்று.

விஷ்ணு : ஆமா சார் எங்கம்மா காலைல எழுந்ததும் தினமும் சாமி பாட்டுப் பாடிகிட்டே தான் வேலை செய்வாங்க, எனக்குமே எவ்ளோ களைப்பா இருந்தாலும் பிடிச்ச பாட்டைக் கேட்டதும் களைப்பெல்லாம் போய் புத்துணர்ச்சி வந்துடும்.

அறிவொளி : இசையால நோய்களைக் கூட குணப்படுத்த முடியும்னு நிரூபிச்சிருக்காங்க தெரியுமா?

கார்த்திக் : உண்மையாவா சார்?

அறிவொளி : ஆமா, எட்டு வித அறிவுத் திறனில் இசையறிவு மனித வாழ்வில் அதிகமா ஆதிக்கம் செய்யுது.

கார்த்திக் :  மூளை தானே சார் மனுஷனோட எல்லா செயல்பாட்டையும் கட்டுப்படுத்துது. இசையால நோயைக் குணப்படுத்த முடியும்னா அப்ப மூளையின் செயல்பாட்டுக்கும் இசைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கணும் இல்லையா?

அறிவொளி :  சரியா சொன்ன கார்த்திக், நம்ம தினசரி வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஏத்த மாதிரி மூளை பலவிதமான மின் அதிர்வலைகளை உற்பத்தி செய்யுது. ஒவ்வொரு சூழ்நிலையிலேயும் நாம எப்படி நடந்துக்கணும் என்பதையும் இந்த அலைகளே தீர்மானிக்கின்றன. இந்த அலைகளோட அதிர்வெண்ணுக்கு ஏற்ப நம்ம மூளையோட செயல்நிலையை பீட்டா நிலை, ஆல்பா நிலை, தீட்டா நிலை, டெல்டா நிலை என நாலு நிலைகளாகப் பிரிக்கலாம். 

விஷ்ணு : இது நாலுத்துக்கும் என்ன சார் வித்தியாசம்?

அறிவொளி : சொல்றேம்பா பீட்டா நிலையில் மூளை அலைகளோட அதிர்வெண் வினாடிக்கு பதினாறிலிருந்து நாற்பது வரைக்கும் இருக்கும். நாம சாதாரணமா இருக்கும் போது பதினாறிலிருந்து இருபது வரைக்கும் இருக்கும்.

ஒரு வினாடிக்கு எத்தனை அலைகள் ஏற்படுது என்பதுதான் பொதுவா அதிர்வெண் என சொல்லுவோம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருபத்திலிருந்து நாற்பது வரைக்கும் இருக்கும். இதனால தான் ரத்தக் கொதிப்பு . இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்களை மருத்துவர்கள் கோபத்தை குறைக்கணும், உணர்ச்சி வசப்படாதீங்கன்னு சொல்றாங்க. திருவள்ளுவரே தன் திருக்குறளில் சினத்தை சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி எனச் சொல்லியிருக்கார் இல்லையா !

கார்த்திக் : ஆமா சார். ஒரு சிலர் எதுக்கெடுத்தாலும் டென்ஷனாகிடுவாங்க கண்ணெல்லாம் சிவந்து மூச்சு வாங்கி, சத்தமா பேசி மத்தவங்களையும் டென்ஷனாக்கிடுவாங்க. அந்த நேரம் அவங்க முகத்தைப் பார்க்கவே பயமா இருக்கும்.

அறிவொளி : சாதாரணமா நாம எல்லோருமே எல்லா வேலைகளையும் பீட்டா நிலையிலிருந்து தான் செய்யுறோம். அவசரகதியில் இயந்திரத்தனமா வாழாம மூளையின் அதிர்வெண்ணைக் குறைத்து நிதானமா செயல்பட்டா நீண்ட நாள் நோயற்ற வாழ்வு வாழலாம்.

கார்த்திக் : அப்ப ஆல்பா நிலைனா என்ன சார் ?

அறிவொளி : ஆல்பா நிலையில் மூளை அலைகளோட அதிர்வெண் வினாடிக்கு பதினாலிலிருந்து எட்டு வரைக்கும் இருக்கும். கவலைகளை மறந்து நாம உடலும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கும் போது நம்ம மூளை ஆல்பா நிலையில் இருக்கும். இந்த நிலையில் நம்ம உள்ளுணர்வின் இயக்கம் மிகச் சிறந்து இருக்கும். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் சிலர் தரிசனக் காட்சிகளைக் காண்பது ஆல்பா நிலையில் தான்.

விஷ்ணு : சென்னையில இருக்க எங்க மாமா போன தடவை ஊருக்கு வந்தப்போ எனக்கு படிப்புல முழுசா கவனம் செலுத்திப் படிக்க முடியலைன்னு சொன்னேன். அதுக்கு அவர் வர்ற மே மாச லீவுல ஆல்பா தியான வகுப்புல சேர்த்து விடுறேன்னு சொன்னார். அப்போ அவர் என்ன சொல்லறாருன்னு எனக்கு புரியல. இப்போ தான் புரியுது சார்.

சந்தோஷ் : ரொம்ப நல்ல விஷயம் விஷ்ணு. இது மாதிரியான நல்ல விஷயங்களை நல்லா கத்துக்கிட்டு தினமும் பயிற்சி செய்தா வாழ்நாள் முழுக்கவே பயன் கொடுக்கும்.

கார்த்திக் : ஆல்பா, பீட்டா முடிஞ்சுடுச்சு. அடுத்தது காமாவா சார் ?

அறிவொளி : ஆல்பா, பீட்டா, காமா எல்லாம் கதிரியக்கங்கள் கார்த்திக். இங்கே  அடுத்திருப்பது  தீட்டா நிலையும் டெல்டா நிலையும் தான்.

கார்த்திக் : தீட்டா நிலைன்னா என்ன சார் ?

அறிவொளி :  தீட்டா அலைகளின் அதிர்வெண் ஏழு முதல் நான்கு வரை இருக்கும். இது ஆழ்ந்த உறக்கத்துக்கு முந்தைய நிலை அல்லது பகல்கனவு காணும் நிலைன்னும் சொல்லலாம். அடுத்தது டெல்டா நிலை. இந்த அலையின் அதிர்வெண் மூன்று முதல் ஒன்று வரை இருக்கும். தியான நிலைகளில் இதை சமாதி நிலைன்னும் சொல்லலாம். ஆழ்ந்த உறக்க நிலையில் மூளையோட செயல்பாடு இந்த நிலையில் தான் சிறப்பா இருக்கும். நம் ஆழ்மனதில் பதிந்த நினைவுகள் அல்லது காட்சிகள் கனவுகளா வெளிப்படுவது இந்த நிலையில் தான்.

கார்த்திக் : இந்த மூளை அலைகளும் இசையறிவுக்கும் என்ன சார் சம்மந்தம் ?

அறிவொளி : மூளையைப் பத்திய இந்த ஆராய்ச்சிகளின் முக்கிய கண்டுபிடிப்பு என்னன்னா, ஒரு மனிதனால் இந்த மூளை அலைகளை எந்தச் சூழ்நிலையிலும் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சூழ்நிலையைத் தனக்கேற்றபடி சாதகமாக்கிக்கொண்டு சாதிக்க முடியும் என்பது தான். இதில் முக்கிய பங்கு வகிப்பது இசை. ஒரு இசை அனுபவமானது லட்சக்கணக்கான மூளை செல்களைத் (நியூரான்கள்) தூண்டி, உடல் தசைகளைத் தளர்த்தி, நாடித்துடிப்பை சீராக்கி, நீண்ட கால ஞாபக சக்திக்கு உதவுது. கேட்கும் திறனும், மனதை ஒருமுகப்படுத்தும் திறனும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதிகரிக்கும். எவ்வளவு அதிகமா நியூரான்கள் தூண்டப்படுதோ அவ்வளவு அதிகமா புரிந்து கொள்ளும் ஆற்றலும், கற்கும் திறனும் அதிகரிக்கும்.

கார்த்திக் : அப்ப என்ன மாதிரி மந்த புத்தி கொண்டவங்களும் இசையறிவை வளர்த்துக்கிட்டா புத்திசாலி ஆகிட முடியுமா சார் ?

சந்தோஷ் : நீ மந்த புத்தி கொண்டவன்னு யார் சொன்னது கார்த்திக்? மதிப்பெண்ணை வெச்சு புத்திசாலி முட்டாள்னு சொல்லும்  காலமெல்லாம் மலையேறிப் போச்சு இசையறிவை வளர்த்துக்கிட்டா உன்னோட கற்கும் ஆற்றல் இன்னும் அதிகமாகும். அப்படித்தானே சார்?

அறிவொளி : உண்மை தான் சந்தோஷ் ஆனா அதுக்கு சில பயிற்சிகள் அவசியம். இசையறிவானது ஒலி அதிர்வுகளை உணர்ந்து உட்கிரகிக்கும் ஆற்றலைப் பொறுத்தது. வெறும் சத்தத்தை கேட்பதைக் கொண்டு  நம்மைச் சுற்றி என்ன நடக்குது என்று ஊகித்துக் கூற முடியும் இல்லையா. கார்த்திக் கண்ணை மூடிக்கிட்டு நான் என்ன செய்யுறேன்னு கண்டு பிடி பார்க்கலாம்.

(கார்த்திக் கண்களை மூடிக் கொள்ள  அறிவொளி பேப்பரைக் கிழித்தல், மேசையை நகர்த்துதல், புத்தகத்தாளை திருப்புதல், குவளையிலிருந்து தம்பளரில் தண்ணீர் ஊற்றுதல் என்று பத்து வேலைகளைச்  செய்ய கார்த்திக் அதில் எட்டு வேலைகளை மிகச் சரியாக கண்டு பிடித்துவிட்டான் )

அறிவொளி :  வெரிகுட்  கார்த்திக் பத்துக்கு எட்டு சரியா கண்டு பிடிச்சுட்டியே! இதே மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்தாம வெறும் ஒலி எழுப்பிக் கோபம், எரிச்சல், ஆச்சரியம், மகிழ்ச்சி, சோகம், போன்ற உணர்வுகளை ஒருத்தர் வெளிப்படுத்த இன்னொருத்தர் கண்டுபிடிக்கணும். இந்த மாதிரி விளையாட்டுக்கள் மத்தவங்களோட மூச்சின் வேகம், பேசும் வார்த்தைகளின் அதிர்வலைகளைக் கொண்டு அவரது மனநிலை எப்படி உள்ளது, அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்னு உணர்ந்து அதுக்கேத்தபடி நடக்க உதவும். 

விஷ்ணு : அது சரி சார், இந்தப் பயிற்சியால மத்தவங்க உணர்ச்சிகளை அவங்க எந்த மனநிலையில இருக்காங்க என்பதை நாமத் தெரிஞ்சுக்க முடியும். ஆனா இசையறிவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

அறிவொளி : அதைத் தான் இப்ப சொல்ல வரேன். அதுக்குள்ளே அவசரப்படுறியே விஷ்ணு. இசையறிவு என்பது சினிமாவுல பின்னணி பாடுறதோ, கர்நாடக சங்கீத மேடைகள்ல கச்சேரி பண்றதோ, டிவியில பாட்டு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறதோ மட்டும் கிடையாது. இசையறிவுக்கு தேவையான ஒலி அதிர்வுகளை உற்று கவனித்தல், உட்கிரகித்தல் உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற திறன்கள் அன்றாட வாழ்க்கையில் கூடவே இருக்கும் மனிதர்களோட உறவை பலப்படுத்திக்கவும் ரொம்ப அவசியம், கூட இருப்பவங்களை மதிக்காமல் உறவை முறிச்சுக்கிட்டு கச்சேரி பண்ணி பணமும் புகழும் சம்பாதிச்சு என்ன புண்ணியம். அத்தகைய திறன் வளர்க்கும் பயிற்சிகளை பத்தி தான் நான் இப்ப சொல்லப் போறேன் சரியா ? 

விஷ்ணு : சரி சார், இப்ப புரிஞ்சிருச்சு.

அறிவொளி : இசையறிவில் மேம்பட உற்று நோக்கலும், இசை நம்மில் ஏற்படுத்தும் உணர்வுகளை ஆராய்வதும் ரொம்ப முக்கியம். கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி, நாட்டுப்புறப்பாடல், மேற்கத்திய இசை, கானாப்பாடல் என ஐந்து விதமான பாடல் தொகுப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு இசையையும் கேட்க ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு அவை என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்துகிறது என உற்று கவனிக்கணும். முடிஞ்சா உங்க நண்பரையும் அதே இசையை கேட்க வைத்து உங்க இரண்டு பேரோட உணர்வுகளும் ஒத்து போகுதா, வேறுபடுதான்னு பார்க்கணும். வேறுபடுதுன்னா அதுக்கு  என்ன காரணம்னு ஆராயணும். இந்த ஐந்து வித இசையிலும் எது  உங்க மனதை அமைதிப்படுத்தி ஓய்வு நிலைக்கு (பீட்டா நிலையிலிருந்து ஆல்பா நிலைக்கு) கொண்டு போகுதோ அதை தனியா எடுத்து வச்சுக்கோங்க. இதுக்கு அப்புறம் வரும் பயிற்சிகளுக்கு அது தேவைப்படும்.

(ஒவ்வொரு பாடல்களாகப் போட்டு அவர்களைக் கேட்டு குறிப்பெடுக்க வைத்தார் அறிவொளி. அதற்குள் நாமும் நம் மனதை எந்த இசை அமைதிப்படுத்துகிறது எனக் கண்டறிந்து அடுத்த வாரம் சந்திப்போமா)

– பிரியசகி 

priyasahi20673@gmail.com 

<!–

–>