பெங்களூரில் ஓலா, உபேர் வாகனச் சேவை முறைகேடுகளுக்குச் ’செக்’ வைத்த கர்நாடக போக்குவரத்துத் துறை!

ola,_uber

கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை பெங்களூரில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களின் வாகனசேவைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளது. அரசின் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து அந்நிறுவனங்கள் தங்களது வாகனங்களை இயக்கத் தொடங்கினால் அது சட்ட விரோதமாகக் கருதப்படும் என்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

தனியார் வாகனச் சேவை நிறுவனங்களில் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென  கர்நாடக அரசு இப்படி உத்தரவிட்டிருப்பது அந்நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நேற்று வெள்ளியன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கையானது ஓட்டுநர்களால் பாராட்டப்படலாம் என்றாலும் மேற்கண்ட சேவைகளைப்பயன்படுத்திப் பழகிய பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தைத் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்திலும் இதே போன்றதொரு பிரச்னையை ஓலா எதிர்கொண்டது. கடந்த மார்ச் 18 ம் தேதி, ஓலாவின் தாய் நிறுவனமான ஏ.என்.ஐ டெக்னாலஜிஸுக்கு பிராந்திய போக்குவரத்துத் துறை கடிதம் ஒன்றை அனுப்பியது, அதில் பெங்களூரு நகரத்தில் அதன் பயன்பாட்டு அடிப்படையிலான வாகனச் சேவைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது.

போக்குவரத்துத் துறையின் இரண்டு பக்க கடிதத்தில் மொபைல் செயலி முறையில் இயக்கப்படும் ஓலா மற்றும் உபேர் வாகன சேவைகளில் ‘போலி உரிமங்களைப்’ பெற்று இயங்கும் பைக்-டாக்ஸி சேவைகள் பல சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவை நிரூபணமாகும் பட்சத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கண்ட நிறுவனங்களின் வாகன உரிமங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு அவற்றின் அனைத்து சேவைகளும் தடை செய்யப்படும் என்றும் பிராந்திய போக்குவரத்துத் துறை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் நிறுவனம் தற்போது அளித்து வரும் பயன்பாட்டு அடிப்படையிலான சேவைகள் அனைத்தும் கூட கர்நாடக மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் கூட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

தற்போதைய சட்டத்தின் கீழ் ஓலா மற்றும் உபேர் வழங்கிய கார் பூலிங் விருப்பம் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டிருந்த போதும் கூட மார்ச் மாதத்தில் தான் விதித்திருந்த தடையை அரசு வாபஸ் பெற்றது.

ஆயினும் இப்போது மீண்டும் கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை மேற்கண்ட நிறுவனங்களின் வாகன சேவைகளுக்கு பெங்களூரு நகருக்குள் தடை விதித்திருப்பதை ஒட்டிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஓலா நிர்வாகம் தெரிவித்திருப்பது என்னவென்றால்… இந்த பிரச்னை குறித்து தாங்கள் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும், தங்களது அதிகாரிகளுடன் கலந்து பேசி அரசு போக்குவரத்துத் துறையின் அனைத்து கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் சமரசமான முறையில் பதில் காணப்படும் என்றும் “கர்நாடக மாநிலத்தில் நூறாயிரக்கணக்கான ஓட்டுநர் பங்காளிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு நிறைவேற்ற சேவை செய்வதற்கும் ஒரு இணக்கமான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் நாங்கள் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம் என்று ஓலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<!–

–>