பொங்கல் கரும்பு நேரடி கொள்முதல் செய்யப்படுமா?

பொங்கல் சிறப்புத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சிறப்புத் தொகுப்புக்கான கரும்பு கொள்முதலை கடந்த ஆண்டைப் போலவே  அரசு நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டுதோறும் சில ஆயிரம் ஏக்கரில் பொங்கல் கரும்பு (செங்கரும்பு) சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். 

டெல்டா மாவட்டங்களைப் பொருத்தவரை திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி, பனையபுரம், திருப்பைஞ்ஞீலி, மயிலாடுதுறை மாவட்டம் அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு, திருவாவலங்காடு, வானாதிராஜபுரம், மன்னன்பந்தல், திருமணஞ்சேரி, திருவாரூர் மாவட்டம் நெடுவாக்கோட்டை,  தேரையூர், நீடாமங்கலம்,  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, அம்மாபேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு, பயிர்க் காப்பீடு, வங்கிக் கடன், கொள்முதல் உத்தரவாதம், மானியம் உள்பட எந்த ஆதரவையும் அரசு இதுவரை பொங்கல் கரும்பு சாகுபடிக்கு வழங்காததே காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க அப்போதைய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புகளுக்குரிய கரும்புகளை கூட்டுறவுத் துறை நேரடியாக கொள்முதல் செய்தது.

கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள் நேரடியாக கரும்பு சாகுபடி வயல்களுக்குச் சென்று, விலை நிர்ணயித்து கொள்முதல் செய்தனர். இது, விவசாயிகளுக்குப் பெரிய அளவில் லாபம் அளிக்காவிட்டாலும், கொள்முதல் உத்தரவாதத்தை அளித்து, நஷ்டம் குறித்த அச்சத்தைப் போக்கியது.

கடந்த ஆண்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 அடி நீளத்தில் கரும்புத் துண்டுகள் வழங்கப்பட்ட நிலையில்,  நிகழாண்டில்  குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் சிறப்புத் தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டைப் போல கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நேரடி கொள்முதலில் ஈடுபடாமல், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் கரும்பு கொள்முதலை மேற்கொண்டிருப்பது விவசாயிகளுக்கு உற்சாக இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு விற்பனை சங்கங்கள், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கரும்புகளைப் பெற முயற்சிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வயலில் இருந்து கரும்பை வெட்டி, லாரியில் ஏற்றுவது வரையிலான அனைத்துப் பொறுப்புகளையும் விவசாயிகளே ஏற்கும் நிலையில், ஒரு கரும்புக்கு ரூ. 15 என்ற அளவில் மட்டுமே  விலை நிர்ணயிக்கப்படுவது ஏற்புடையதாக இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி ப. கல்யாணம் கூறியது: 
கடந்த ஆண்டைப் போல நிகழாண்டிலும் கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில், செங்கரும்பு சாகுபடி பரப்பை வேளாண் துறை கணக்கிட்டு, கரும்புக்கு உரிய விலையை நிர்ணம் செய்து அறிவிக்க வேண்டும். நேரடி கொள்முதல் என்ற உத்தரவாதத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். 

காரணம் என்ன? இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக கரும்பு உள்பட 6 பொருள்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், நிகழாண்டில் 20 பொருள்கள் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. வழக்கமான பொது விநியோகப் பொருள்களுடன், பொங்கல் சிறப்புத் தொகுப்பில் உள்ள 20 பொருள்களைக் கையாளுவதே மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதால், நேரடி கரும்பு கொள்முதலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கூட்டுறவு விற்பனையாளர் சங்கங்கள் மூலம் பொங்கல் கரும்புகளைக் கொள்முதல் செய்து கொள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதன்படியே கூட்டுறவு மண்டல நிர்வாகங்கள், பொங்கல் சிறப்புத் தொகுப்புக்கான கரும்புகளை கூட்டுறவு விற்பனையாளர் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதிகமான உற்பத்திச் செலவு, அதிகமான தண்ணீர் தேவை, எளிதில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியது போன்ற காரணங்கள் பொங்கல் கரும்பு சாகுபடி மேற்கொள்வதை பெரும் சவாலாக மாற்றியுள்ளன. எனவே, செங்கரும்பு சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, கொள்முதல் உத்தரவாதத்தையாவது அரசு உறுதிசெய்ய வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>