பொன்மனச் செம்மல் நினைவுகள்..!

புத்தர், ஏசு, நபிகள் நாயகம், அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்டோர், ஏகடியம் பேசியவர்களை, இழிவாகப் பேசியவர்களை தங்களுடைய அன்பினால்  நல்வழிப்படுத்தினார்கள். அதே போல் எம்.ஜி.ஆரும் தன்னைப் பற்றி யார் இழிவாகப் பேசினாலும் அதை மறந்து புறந்தள்ளி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். 

கவிஞர் கண்ணதாசன், எம்.ஜி.ஆரை எதிர்த்து மேடைகளிலும், பத்திரிகை கட்டுரைகளின் வாயிலாகவும் வசைபாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு முறை நிதி உதவி தேவைப்பட்டது.  உடனே, அவர் தொலைபேசி மூலம் எம்ஜிஆரைத் தொடர்பு கொண்டார். எம்ஜிஆரும் அவர் மீது எந்த கோபமும் கொள்ளாமல் அவருக்கு உடனே உதவி செய்தார். 
அதே போல் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு பல முறை உதவி செய்து அவரைக் காப்பாற்றினார். 

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு கவிஞருக்கு அரசின் உயர் பதவியான அரசவைக் கவிஞர் பதவியை அளித்து அழகு பார்த்தார்.  இறுதியாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சை பெறச் சென்றபோது அதற்குண்டான அத்தனை செலவுகளையும் எம்ஜிஆரே ஏற்றுக் கொண்டார்.  

“அலை ஓசை’ பத்திரிகையை நடத்தி வந்த வேலூர் நாராயணன், எம்ஜிஆரை தன் பத்திரிகை மூலமாக கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால், அவருக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டபோது எம்ஜிஆர் உடனடியாக உதவி செய்தார். “அலை ஓசை’ பத்திரிகை அலுவலகத்தை தானே வாங்கிக் கொண்டார். அவர் நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் மீள பேருதவியாக இருந்தார் எம்ஜிஆர். பின்னாளில் வேலூர் நாராயணன் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு வாரியத் தலைவர் பதவி அளித்தார் எம்ஜிஆர். 
அதே போல் மதுரை முத்து எம்ஜிஆரை கடுமையாக அரசியல் களத்தில் விமர்சித்து வந்தார். எம்ஜிஆர் இயக்கி நடித்து வெளிவரவிருந்த “உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தை கேலி செய்யும் விதமாக, அந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற்றால் தான் புடவை கட்டிக் கொள்வதாக அறிவித்தார். அந்தப் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. எம்ஜிஆரின் ரசிகர்கள் அவருக்கு புடவையை அனுப்பினர். ஆனால், எம்ஜிஆர் அவரை எப்போதும் “முத்தண்ணன்’ என்றே குறிப்பிடுவார்.  பின்னர், அவர் அதிமுகவில் இணைந்தபோது அவரை மதுரை மாநகர மேயராக அமர்த்தி அழகு பார்த்தார்.
எம்ஜிஆர், தன்னை சந்திக்க வரும் பலரையும், குறிப்பாக ரசிகர்கள் அனைவரையும் “சாப்பிட்டீர்களா’ என்று அன்போடு விசாரிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உடனே விருந்தளிக்கவும் ஏற்பாடு செய்வார். அவர்கள் சாப்பிட்ட பிறகே மற்ற விஷயங்களைப் பேசுவார். தொலைதூரத்திலிருந்து வரும் ரசிகர்களுக்கு அவர்கள் திரும்பி செல்வதற்கான தொகையும் கொடுத்து அனுப்புவார்.

எம்ஜிஆர், எந்த நேரத்திலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். சாதாரண மனிதர் கூட அவரை தொலைபேசி மூலம் எளிதில் தொடர்பு கொள்ளலாம். திரை உலகில் இருந்த போதும் சரி, ஆட்சியில் இருந்த போதும் சரி அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தார்.
அவர் திரையுலகில் இருந்தபோது உயர்ந்த வெளிநாட்டு கார்களை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், தமிழக முதல்வரான பிறகு இந்தியத் தயாரிப்பான அம்பாசிடர் காரையே இறுதிவரை பயன்படுத்தினார். வெளிநாட்டு கார்கள் பயன்படுத்தும் வாய்ப்பு வந்தும் அதை அவர் ஏற்கவில்லை.  

ஆண்டுதோறும் ஜனவரி 17-ஆம் தேதியன்று அவருடைய பிறந்தநாளை உலகம் முழுவதும் தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால், அவரோ தன் பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை. எப்போதும்போல் சாதாரணமாகவே அன்றும் இருப்பார். 

மாறாக, அதற்கு முன் வரும் பொங்கல் திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அன்றைக்கு தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் புத்தாடைகளை அளிப்பார். அவர்கள் பொங்கலன்று அதை உடுத்தி வருவதைப் பார்த்து மகிழ்வார். அவர்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவைக் கொண்டாடுவார். அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவார். அனைவருக்கும் தன் கையால் பொங்கல் பரிசினை அளிப்பார்.  
தேசத்தின் மீதும், தேசத் தலைவர்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பக்தியும் கொண்டவர் எம்ஜிஆர். அவர் தனது ராமாவரம் தோட்டத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவார். அன்று, தோட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்வார்.
தேசத்திற்காகப் போராடிய தலைவர்களை அவர் மிகவும் மதித்தார். திருப்பூர் குமரனின் மனைவியை ஆட்சிக்கு வருவதற்கு முன் நேரில் சந்தித்தார். அவருடைய ஏழ்மை நிலையைக் கண்டு மனம் வருந்தி அவருக்கு தொடர்ந்து உதவி செய்து வந்தார்.  எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தவுடன் தியாகிகளின் உதவித்தொகையை உயர்த்தினார்.

கம்யூனிஸ்ட் தலைவரான ஜீவா என்கிற ப. ஜீவானந்தத்தின் மகனுக்கு அரசு வேலை அளித்து அவரை ஏழ்மை நிலையிலிருந்து மீட்டார். தியாகி கக்கனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தார். அவரின் மறைவிற்கு பிறகு அவருடைய குடும்பம் கஷ்டப்படாமல் இருக்க குடும்பத்தினருக்கு பல உதவிகள் செய்தார். கக்கனின் வாரிசுக்கு அரசு வேலை அளித்தார்.
தியாகிகளுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேடிச் சென்று உதவிகளை செய்திருக்கிறார் எம்ஜிஆர். இப்படி அன்பு, இரக்கம், தேச நலன் கொண்ட, மக்கள் மனதில் நீங்காமல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவரது உதவியாளராக நெருங்கிப் பழகிய நாட்களையும், தருணங்களையும் மனது அசைபோடுகிறது.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்று எம்ஜிஆர் திரையில் பாடிய வரிகள் அவர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்.

கட்டுரையாளர்:
எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>