மனம்  என்னும்  மேடையின்  மேலே

அக்டோபர் 10 உலக மனநல நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘பணிச் சூழலில் மனநலம்’ என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.  

‘ஒருவர் தனது உடல் மனத் திறன்களை உணர்ந்து கொண்டு, வாழ்வின் சாதாரண அழுத்தங்களை எதிர் கொள்வதிலும், பயனுள்ள மற்றும் படைப்பூக்கமுள்ள பணிகளை மேற்கொள்வதிலும் தனக்கான சூழலமைவை உருவாக்கவும் பங்களிக்கவும் போதிய திறன் பெற்றிருப்பதே உள நல நிலை ஆகும்’ என்று உலக சுகாதார நிறுவனம் மனநலம் பற்றி அதிகாரபூர்வமாக வரையறை செய்துள்ளது. இதற்கு முன்பாக மனநலம் பற்றிய வரையறுப்பு ஏதும் வரலாறில் எங்கும் இல்லை.

ஆதிகாலத்தில் மனநோய்கள் துர்தேவதைகளின், பேய் பிசாசுகளின் விளைவு எனக் கருதினர். நோய்கள் கடவுளின் தண்டனை என்றும்,  மரணம் பாவத்தின் சம்பளம் என்றும், மருந்தளிப்பது கடவுளின் செயலில் குறுக்கிடுவது என்றும், எனவே மருந்தளிக்காமல் கடவுளிடம் மண்டியிடுவதே சரி என்றும் முற்காலத்தில் கருதினர். இதன் தொடர்ச்சியை இப்போதும் ஒரு பிரிவு கிறிஸ்தவர்களிடம் காணலாம். பிற்காலத்தில் உருவான வைதீக எதிர்ப்பு மதங்கள் மருத்துவத்தையும் ஒரு கடமையாக கருதிச் செயல்பட்டனர். இந்த வழியில் வந்தவர்களே புத்த, சமண, துறவிகள், சித்தர்கள் போன்றோர்.

எல்லா நோய்களையும் மருத்துவர் வசம் ஏற்றுக் கொண்டோர் மனநோய்களை மட்டும் 18-ஆம் நூற்றாண்டு வரை கடவுளிடமே விட்டுவிட்டனர். இதன் தொடர்ச்சிதான் பள்ளிவாசல்களிலும், கோவில்களிலும் மனநோயாளிகளைக் கட்டி வைக்கும் பழக்கம். தர்க்கப்பூர்வமான உளவியல் ஆய்வுகள் எல்லாம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தோன்றின.

1808-ல் ஜோகன் கிறிஸ்டியன் ரெயில் எனும் உடலியல் அறிஞர் PSHCHIATRY எனும் சொல்லை உருவாக்கினார்.  PSYKHE என்றால் ஆன்மா, ஆற்றல், மூச்சு என்று பொருள்.1879-ல் வில்ஹெல்ம் உளண்ட் என்பவர் ஜெர்மனியிலுள்ள லீப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆய்வுக் கூடத்தை அமைத்தார். ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு 1890 முதல் 1939ல் மறையும் வரை பல உளவியல் பகுப்பாய்வுகளை மேற்கொண்டார். ஃபிராய்டு செய்முறையின் போதாமை குறித்து பின்னால் வந்த காரல்பாப்பர் போன்றோர் நிரூபணங்களை உருவாக்கினர்.  இவர்களெல்லாம் தான் உளவியல் துறை முன்னோடிகளாக ஆங்கில மருத்துவக்கல்விப் புலம் சார்ந்த வரலாறு எழுதுநர்களால் முன்னிறுத்தப்பட்டனர்.

இவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாற்றுச் செய்தி என்னவெனில் 1792-லேயே உளவியல் துறையில் அரிய சாதனை புரிந்தவர் ஹோமியோபதியின் தந்தை டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பது தான். உலகின் முதல் மனநல மருத்துவமனை அமைத்துச் சிகிச்சை அளித்தவர் டாக்டர் ஹானிமன் அவர்களே. அவர் ஹோமியோபதி மருத்துவ முறையின் நிறுவனர் என்கிற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இருட்டடிப்பு செய்யப்பட்டார். எனினும் உளவியல் துறையில் ஆங்கில மருத்துவம் இன்று வரை எட்டாத சாதனைகளை அன்றே சாத்தியமாக்கியவர் டாக்டர். ஹானிமன்.

‘ஒவ்வொரு சாதாரண நோயிலும் கூட மனநலத்தில் மாற்றங்களும் திரிபும் ஏற்படுகின்றன. நோயாளியை ஆய்வு செய்யும் போது உடல் சார்ந்த குறிகளுடன் உணர்வுகளையும் மனக்குறிகளையும் கவனத்தில் கொண்டு மொத்தக் குறிகளையும் ஒரு சேர நலமாக்குவதே முழுநலம்.’ என்பது மனநலத் துறையில் ஹானிமன் அவர்களின் முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். மேலும் மனம் அல்லது சிந்தனை என்பதன் மூல ஊற்று வாழ்க்கை தான். அது தொடர்பான சிக்கல்களின் மீதான எதிர்வினையாகவே உள்ளார்ந்த திரிபுகள் உருவாகின்றன என்பது குறித்து ஹானிமனுக்கு தெளிவு இருந்தது.

ஹானிமனின் பார்வையை, பாதையை இருட்டடிப்பு செய்ததன் மூலம் ஆங்கில மருத்துவம் மனநலச் சிகிச்சைத் துறையில் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மனநோய்க்கான காரணங்களை கிருமியியல், நரம்பியல், அகச்சுரப்பியியல் எனப் பல தளங்களில் இன்னமும் ஆங்கில மருத்துவம் தேடிக் கொண்டுள்ளது. எனவே மூளையின் ரசாயன மாற்றங்களாக மட்டுமே மனநலப் பிரச்சினைகள் பார்க்கப்படுகின்றன.

மன அழுத்தம், மனச் சோர்வு, மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் வலிகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் பல மருந்துகள் நோயாளிகளை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகின்றன. மது மற்றும் போதைப் பொருட்களைப் போல சில ஆங்கில மனநோய் மருந்துகள் மது, அபின், ஹெராய்ன் போன்ற போதைப் பொருட்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. சரியாகச் சொன்னால் அவற்றை விட இன்னும் கொடூரமானவை. இத்தகைய ஆங்கில மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி விட்டால் பின்னர் அவற்றிலிருந்து விடுபடுவது மிக மிகச் சிரமம். அவ்வாறு விடுபட நினைத்து மருந்தை நிறுத்தினாலோ, குறைத்தாலோ கூட நோயாளி WITHDRAWEL SYMPTOMS எனப்படும் மீள்குறிகள் போன்ற மிகுந்த துன்பத்திற்கு ஆளாக நேரிடும். மேலும் இம்மருந்துகள் இல்லாது வாழ முடியாது என்ற மனநிலையையும் இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன.

மருந்துகளுக்கு அடிமையாவது, அதிக அளவில் மருந்துகளை உட்கொள்வது, மருந்துகளை நிறுத்துவதால் மனதும் உடலும் துன்பத்திற்கு ஆளாவது போன்றவை அனைத்தும் மருந்து உட்கொள்பவரின் இயல்பான உடல், மனக் குறிகள் அல்ல. மருந்துகளால் உடல் மற்றும் மனதில் ஏற்படும் செயற்கையான விளைவுகளே ஆகும். நோய்கள் ஆபத்தானவைகளாக இருக்கலாம். அதை விட ஆபத்தானவைகளாக மருந்துகள் இருக்கலாமா?

மனநலம் குறித்து மாமேதை ஹானிமன் தனது புகழ்பெற்ற ஆர்கனான் நூலில் 210 முதல் 230 வரையிலான 21 மணிமொழிகளில் மிக அருமையாக விளக்கியுள்ளார். மணிமொழி 212ல் ‘எல்லா வகை நோய்களிலும் மனிதனின் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன’ , மணிமொழி 215ல் ‘மனதைப் பற்றியவை என்றழைக்கப்படும் எல்லா நோய்களும் உடலைப் பற்றிய நோய்களே என்பதில் சந்தேகமில்லை. இந்நோய்களில் மனக்குறிகள் அதிகரிக்கின்றன. அதே சமயத்தில் உடல் குறிகள் [பல சமயங்களில் மிக வேகமாக] மறைய ஆரம்பிக்கின்றன’, மணிமொழி 225ல் ‘உடலைப் பற்றிய நோயையே முழுக்காரணமாக கருத முடியாத மன நோய்களும் சில இருக்கின்றன. ஓயாத கவலை, நீங்காத ஏக்கம், வெறுப்பு, அடிக்கடி பயம், பீதி முதலிய காரணங்களே மன நோய்களைத் தோற்றுவித்து நீடித்திருக்க உதவுகின்றன’ என்று மிகச் சரியான பார்வையை மருத்துவத்துறைக்கு வழங்கிய டாக்டர். ஹானிமன் ஆர்கனான் நூலின் 230 வது மணிமொழியில், ‘மனநோய்களில் உலகிலுள்ள மற்ற எல்லா வைத்திய முறைகளையும் விட ஹோமியோபதி பன்மடங்கு உயர்வானதென்பதை என் அனுபவத்திலிருந்து தைரியமாய் கூற முடியும்’ என்கிறார்.

ஹானிமனைக் கற்றறிந்த ஒவ்வொரு ஹோமியோபதியரும் சிறந்த மனநல மருத்துவரே என்பதில் சந்தேகமில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் 1987-ஆம் ஆண்டின் 14-வது சட்டமாக இயற்றப்பட்டுள்ள THE MENTAL HEALTH ACT பிரிவு 2[K] [iii ]-ன்படி பதிவு பெற்ற M.D.[HOM].,B.H.M.S.,D.H.M.S.,R.H.M.P., ஹோமியோபதி மருத்துவர்கள் மனநல சிகிச்சையின் எல்லா நிலைகளைகளையும் கையாள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். அலோபதியின் பக்கவிளைவுகளை, பின்விளைவுகளை முறியடிக்கும் வண்ணம், ஹோமியோபதி மீதான இருட்டடிப்புகளை, பொய்மைப் புனைவுகளை முறியடிக்கும் வண்ணம் ஹோமியோபதியர்களின் மருத்துவப் பணிகள் அமைந்திட வேண்டும்;

பொதுமக்களும் ஹோமியோபதியின் மனநல சிகிச்சைகளை பயன்படுத்தி முழுமையான மனநலமும் உடல்நலமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

<!–

–>