மருத்துவப் பணியாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டணம் ரூ.140 கோடி நிலுவை!

கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவப் பணியாளர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணம் ரூ.140 கோடி கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், விடுதி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

கடந்த 2020 மார்ச் இறுதியில் தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் எழுந்த நிலையில், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணி முடிந்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கு அறைகளும், அவர்களுக்கான உணவு வசதிகளும் அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

 அதேபோன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தினசரி பாதிப்பு 35,000 வரை உயர்ந்த நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என மாவட்டத்துக்கு சராசரியாக 1000 பேர் வீதம் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முறைகேடுகளால் மருத்துவத் துறையிடம் ஒப்படைப்பு: இதனிடையே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் விடுதி கட்டணத்தில், விடுதி உரிமையாளர்களுடன் சேர்ந்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, உணவு மற்றும் விடுதி கட்டணங்களை, சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம், மருத்துவப் பணிகள் இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

அதன்படி உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் நாளொன்றுக்கு மருத்துவர்களுக்கு ரூ.2,500, செவிலியர்களுக்கு ரூ.1,500, மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.1,000 வீதம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மே 7-ஆம் தேதி முதல் தற்போது வரை மருத்துவப் பணியாளர்களுக்கான விடுதி மற்றும் உணவுக்கான கட்டணங்கள் சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்களுக்கு தமிழகம் முழுவதும் வழங்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்ட கரோனா தொற்றுப் பாதிப்புக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.3 கோடி முதல் அதிகபட்சம் ரூ.10 கோடி வரையிலான விடுதி மற்றும் உணவுக் கட்டணம் கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.140 கோடி நிலுவையில் உள்ளது.
ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் விடுதி உரிமையாளர்கள்: தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நிலுவையில் இருந்து வருவதால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களுக்கான பணம் செலுத்த முடியாமலும் தடுமாறி வருகின்றனர். 

இது தொடர்பாக  உரிமையாளர்கள் தரப்பில் கூறியதாவது: கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில், கூடுதலான மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்துள்ளோம். ஊழியர்களுக்கான ஊதியம், மின் கட்டணம், வங்கி கடனுக்கான தவணைத் தொகை, ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவற்றை செலுத்தியே ஆக வேண்டிய நிலை உள்ளது. அதேபோன்று, பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள், ஒப்பந்த அடிப்படையில் வாடகை இடத்திலேயே செயல்பட்டு வருகின்றன. அதற்கான வாடகைப் பணமும் வழங்கப்பட வேண்டும்.
அடுத்த ஒரு மாதத்தில் அதற்கான தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், செலவுக்கான அனைத்துக் கட்டண விவரங்களையும் மருத்துவத் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டோம். அரசிடமிருந்து விடுதி மற்றும் உணவுக் கட்டணத்திற்கான தொகை கிடைத்துவிடும் என்றாலும், தற்போதைய சூழலில் நிலுவையிலுள்ள கட்டணத் தொகை உடனடியாக கிடைத்தாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>