மருத்துவ குணம் நிறைந்த மங்களூரு பலா இலை இட்லி!

கிருஷ்ணகிரி: சுவையான உணவு என்றால் அனைவரின் வாயில் உமிழ்நீர் சுரக்கும் என்பது இயல்பு. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது சேலத்து மா என்றாலும், பலா என்றால் பண்ருட்டியும் நினைவுக்கு வரும். அதுபோல சில உணவுப் பெயர்களை உச்சரித்தால், சில ஊர்களும் நினைவுக்கு வரும்.

செட்டிநாடு உணவு என்றால் காரைக்குடி நினைவுக்கு வருபவது போல பலா இலை இட்லி என்றால் கர்நாடக மாநிலம், மங்களூரு நினைவுக்கு வரும். சிறுவர், முதியவர்கள், நோயாளிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் விரும்பி உண்ணும் உணவு இட்லி. உலகில் சிறந்த உணவாகத் தேர்வு செய்யப்பட்டது இட்லி. இட்லியை பல வடிவங்களில் சமைக்கலாம். கிளாஸ் இட்லி, ஹார்ட்டின் வடிவ இட்லி, குஷ்பூ இட்லி என பல வடிவங்களில் இட்லி தயாரிக்கப்பட்டாலும், அண்மையில் பெங்களூருவில் ஐஸ்குச்சி இட்லி அனைவரையும் கவர்ந்தது.

பலா இலை இட்லி

பலா இலை இட்லி, கர்நாடக மாநிலம், மங்களூருவில் பிரபலம். பலா இலைகளைக் கொண்டு கூடை போல வடிவமைத்து, அதில் இட்லி மாவை ஊற்றி வேகவைத்து தயார் செய்வது பலா இலை இட்லி. மங்களூருவில் பலா இலை இட்லியை கடுபூ, மங்களூரு இட்லி என அழைப்பர்.  

தேவையான பொருள்கள்: பச்சரிசி – 2 கப், உளுந்தம்பருப்பு – 1 கப், தேங்காய் துருவல் – 1 கப், தேவையான அளவு கல் உப்பு, பலா மரத்தின் இளம் இலைகள்.

செய்முறை: பச்சரசி, உளுந்தம் பருப்பையும் தனித்தனியே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறிய பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை  தேங்கால் துருவலுடன் சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். இந்த கலவை 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

சுத்தம் செய்த 4 பலா இலைகளை எடுத்துக் கொண்டு, அதன் நுனிப் பகுதியை 4 திசைகளில் வைத்து ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் வகையில் சிறு குச்சியால் குத்தி இணைக்க வேண்டும்.

பின்னர் இலைகளை மடக்கி அதன் ஓரத்தை மற்றொரு இலையின் ஓரத்துடன் சிறு குச்சியால் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதன் மூலம் பலா இலை கப் அல்லது தொன்னை தயார் செய்யலாம். 6 மணி நேரத்துக்குப் பிறகு மாவு கலவையை பலா இலை தொன்னையில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும். பலா இலை வெந்த மனம் வந்தவுடன் அடுப்பு எரிவதை அணைக்க வேண்டும். இப்போது தயாரான பலா இட்லியை, பாத்திரத்திலிருந்து எடுத்து, பலா இலைகளையை அகற்றி சூடாக பரிமாறலாம். பலா இட்லியுடன் சட்டினி, சம்பார், இட்லி பொடி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பலா இலை இட்லி இயற்கை உணவு. பலா இலையில் உள்ள சத்துக்களும் இந்த இட்லியை உண்பதன் மூலம் கிடைக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். பொதுவாக வீட்டில் இட்லி அனைவரும் சமைப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமாக பலா இலை இட்லியை சமைத்து குடும்பத்தில் அனைவரையும் மகிழ்விக்கலாம்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>