'மற்றுமோர் அம்மா' – கொண்டாடும் மருமகன்!

ஒரு வீட்டிற்குச் செல்லும் மருமகள், அந்த குடும்பத்துக்கு மகளாக மாறுகிறாளோ இல்லையோ, ஒரு மருமகன் அந்த பெண் வீட்டாருக்கும் சேர்த்தே மகனாக இருக்கிறார். பெரும்பாலாக இந்த சூழலை நம்மைச் சுற்றியுள்ளோரிடம் ஏன், நம் வீட்டிலேயே கண்கூடாகப் பார்க்க முடியும். 

மாமியார் – மருமகள் உறவைப் போல் அல்லாமல், மாமியார் -மருமகன் இடையேயான அன்புப் பரிமாற்றம் பெரும்பாலான வீடுகளில் அழகாகவே இருக்கும். அதிலும் பெண் பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீடு என்றால், மருமகனை மகனைப் போல பாவிக்கும் மாமியார் – மாமனாரால், மனைவியின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறி விடுவார் மருமகன். 

கணவன் வீட்டை கவனித்துக்கொள்ள பெண் எரிச்சலடைவதைப் போல, மனைவியின் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க ஆண்மகன்கள் பெரும்பாலாக எரிச்சலைடைவதில்லை. அதனை தன் கடமையாக உணர்ந்து செய்யும் பல மருமகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது பல குடும்பங்களில் வயதான பெற்றோரை மகள்-மருமகனே கவனித்துக்கொள்கின்றனர். 

மாமியாரைப் பொருத்தவரை, மகளுக்குத் திருமணம் ஆனவுடன் பெண் வீட்டில் மாப்பிள்ளை விருந்துக்கு வகைவகையான சாப்பாடு செய்து மருமகனை திக்குமுக்காடச் செய்வார். மருமகன் மீதான அக்கறையை வெளிப்படுத்தவும் மருமகன் தன் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலும் பெண் வீட்டார் இவ்வாறு செய்வதாக சொல்லப்படுவதுண்டு. 

ஆனந்தி

மருமகள்கள் பெரும்பாலாக ‘மகளாக’ பார்க்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பாலாக மருமகனை, மகனாகப் பார்க்கும் மாமியார்கள் அதிகம். ஆண் பிள்ளைகள் இல்லாத வீடென்றால் மருமகனே மகனாக இருப்பார். அதுபோல பெரும்பாலான மருமகன்களும் மாமியாரையும் தன்னுடைய அம்மாவாகவே பார்க்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக வாழும் ஒரு மாமியார் – மருமகனைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம். 

சென்னையைச் சேர்ந்த மகேஷ், தன்னுடைய மாமியார் குறித்து கூறியதாவது: 

‘எனக்கு 2017ல் காதல் திருமணம் நடந்தது. வேறுவழியின்றி அவசர அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. நாங்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். என்னுடைய மனைவி வீட்டார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். 

இரு மகள்களுடன். 

ஆனால், திருமணத்திற்கு மனைவி வீட்டார் சம்மதம் தெரிவித்து திருமணத்திலும் கலந்துகொண்டனர். எனக்கு திருமணம் ஆன புதிதில் ஒரு 6 மாதங்கள் நானும் என் மனைவியும் தனியே வாசித்தோம். அதன்பிறகு பொருளாதார சூழ்நிலை சற்று மோசமானது. பின்னர், என்னுடைய மாமியார் அழைக்கவே, அவரது வீட்டிற்கு நானும் மனைவியும் சென்றோம். எனது மனைவிக்கு ஒரு தங்கை மட்டும். சகோதரர்கள் இல்லை. 

குடும்பத்தைவிட்டு திருமணம் செய்த எனக்கு வாழ்க்கையை நினைத்து கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. குறைவான ஊதியத்தில் எப்படி மனைவியை கவனித்துக்கொள்ளப் போகிறோம் என்று. ஆனால், சரியான நேரத்தில் எங்கள் நிலையைப் புரிந்துகொண்டு என் அம்மா(மாமியார்) எங்களை அழைத்தது எனக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தது. 

திருமணம் ஆனது முதல் என் மாமியாரை ‘அம்மா’ என்றுதான் அழைத்து வருகிறேன். பல சூழ்நிலைகளில் என்னுடைய மற்றொரு அம்மாவாகவே உணர்கிறேன். ஒரு வருடத்திற்குப் பின்னர் என்னுடைய பெற்றோரிடம் பேசினாலும் சூழ்நிலை சரியில்லாததால் பெற்றோர் சம்மதத்துடனே சுமார் 4 வருடங்களாக மாமியார் வீட்டில் வசித்து வருகிறேன். 

மகள் மீனா, மருமகன் மகேஷுடன் ஆனந்தி. 

பல தருணங்களில் அவர் என்னை மகனாகவே உணர வைத்திருக்கிறார்.  எனக்குப் பிடித்த உணவை பார்த்து பார்த்து சமைத்துக் கொடுப்பதில் தொடங்கி என் மனைவியிடம் எனக்கு ஆதரவாகப் பேசுவது வரை அனைத்திலும் அவர் என் தாயைப் போலவே உணர வைப்பார்.

காதல் திருமணம் செய்து கொண்டாலும், தனது மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணைக் கிடைத்திருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் என்னிடம் வெளிப்படுத்தும்போது எனக்கு நெகிழ்ச்சியாகவும் இன்னும் என் மனைவியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். 

வீட்டில் எந்த முக்கிய முடிவுகளானாலும் அம்மா(மாமியார்) என்னைக் கேட்டுவிட்டே செய்வார். மனைவியிடம் சண்டை வரும்போதெல்லாம் எனக்கு தான் ஆதரவாக இருப்பார். என் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர். என்னுடைய குழந்தையை முழுமையாக கவனித்துக்கொள்கிறார். மாமனார் இருந்தாலும்கூட வீட்டில் என்னையே முன்னிலைப்படுத்துவார். என்னுடைய குடும்பத்தினரிடமும் நல்ல நட்புறவு கொண்டிருக்கிறார். இப்படி ஒரு அம்மா(மாமியார்) கிடைத்தது என்னுடைய பாக்கியமாகவே கருதுகிறேன். 

சிலர் மாமியார் வீட்டில் இருப்பதை வேறுவித தவறான கண்ணோட்டத்தோடு அணுகுகின்றனர். பெண்கள் கணவனுக்காக தங்களுடைய உயிருக்கும் மேலான பெற்றோரை விட்டு வரும்போது அவர்களுக்காக நாம் இவ்வாறு செய்தால் என்ன தவறு இருக்கிறது? பெண்களுக்கு கணவன் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதுபோல ஆண்களுக்கும் மனைவியின் வீட்டையும் சேர்த்து பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நம் பெற்றோருடன் மனைவியின் பெற்றோரையும் கவனித்துக்கொள்ள வேண்டியது கடமையும்கூட’ என்கிறார் மகேஷ். 

இதுகுறித்து மாமியார் ஆனந்தி கூறும்போது, ‘எனக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. என்னுடைய மகனை நான் எப்படி பார்த்துகொள்வேனோ அதுபோல தான் என் மருமகனையும் பார்த்துக்கொள்கிறேன். 

என் கணவர் பெரும்பாலாக வீட்டு விவகாரத்தில் தலையிட மாட்டார். நானும் என் மருமகனும்தான் வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்போம். பொறுப்பாக அனைத்தையும் கவனித்துக்கொள்வார். என்னை அம்மா என்று அழைப்பது எனக்கு ஒரு மகன் இல்லாத குறையைப் போக்குகிறது. அவர் இருப்பது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கிறது. என்னுடைய மகளையும் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார். இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்? நான் இருக்கும்போதும் சரி, இறந்தபின்னரும் சரி, என் மகள்களைவிட என் மருமகனுக்கே அனைத்து உரிமைகளும் உண்டு. 

என்னுடைய இன்னொரு மகளுக்குத் திருமணம் ஆனாலும் அந்த மருமகனும் எனக்கு மகன்தான் என்கிறார் பூரிப்புடன். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>