மழைக்காலத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் வார்ட்ரோப் செலக்‌ஷன்… சும்மா ஃபாலோ பண்ணிப் பாருங்க!

மழைக்காலம் விட்டு விட்டுத் தொடர்கிறது. தொடர் மழையாக இல்லா விட்டாலும் கடந்த சில வருடங்களாகவே நம்மூர் வானிலை மாற்றங்களை நம்பவே முடியவில்லை. திடீரென்று கருமேகங்கள் திரண்டு வானம் பிளந்து கொண்டு கொட்டித் தீர்க்கும் மழை! சில நேரங்களில் பார்த்தால் பளீர் வெள்ளையில் வெளுத்த வானம் கண் சிமிட்டும். பருவமழைக் காலங்களில் இந்த இருவிதமான சீதோஷ்ணங்களையும் அப்படியே தொடரப் போகிறது என்று நம்ப முடியாது. எப்போது வேண்டுமானாலும் நாம் மழையில் நனைந்து போகும் வாய்ப்பிருக்கிறது. எனவே மழைக்காலத்துக்கான ஸ்பெஷல் வார்ட்ரோப் கலெக்‌ஷன் என்னவென இணையத்தில் தேடிப் பார்க்கையில் லண்டனைச் சேர்ந்த வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட் எரின் புஸ்பியின் காணொளியொன்று கண்ணில் பட்டது. அட இது சூப்பரா இருக்கே என்று தோன்றியதால் தினமணி.காம் வாசகர்களுக்கும் அதைப் பகிர்கிறோம்.

நம்மூரில் பொதுவாக நாம் காணும் ரெயின் கோட்டுகள் எல்லாம் வாளிப்பான, சராசரிக்கும் அதிகமான உயரமான உடல்வாகு கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுவதில்லை. பொதுவாக நடுத்தரமான உடல்வாகு கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் தான் பெரும்பாலான ரெயின் கோட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. ரெயின் கோட்டுகள் மட்டுமல்ல மற்றெல்லா உடைகளுக்கும் கூட இது பொருந்தும். நான் சொல்வது எக்ஸ்ளூசிவ்வான கடைகளில் இல்லை. பெரும்பான்மை புழக்கம் கொண்ட கடைகளில் கிடைப்பவை அனைத்துமே இப்படித்தான் எனவே வெயில் காலமோ மழைக்காலமோ, குளிர்காலமோ  அது எந்தக் காலமானாலும் சரி நமக்கே நமக்கேயான உடைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவரவருக்கெனத் தனியாக வார்ட்ரோப் ஸ்டைலிஸ்டுகளை வைத்துக் கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை. தற்போது மேலைநாடுகளில் பரவலாக இருக்கும் இந்த முறை இந்தியாவில் பன்னெடுங்காலங்களாகப் புழக்கத்தில் இருப்பது தான். ஆனால் என்ன ஒரு கஷ்டம் என்றால் அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தொகை தான் சாமானியர்களுக்குக் கட்டுப்படியாக விலையில் இருக்கக் கூடும்.

வாரன் பஃபெட் டெக்ஸ்டைலில் புரட்சி செய்து மிக சகாய விலையில் டிசைனர் உடைகளை அளித்தார் போல இம்மாதிரி பிரத்யேக ஸ்டைலிஸ்ட்களை தேர்ந்தெடுப்பதென்பதும் சகாய விலையில் சாத்தியப் பட்டால் நன்றாகத்தான் இருக்கும். சீக்கிரமே அந்த வசதி தமிழகத்தில் அனைவருக்கும் சாத்தியமானால் எல்லோருமே கச்சிதமான உடைகளை அணிந்து ஆனந்தத்தில் உய்வார்களோ என்னவோ?!

சரி இப்போதைக்கு நம்மூரில் மழைக்காலம் நீடிக்கிறது இல்லையா? அதற்கேற்றாற்போல் என்ன விதத்தில் உடை அணிந்து சென்றால் ஸ்டைலாக இருக்கும் என்று எரின் புஸ்பி சொல்வதைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

எரின் புஸ்பி வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட்…

எரின் புஸ்பியின் ரெய்னி டே செக்லிஸ்ட்…

தரமான குடை….

வெறும் மழை மட்டும் என்றால் சாதாரணக் குடை போதும். சில நேரங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும். சில சமயம் பெருந்தூறலோடு காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும். அப்படியான மழையைச் சமாளிக்க தரமான மழைக்குடை அவசியம். அந்தக்குடைக்கான கம்பிகளை நன்கு சோதித்துப்பார்த்த பின் வாங்கலாம். தாத்தா குடை என்று அந்தக் காலத்தில் சொல்வார்களே அது போன்ற ஹெவியான குடைகள் தரமானவையாக இருக்கும். குடையின் தரம் என்பது காற்றுடனான மழை பெய்யும் போது குடை பின்னுக்கு மடங்காமல் இருக்கும் தன்மையைப் பொறுத்தது.

மழைக் காலத்துக்கான பிரத்யேகத் தொப்பி…

காணொளியில் எரின் உபயோகிக்கும் இந்தத் தொப்பி மழைக்கு இதமாக இருப்பதுடன் தலை நனையாமல் காக்கவும் உதவும். ஸ்டைலிஸ் ஆகவும் இருக்கும்.

வெதுவெதுப்பூட்டும் ஸ்கார்ப்…

கண்டிப்பாக மழைக்காலங்களில் வெதுவெதுப்பூட்டும் ஸ்கார்ஃப் அவசியமானது. காதைச் சுற்றியோ அல்லது கழுத்தைச் சுற்றியோ மடித்துப்போட்டுக் கொண்டால் போதும். தலைப்பகுதி சில்லிடாமல் வெது வெதுப்பாக மழையிலிருந்து பாதுகாக்கப்படும்.

நீளமான ட்ரெஞ்ச் ஓவர்கோட் (வாட்டர் ரெசிஸ்டண்ட் அல்லது வாட்டர் ப்ரூஃப்)

வீட்டிலிருந்து நடந்து செல்லக் கூடிய தொலைவில் பள்ளிகளோ அல்லது அலுவலகங்களோ இருக்கும் பட்சத்தில் இந்த நீளமான ட்ரெஞ்ச் கோட் மழைக்காலத்துக்கேற்ற சூப்பர் சாய்ஸ்.

ரெயின் பூட்ஸ்…

நம்மூரில் டிராஃபிக் போலீஸ்காரர்கள் இப்படியான பூட்ஸ்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு வேண்டுமென்றால் நமக்கான ஸ்டைலிஸ்ட் வைத்துக் கொண்டு வெவ்வேறு நிறங்களில் நமக்கேற்ற ரெயின் பூட்ஸ்களை வடிவமைத்துக் கொள்ளலாம். பூட்ஸுக்கெல்லாம் ஸ்டைலிஸ்ட் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நாம் அத்தனை பெரிய அப்பாடக்கரா என்று நினைத்தீர்களானால் இந்த ஆப்ஷனை அடியோடு நிராகரித்து விட்டு கால் நனையாமலும் சூடாகவும் இருக்கும் படியாக வடிவமைக்கப்பட்ட வேறு ஏதேனும் பூட்ஸுகளையும் பயன்படுத்தலாம்.

மழைக்கேற்ற சூப்பர் ஸ்டைலிஸ்ட் கெட் அப் ரெடி!

இனி என்ன அப்படியே ஸ்டைலாக அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

இந்த கெட் அப்பில் நீங்கள் சென்றீர்கள் என்றால் உங்களைப் பார்த்து நிச்சயம் நாலு பேர் இதே ஸ்டைலில் மழைக்காலத்தை பாதுகாப்பாகக் கடக்க முயற்சிப்பார்கள்.

<!–

–>