மழைக்கால இலவச இணைப்புகளான கொசுக்கள், ஈக்கள், கரப்பானை ஒழிக்க ஆபத்தில்லாத மிக எளிய டிப்ஸ்!

மழைக்காலம் என்றாலே வீடு, அலுவலகம், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், சிறூ மளிகைக் கடைகள் முதல் பெரும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் உள்ளிட்ட வியாபார கேந்திரங்கள் வரை எங்கு பார்த்தாலும் ஒரே ஈரப்பதமாகத் தான் இருக்கும். ஒரேயடியாக மழை நின்று இரண்டு நாட்களேனும் முற்று முழுதாக வெயில் அடித்தால் ஒழிய இந்த ஈரப்பதம் குறையவே வாய்ப்பில்லை.

ஈரமான இடங்கள் என்றால் அவற்றினோட இலவச இணைப்பாக எங்கு பார்த்தாலும் ஈக்களுக்கும், கொசுக்களுக்கும், இன்னபிற பூச்சி இனங்கள் சகதிப் புழுவினங்கள் என்று சில ஜீவராசிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். வீட்டிற்கு வெளியே துவைத்தை துணிகளைக் கூட காய வைக்க வாய்ப்பில்லாது ஈக்களும், கொசுக்களும் அடை போல வந்து அவற்றின் மீது அப்பிக் கொள்ளும். இதனால் சுகாதாரம் கேடு மட்டுமல்ல ஆரோக்யக் கேடும் மிகுதியாகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகரித்து விட்ட டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கொரு உதாரணம்.

டெங்கு மட்டுமல்ல இந்தப் பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள், பூஞ்சைகளுக்கும் கூட ஈரப்பதமான இடங்கள் உற்ற நண்பனாக விளங்குவதால் மழையினால் உண்டாகும் ஈரப்பதத்தை நம்மால் தடுக்க முடியாது என்றாலும் அங்கே ஒட்டி உறவாடும் கிருமிகள் மற்றும் பூச்சிகளையாவது சுயநலம் கருதியாவது  நாம் தடுத்துத் தான் ஆக வேண்டும்.

தடுப்பதென்றால் எப்படி? நாங்கள் தான் ஏற்கனவே கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை ஒழிக்க கருப்பு& சிவப்பு ஹிட் பூச்சிக் கொல்லி மருந்துகள், டோமெக்ஸ் ஃபீனால், ஹார்பிக், லைஸால்,  டெட்டால், கொசுக்களை ஒழிக்க குட்நைட் ஆக்டிவ், ஆல் அவுட், டார்ட்டாஸ் கொசுவத்திச் சுருள் வரை எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு தானே இருக்கிறோம்… அப்படியும் அவையெல்லாம் எங்கே ஒழிகின்றன. அந்த மருந்துகளைப் பயன்படுத்தி எங்களுக்குத் தான் விஷத்தன்மை அதிகரிக்கிறதே தவிர அவையெல்லாம் இந்த மருந்துகளை ஊட்டச்சத்து பானங்களைப் போல பருகி விட்டு மேலும் உரத்துடன் பல்கிப் பெருகி தங்களது புஜபல பராக்கிரமத்தை முன்னை விட அதிகமாக அல்லவா காட்டத் தொடங்கி விடுகின்றன?! இவற்றின் தொல்லைகளில் இருந்து எப்படித்தான் தப்புவதோ தெரியவில்லையே! என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுகிறீர்களா?! இனி அப்படியொரு நிலை உங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

இதோ ஈரமான இடங்களில் வாழும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும், ஈக்களையும், கொசுக்களையும் முற்றிலுமாக ஒழித்தழிக்க புதிதாக ஒரு வழிமுறை; இதையும் தான் ஒருமுறை பின்பற்றிப் பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:

ஷாம்பு- 1/2 கப்
தாவர எண்ணெய் – 1/2 கப் (ஆலிவ் எண்ணெய்)
வினிகர்- 1/2 கப்

தயாரிப்பு முறை:

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் நன்கு கலந்து ஒரு பிளாஸ்டிக் ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள் அடிக்கடி அதிகமாக வரக்கூடிய இடங்களில் இந்த ஸ்ப்ரே அடித்து விடுங்கள். பிறகு பாருங்கள் மேற்கண்ட ஜந்துக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமலே போய்விடும். தினமணி வாசகர்கள் இந்த வழிமுறையைத் தங்களது வீடுகளில் செயல்படுத்திப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள். 

குறிப்பு:

இந்த ஸ்ப்ரே குறித்தான வரவேற்கத்தக்க அம்சங்களில் முக்கியமானது இது வளர்ப்புப் பிராணிகளுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ ஆபத்தானது இல்லை. பிற பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போல தவறுதலாக இவற்றை குழந்தைகளோ அல்லது வளர்ப்புப் பிராணிகளோ வாயில் வைத்து விட்டால் மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்தாது என்பது ஆறுதலான விஷயம்.

<!–

–>