மாயத் தோற்றங்கள்! மாயக் குரல்கள்! மனச்சிதைவு நோயின் மர்மங்கள்!!

நாதன் என்ற பட்டதாரி இளைஞன் ஒருவிதக் கலவரத் தோற்றத்துடன் அறைக்குள் நுழைந்தான். அவன் ஒரு பலசரக்கு கடை உரிமையாளரின் மகன். அப்பாவிற்கு உடல்நலமில்லாத நாளில் அவன் கடையில் அமர்ந்திருந்த போது, திடீரென ஏற்பட்ட உள்ளுணர்வின் உந்துதலால் கடையை விட்டு வெளியேறி, மிக விரைவாக மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

அவனைக் காவல்துறையினர் வலை வீசித் தேடி வருவதாகவும், தற்போது தனது கடையை அவர்கள் நெருங்கி விட்டதால் தான் தப்பித்து வந்ததாகவும் பீதியுடன் கூறினான். தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட எல்லோருமே தனக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அவர்களால் தனக்கு ஏதோ ஓர் தீங்கு நேரப் போகிறது என்றும்  அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் பதற்றத்துடன் கூறினான். மேலும் அதற்கான காரணங்களைக் கேட்டால் அவனால் தர்க்கப்பூர்வமாக சரியாக எந்தக் கருத்துக்களையும் விளக்கிச் சொல்ல முடியவில்லை.

மட்டுமின்றி, தன்னை யாரோ ஒருவர் மறைமுகமாக, ஆனால் மிக அருகில் இருந்து கொண்டே, சில காலமாக இயக்கி வருவதாகவும், தனக்கு உத்தரவிட்டு வருவதாகவும், அந்த உத்தரவை தன்னால் மீற முடியவில்லை என்றும் கூறி கண் கலங்கினான். அந்த இளைஞனின் பெற்றோரை வரவழைத்து அவனைப் பற்றிய பல விவரங்களை கேட்டறிந்த பின் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மாத காலத்தில் அந்த இளைஞன் நலம் பெற்றான்.

***

சரஸ்வதி என்ற இளம் பெண்ணை அவளது பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவள் வேலை பார்த்த ஜெராக்ஸ் கடையின் உரிமையாளர் அவளைத் தவறான நோக்கத்தில் பேசி, தொட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றும் பெற்றோரிடம் வலியுறுத்தவே, அவர்கள் அதே கடையில் பணி புரியும் மற்ற இரண்டு பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  சரஸ்வதியின் சமீபத்திய பேச்சு, செயல், நடத்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவளது தோழிகள் மூலம் அறிந்து மனவேதனை அடைந்தனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவத்தை நடந்தது போல் அவள் கூறியதை தோழிகள் நம்பவில்லை. உரிமையாளர் எவ்வளவு கண்ணியமானவர் என்பதை அவர்கள் எடுத்துரைத்த பின்னர் தான் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். அவள் சொன்ன தகவல்களையும் அவள் பரிசோதனையின் போது நடந்து கொண்ட விதத்தையும் வைத்துப் பார்க்கும் போது அவள் ஓர் முதிர்மன நோயால்[psychosis] பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சரஸ்வதியின் எண்ணவோட்டங்களையும் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவளது சந்தேகக் குணமும் புனைவு நம்பிக்கைகளும் நீங்கி, மீண்டும் முழு மனநலம் பெற்றாள்.

***

அப்பா அரசியல்வாதி. ஊரெல்லாம் மேடைமேடையாய் முழங்கி வரும் அவருக்கு வாயில்லா பூச்சியாய், கூச்ச சுபாவமுள்ள மகனாய் முப்பது வயது பாஸ்கரன். உறவினர்களிடம் அல்லது குழந்தைகளிடம் கூட சிரித்துக் கல்கலப்பாகப் பேசியது கிடையாது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதும், மிகக் குறைந்த சத்தத்தில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் தான் முழு நேரப் பணி.

எல்லோரும் கண்கூடாகப் பார்க்கும் வண்ணம் திடீரென அவனது செயல்பாடுகளில் சில மாற்றங்கள் நடந்தன. தனக்குத் தானே பேசுவது, யாருக்கோ சைகையில் பேசுவது போல் ஜாடை காட்டுதல், அழுதல், கண்ணீர் விடுதல், அறை மற்றும் குளியலறையின் அனைத்து ஜன்னல்களையும் மூடுதல், சில சமயம் பெற்றோரிடம் கண்மூடித்தனமாகக் கோபப்படுதல் போன்றவைகளால் பெற்றோரும் சகோதரர்களும் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும்,  தனது பிரச்னைகள் தெரியாமல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் விரைவில் தான் கொல்லப்படவிருப்பதாகவும் அவன் கூறிய போது குடும்பமே பீதிக்குள்ளானது. சில மாத சிகிச்சைக்குப் பின்னர் பாஸ்கரன் நலமடைந்தான்.

***

ஒரு நடுத்தர வயதுப் பெண். நான்கு இளைஞர்கள் சில ஆண்டுகளாக தன்னைப் பின் தொடர்வதாகவும், தெருவில், கடைகளில் பொருள் வாங்கும் நேரங்களில், ஹோட்டலில் சாப்பிடும் நேரங்களில் தொந்தரவு செய்வதாகவும், தெருவுக்கு வந்தாலே தன்னைப் பின் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள் என்றும், பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் ஒரு நாள் போலீசில் புகார் செய்தாள். விசாரணை நடைபெற்றது. நான்கு இளைஞர்களும் குற்றமற்றவர்கள் என்பதும் இந்தப் பெண்ணுக்கு மன நோய் பாதித்துள்ளது என்பதும் ஊர்ஜிதமானது.

***

இவர்கள் எல்லோரும் மனச்சிதைவு நோயாளிகள். அதீத சந்தேகங்களும், மாயத் தோற்றங்களும், மாயக் குரல்களும் அவர்களை வாட்டி வதைக்கும். இத்தகைய மாய உணர்வுகளே மனச்சிதைவு நோய்களின் மிக முக்கியமான அறிகுறிகளாகும்.

மனச்சிதைவு என்பது ஒரு தீவிர மனநலக் கோளாறு. அசாதாரண நடத்தை. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்வதில் சிக்கல். தம் உணர்வுகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிப்பதில் சிக்கல். பிரமைகள். மருட்சி. ஒழுங்கற்ற சிந்தனைகள். மன பேதலிப்பு.

இன்று உலகளவில் சுமார் 50 மில்லியன் மனச்சிதைவு நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 7 மில்லியன் மனச்சிதைவு நோயாளிகள் உள்ளனர். இவர்களில் பாதிப் பேர்கள் மட்டும் மருத்துவ உதவியை நாடுகின்றனர். 7% பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆதரவின்றி வீதிகளில் திரியும் பெரும்பாலான மனநோயாளிகள் மனச்சிதைவு நோயாளிகளே!

இவர்கள் தனக்கு மனநோய் என்பதை ஏற்க மறுப்பார்கள். ஆகவே மருந்து உண்ண ஒத்துழைக்கமாட்டார்கள். மாத்திரை மருந்துகளை பிறர் அறியாமல் வெளியில் எறிந்து விடுவார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல. இவர்கள் எதிர்பார்ப்பது புரிதலையும் அரவணைப்பையும் தான்.

மனச் சிதைவிற்கான பிரதான காரணங்கள்;

மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்; மூளையில் வேதியியல் மாற்றங்கள் – டோபமைன், குளூட்டோ மேட் போன்ற நரம்பு கடத்திகளில் ஏற்படும் சிக்கல்கள்; சாரமற்ற வாழ்க்கைச் சூழல்; மன அழுத்தம்; போதைப் பழக்கங்கள், வாழ்வில் குறுக்கிடும் அதிர்ச்சிகள், அவமானங்கள், ஆத்திரங்கள் போன்ற குடும்பக் குழப்பங்கள்.

மனச் சிதைவு ஏற்படுவதற்கு முன் இவர்களின் குண இயல்புகள்; சமூக உறவுகள் மிகவும் குறைவு; அன்பு இல்லாத நிலை; பிறரிடம் நம்பிக்கை இல்லாமை மற்றும் வெறுப்பு; ஒதுங்கியிருத்தல்; எதிலும் ஈடுபாடின்றி பட்டும் படாமலும் இருத்தல்; அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வுடன் தனித்திருத்தல்; எப்போதும் மன அழுத்தம். [சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களின் அறிவுத் திறன் மங்காமலிருக்கும்]

பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் ஏமாற்றம், வறுமை, அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் வாழும் பதின்பருவப் பிள்ளைகள் ஆகியோருக்கும் இந்நோய் வர வாய்ப்பு உள்ளது.

நிஜத்தில் நடக்காத ஒன்றை உண்மை போல் உறுதியாக நம்புதல்; அடிக்கடி சந்தேகப்படுதல், உண்மையை எடுத்துச் சொன்னதற்குப் பிறகும் அதை நம்ப மறுத்தல்; தன்னைக் கடவுளாக, தனிச் சிறப்பு பெற்ற பிறவியாகக் கருதுதல்; தன் துணை மீது தீவிர சந்தேகம் கொள்ளுதல்; சுற்றியுள்ள அனைவரையும் சந்தேகித்து அடிப்படையற்ற வகையில் குற்றஞ்சாட்டுதல்; மாயக் குரல்கள் கேட்பதாகவும், யாரோ தன்னைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறுதல்; யாருமேயில்லாத நிலையில் உருவங்கள், காட்சிகள் தெரிவதாகக் கூறுதல்; தானாகப் பேசுதல், சிரித்தல்;பொருட்களை உடைத்தல்,ஆக்ரோசமான செயல்களில் ஈடுபடுதல்; தற்கொலை எண்ணம் மற்றும் முயற்சி செய்தல்; தூக்கமில்லாமலும் தன்னைப் பேணாமலும் இருத்தல்..  இவை போன்ற அறிகுறிகள் எவரிடம் காணப்பட்டாலும் மனச்சிதைவின் வெளிப்பாடுகளே.

கணிதவியல் மேதை ஜான்நாஷ் மனச்சிதைவினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, நிவாரணம் அடைகின்றார். அதன் பின்னரும் கூட அவரது காதினுள் மாயக் குரல் கேட்கிறது. ஆயினும் அவர் தன் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். 1994-ல் கணிதம் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். ‘A BEAUTIFUL MIND’    எனும் ஹாலிவுட் படம் இவரது வாழ்க்கை மற்றும் மனச்சிதைவு நோயை சித்தரிக்கிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் மனச்சிதைவு நோய் அறிகுறிகளுக்கு மிக அற்புதமான மருந்துகள் உள்ளன.

அனகார்டியம்,ஹையாசியாமஸ்,ஸ்டிரமோனியம், லாச்சசிஸ், கன்னபிஸ் இண்டிகா,பிளாட்டினா,பாஸ்பரஸ் போன்ற மருந்துகள் அதிகளவிலும் முக்கியமாகவும் பயன்படக் கூடிய மருந்துகளாகும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

<!–

–>