மின்துறையும் தனியாரிடம்? 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மசோதா சொல்வதென்ன?

 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மின்சார  சட்டத்திருத்த மசோதாவால் தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்தாகக் கூடிய  நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மருத்துவம், மின்சாரம், தொழில்நுட்பம், மீன்வளம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்டவை தொடர்பான 19 மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. 

இவற்றில், முக்கியமான ஒன்று, மின்சார சட்டத் திருத்த மசோதா 2021. இந்த சட்டம் இயற்றப்பட்டால், பாரத் பெட்ரோலியம், இஸ்ரோ, ரானுவ தளவாடங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததைபோல், மாநில அரசுகளிடம் உள்ள மின் விநியோகம் முழுவதுமாக தனியார்மயமாகும் சூழல் உருவாகும். 

மின்சாரச் சட்டம் 2003இல் பல முக்கிய  திருத்தங்களைச் செய்து புதிய திருத்தச் சட்ட வரைவை கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மக்களின் கருத்திற்காக வெளியிடப்பட்டது. நாடே பெருந்தொற்றுக்கு பயந்து வீட்டில் முடங்கியிருந்ததால் பலருக்கு இந்த மசோதாவை பற்றி தெரியவில்லை.

இந்த திருத்தப்பட்ட மசோதாவில், மாநில மின்வாரியங்ளுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதனிடம் அனுமதி பெற்று மின் விநியோகத்தில் நேரடியாக தனியார் நிறுவனம் ஈடுபடலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், மாநில அரசுகள் மக்களுக்கு அளித்து வரும் இலவச மின்சாரம் உள்ளிட்ட மானியங்களை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 80 ஆகும். தற்போது இந்த இணைப்பின் எண்ணிக்கை 3 கோடியாக உயா்ந்திருக்கக்கூடும்.

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒட்டு மொத்த மின் இணைப்பில் 22 லட்சம் மின் இணைப்புகள் விவசாயத்திற்கான மின் இணைப்புகள். 11 லட்சம் குடிசை சாா்ந்த மின் இணைப்புகள். 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 500 யூனிட், குடிசை தொழிலுக்கு 100 யூனிட், வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசமாக மாநில அரசு வழங்கி வருகிறது.

மின் இணைப்பை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் பெரும் தொழிற்சாலைகள், வணிக வளாகங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு வழங்கும் மானியத்தை ஈடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு மின் விநியோக உரிமையை வழங்குவதால் இலவச மின்சாரம், மானியங்களுக்கு பதிலாக அதற்கான தொகையை பொதுமக்களின் வங்கி கணக்குகளில் மாநில அரசுகள் செலுத்திக் கொள்ளலாம் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, 20 குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் தனி மீட்டர் வைத்து முதல் 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும். ஆனால், இந்த மசோதா நிறைவேறினால், குடியிருப்புவாசிகள் மின் கட்டணத்தை செலுத்திய பிறகு, அவர்களுக்கான மானியமானது வீட்டின் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கே வந்து சேரும்.

மேலும், தங்கள் விளைச்சலுக்கு போதிய விலை கிடைப்பதில்லை, மழை இல்லை என தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் மத்தியில், விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இலவச மின்சாரம் தான். இந்த மசோதா நிறைவேறினால் எஞ்சியுள்ள விவசாயிகளும் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள் வேளாண் துறையினர் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

தனியார் நிறுவனங்களுக்கு உரிமை வழங்கல், கொள்முதல், விற்பனை என அனைத்திற்கும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கே உரிமை என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது.

பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன், அனைத்து நிறுவனங்களும் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பல ஆண்டுகளாக தமிழ்நாடு மின்வாரியம் போன்ற மாநில அரசுகளின் துறைகள் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிய கட்டமைப்பை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவாக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், நமது நாட்டு வளங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளவும் இந்த மசோதாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டக்கூடும்.

மாநில மின்வாரிய ஊழியர்கள் நிலை…

சென்னை பெருவெள்ளம், புயல் போன்ற பல பேரிடர் காலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இரவு பகலாக உழைத்து விரைவில் மின்சார இணைப்பை ஏற்படுத்தியவர்கள் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் என்றால் யாராலும் மறுக்கமுடியாது.

இந்த மசோதா கொண்டு வருவதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்டதை போல நஷ்டம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும்.

மேலும், இந்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் உள்ள மின் ஊழியர்கள் நாளை(ஆக. 10) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய மின்சார மசோதா மூலம், மக்களுக்கு பிடித்த நிறுவனங்களில் மின் இணைப்பை பெறலாம், சேவை பிடிக்கவில்லையெனில் வேறு நிறுவனங்களிடம் இணைப்பை பெறலாம் என்ற கவர்ச்சிகர அம்சங்கள் இருந்தாலும், மக்களுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அம்பானி முதல் குடிசைவாசி வரை அனைவருக்கும் ஒரு யூனிட்டுக்கு ஒரே விலை என்ற நிலை உருவாகவுள்ளது. 

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சில நாள்களிலேயே மின்சாரம் என்பது ஆடம்பரப் பொருளாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>