மின் கம்பி அறுந்து விழுந்ததில் கல்லூரி மாணவி கை வெட்டி அகற்றம்: பெற்றோர் வேதனை

namakkal_fire_accident1

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கல்லூரி மாணவி ஹேமா.

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில், மாடியில் நின்ற கல்லூரி மாணவியின் இரு கைகளும் கருகின. அதில் இடது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி தியாகராஜன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு ஹேமா (வயது 21) என்ற மகளும், ஜெகதீஷ் (18) என்ற மகனும் உள்ளனர். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கணினி பொறியியல் துறையில் ஹேமா இறுதியாண்டு படித்து வருகிறார். அவரது தம்பி ஜெகதீஷ் ஈரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயில்கிறார்.

தீபாவளி பண்டிகையான நவ.14ஆம் தேதியன்று ஆண்டிக்காடு பகுதியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததால் வீட்டின் மாடியில் நின்றபடி செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கம்பத்தில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து வேகமாக சுழற்றியபடி வந்து மாணவி ஹேமா மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

தீபாவளியன்று புத்தாடையுடன் மாணவி.

பின்னர், ஆவாரங்காட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்குள்ள மருத்துவர்கள் கைவிரிவிக்கவே, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஹேமா அனுமதிக்கப்பட்டார். அங்கு மின்சாரம் பாய்ந்த இடது கையை மருத்துவர்கள் ஓரளவு குணப்படுத்திய நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக கையை அகற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவே, கடந்த புதன்கிழமையன்று ஹேமாவின் இடது கை அகற்றப்பட்டது. வலது கையிலும் மின்சாரம் பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின் கம்பி அறுந்து விழுந்தது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் இப்பிரச்னை கொண்டு செல்லப்படவில்லை. 15 நாள்களுக்கு பின் பாதிக்கப்பட்ட ஹேமாவின் குடும்பத்தினருக்கு பாஜகவினர் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கி உதவினர். இத்தகவல் மூலமே மாணவி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த தகவல் வெளியில் தெரியவந்தது.

இதுகுறித்து மாணவி ஹேமாவின் தந்தை தியாகராஜன் கூறியது:

தீபாவளியன்று பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது தான் மின்சார கம்பி அறுந்து அவர் மீது பட்டதில் கைகள் செயலிழந்து அழுகும் நிலைக்கு ஆளானது தெரிந்தது. அதன்பின் ஈரோடு, கோவை தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் இடது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதுவரை ரூ.7 லட்சம் வரை செலவாகிவிட்டது. அரசியல் பிரமுகர்கள் சிலர் ரூ.25 ஆயிரம் கொடுத்து உதவினர். மாவட்ட ஆட்சியர் செல்லிடப்பேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். என்னுடைய மகளின் வாழ்வுக்கு தேவையான உதவி, அவருக்கு செயற்கை கை, அரசு வேலைவாய்ப்பு ஏதாவது ஒன்றை செய்து கொடுத்தால் அவரது எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இருப்போம். காவல் நிலையத்தில் வழக்கு தொடர்வது பற்றி முடிவு செய்யவில்லை என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறியது: கல்லூரி மாணவி மீது மின்சாரம் தாக்கியது தொடர்பான தகவல் இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. இன்று தான் (திங்கள்கிழமை) கட்செவி அஞ்சல் மூலம் தெரியவந்தது. காவல் கண்காணிப்பாளரிடத்திலும் இது பற்றி பேசியுள்ளேன். மாணவிக்கு தேவையான உதவியை செய்து கொடுக்க முயற்சிக்கிறேன். அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறேன் என்றார்.

<!–

–>