மீன் வளம் காத்து மனித நலம் காப்போம்

சர்வதேச வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 11.2 லட்சம் கோடி ரூபாய் (150 பில்லியன் டாலர்) மதிப்புள்ள கடல்வாழ் உயிரின உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நீர்வாழ் உயிரின உணவுச் சந்தையினை விரிவுபடுத்திய உலகமயமாக்கல், பண்ணைகளில் வளர்க்கப்படும் நீர்வாழ் உயிரினங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால், அதேவேளை நோய்க்கிருமிகளும், நோய்களும் எளிதாக பரவுவதற்கும் அது காரணமாக அமைகிறது.

மீன் பண்ணைகளில்  நோயின்றி மீன்களை வளர்த்தெடுக்க பயன்படுத்தும் பல்வேறு மருந்துகளின் தொடர் பயன்பாடு நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றலுக்கு (ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்)  காரணமாக அமைகிறது. நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்  பல உயிர் காக்கும் மருந்துகளின் சக்தியை இந்த நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் இழக்க செய்யும். மீன் வளர்ப்பினில் பாக்டீரியா நோய்களைத் தணிக்க உதவும் எதிர்உயிர்மிகளின் (ஆன்டி பயாட்டிக்) தொடர்ச்சியான பயன்பாடு நுண்கிருமிகளின் நிலைப்புத் தன்மைக்கும், அந்த நுண்கிருமிகள் பரவுவதற்கும் காரணமாக அமைகிறது.

இவ்வாறு மீன் பண்ணைகளில் உருவாக்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு பாக்டீரியா எதிர்உயிர்மி எதிர்ப்பு மரபணுக்கள் உருவாகக் காரணமாக அமைகிறது. நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு பாக்டீரியாக்களின் ஆபத்து நிறைந்த இடமாக இருக்கும் மீன் பண்ணைகளில் ரெசிஸ்டோமின் என்ற மரபணு மதிப்பீடு உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. 

மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான எதிர்உயிர்மிகள் மனித மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுவதால் மனித உடலிலும் நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இத்தாக்கம் மனித சமூகத்தின் தீவிர நோய் பரவலுக்கும் நோய்த் தொற்று சிகிச்சை தோல்வி அதிகரிப்பிற்கும் காரணம் ஆகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற முக்கிய மீன் உற்பத்தி மாநிலங்களில் உள்ள கடல் நீர் மற்றும் நன்னீர் மீன்பண்ணைகளில் எதிர்உயிர்மி மருந்துகளின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸô போன்ற மாநிலங்களில் இத்தகைய மருந்துகளின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

ஏற்றுமதி சார்ந்த கடல்நீர் மீன் வளர்ப்பில் எதிர்உயிர்மி மருந்துகள், மருத்துவ  ரீதியான பொருட்களின் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் தரநிலைகள், வழிகாட்டுதல்கள் வழங்கக்கூடிய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவின் மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு  வகிக்கும் நன்னீர் மீன்வளர்ப்பினை கண்காணிக்க  எவ்வித ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை. 

அதாவது ஏற்றுமதியாகும் கடல் உணவு வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் அதே வேளை உள்நாட்டு நுகர்வோர் ஆரோக்கியத்தின் மீது எவ்வித அக்கறையும் எடுக்கப்படுவதில்லை.

உணவிற்கான மீன் உற்பத்தியில் மட்டுமின்றி அலங்கார மீன் உற்பத்தியிலும் எதிர்உயிர்மி மருந்துகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் அலங்கார மீன் வளர்ப்பு சமீப ஆண்டுகளில் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்றும் இது நோய்களுக்கும் நீரின் தரம் குறைவதற்கும் காரணமாக அமையும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலான இறால் பண்ணைகள் தங்களுக்கு தேவையான இறால் குஞ்சுகளை பாதுகாக்கப்பட்ட குஞ்சு பொரிப்பகங்களில் இருந்து பெறுகின்றன. குஞ்சு பொரிப்பகங்களில் இருந்து பண்ணைகளுக்கு கொண்டுவரும் போது ஏற்படும் இறால் இறப்பினை தவிர்க்க அல்லது குறைக்க தவறான அனுமானத்துடன்  எதிர்உயிர்மி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்உயிர்மி மருந்துகளின் பயன்பாடு  விஞ்ஞான ரீதியிலன்றி பண்ணை விவசாயிகளின் அனுபவத்தை கொண்டு உபயோகிக்கப்படுகின்றன. 

எதிர்உயிர்மி மருந்து கொண்டு வளர்க்கப்பட்ட இறால்களை நிராகரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை இறால் வளர்ப்பில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் வகுத்துள்ள ஏற்றுமதி தர நிர்ணய கோட்பாட்டினை உறுதி செய்யும் வகையில் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தற்போது இறால்கள் மீது தர ஆய்வுகளை நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஆய்வுகள் ஏற்றுமதியாகும் இறால்களுக்கு மட்டுமே பொருந்தும்.  உள்நாட்டு நுகர்வுக்கான இறால் உணவுகளுக்கு எவ்வித ஆய்வுகளும் இல்லை.

கேரளம், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற தென் இந்திய கடலோர ஈரநிலங்களில் அதிக அளவு எதிர்உயிர்மி எதிர்ப்பு பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சந்தைகளில் இருந்து பெறப்பட்ட மீன்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் மூன்றில் இரண்டு பங்கில் காணப்படும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள்  குறைந்தது இரண்டு எதிர்உயிர்மி மருந்துகளின் எதிர்ப்பிகளாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சையில்லா பயன்பாடுகளுக்கு எதிர் உயிர்மி மருந்துகளின் பயன்பாட்டைத் தடுக்க கடுமையான சட்ட விதிகள் இருக்கும்போதிலும் இம்மருந்து பயன்பாட்டினை   கண்காணிக்க செயல் திட்டம் இல்லாததால் மீன்வளர்ப்புத் துறையில் இதற்கான கொள்கைகளை  வகுப்பது கடினமாக இருக்கிறது.

சுகாதாரச் சூழலை மேம்படுத்துதல், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நொதியூக்கிகள் (என்சைம்கள்),  நலம் பயக்கும் பாக்டீரியாக்கள் (புரோபயாடிக்குகள்), அவற்றுக்கான உணவுப் பொருள்கள் (ப்ரீபயாடிக்குகள்), அமிலங்களின் பயன்பாடு, எதிர் உயிர்மி மருந்துகளுக்கு மாற்றாக எதிர் நுண்ணுயிரிப் புரதங்கள் (பாக்டீரியோசின்கள்), நுண்ணுயிர்க் கொல்லி புரதத்தூண்டிகள் (ஆன்ட்டிமைக்ரோபியல் பெப்டைடுகள்), பாக்டீரியா உண்ணிகளின் (பாக்டீரியோபேஜ்கள்) பயன்பாடு மீன் வளத்தினை மேம்படுத்தவும், அவற்றின்  தொற்று நோய்களைக் குறைக்கவும் செய்யும் நல்ல வழிமுறைகளாக இருக்கும்.

தற்போதைய சூழலில் இந்திய மீன்வளர்ப்பில் எதிர் உயிர்மி மருந்து பயன்பாடு குறித்த கடுமையான கண்காணிப்பு மனித ஆரோக்கியத்திற்கும் மீன்வளர்ப்பு மேம்பாட்டிற்கும் அவசியமாகும்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>