முதியோர்களை மதிப்போம், கொண்டாடுவோம்!

வீட்டிற்காகவும் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்ந்துபோன முதியோரின் முக்கியத்துவத்தைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி முதியோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வியன்னா சர்வதேச முதியோருக்கான செயல் திட்டம் உள்ளிட்ட அமைப்புகளின் முயற்சியால் 1982 ஆம் ஆண்டு உலக அரங்கில் முதல்முறையாக ‘முதியோர் நலன்’ குறித்து பேசப்பட்டது. அதை ஏற்றுகொண்ட ஐ.நா. அவை முதியோர் நலனை வலியுறுத்தும்விதமாக, டிசம்பர் 14, 1990 அன்று, (தீர்மானம் 45/106 மூலமாக) அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் நாளாக அறிவித்தது. 

இதன்படி, உலகம் முழுவதும் உள்ள முதியோர்களை மதிக்கும் விதமாகவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஐ.நா. அவையின் அறிவிப்பைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு முதியோர் நாளின் கருப்பொருள்: வயது முதிர்வை நாம் எதிர்கொள்ளும் முறையை தொற்றுநோய் மாற்றுமா? (Pandemics: Do They Change How We Address Age and Ageing?)

ஆனால், வழக்கம்போல அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்று, முதியோர் தினத்தன்றும், தங்கள் வீட்டில் உள்ள முதியோர்களுடன் எடுத்த புகைப்படங்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் பதிவிடுவதோடு இன்றைய தலைமுறையினரின் கடமை நின்றுவிடுகிறது என்பதுதான் இன்றைய வருத்தத்திற்குரிய செய்தி. 

தாய்-தந்தை ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து இந்த சமூகத்தில் ஒருவராக அடையாளப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் பல சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். தங்களுக்குக் கிடைக்காத சந்தர்ப்பங்கள், மகிழ்ச்சியான தருணங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் ஆசைகளைச் தியாகம் செய்த/செய்துகொண்டிருக்கும் பெற்றோர்கள்தான் ஏராளம். 

தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் படிக்கவில்லை என்றாலும் நம் அடுத்த தலைமுறையாவது உலகத்தின் அனைத்து அறிவையும் பெற வேண்டும் என்று தங்கள் உழைப்பை ஈடுகொடுத்து, குழந்தைகளுக்குக் கல்வியறிவைக் கொடுக்கின்றனர் பெற்றோர்கள். அவ்வாறு அனைத்து இன்னல்களையும் தாண்டி, சமூகத்தில் அடையாளப்படுத்திய பெற்றோர்களை, அவர்களது கடைசி காலத்தில் பிள்ளைகள், உதவாதவர்களாகப் பார்ப்பது வேதனைக்குரியது.

பெரும்பாலான வீடுகளில் முதியவர்களை விலக்குவது, உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களைப் பெருமளவில் பாதிப்படையச் செய்கிறது. எந்தவோர் ஆதரவுமின்றி, தனிமையில் மன உளைச்சலில் இருக்கும் சில முதியோர் தற்கொலை முடிவுக்குக்கூட செல்கின்றனர்.

சொத்து, பணம் இருந்தாலும் தொந்தரவாக எண்ணி முதியோர்களைக் காப்பகங்களில் சேர்ப்பது கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், காப்பங்களில் இருக்கும்போது உயிரிழந்த சில முதியவர்களின் உடல்களை வாங்க யாரும் வருவதில்லை என்றும் காப்பகத்தில் உள்ளவர்களே இறுதிச்சடங்கு செய்யும் அவலநிலையும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. 

முதியவர்கள் துன்புறுத்தப்படுதலைத் தடுக்கவும், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் ஜூன் 15 ஆம் தேதி முதியோர் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் முதியவர்களுக்குத் தேவையானவற்றைக் கிடைக்கச் செய்வது. 

முதியோர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வது, வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது, முதியோர்களின் கருத்துகளுக்கு அரசுகள் மதிப்பளிப்பது, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மட்டுமின்றி சட்டப் பாதுகாப்பும் வழங்க வழிவகை செய்வது உள்ளிட்டவை இதன் கொள்கைகளாக இடம்பெற்றுள்ளன. 

ஆனால், வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமா? என்றால் இல்லை. முதியோர்களுக்கு பொருளாதார ரீதியாக அரசு ஆதரவளித்தாலும் பிள்ளைகள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் ஈடாகாது. 

ஒரு குடும்பத்தில் மூத்தவர்கள் இருப்பது அந்த குடும்பத்திற்கே ஒரு வெளிச்சம் போன்றது என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார்கள்.

ஐ. நா. அறிக்கையின்படி, உலகளவில், 2019- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 70 கோடி முதியவர்கள் இருந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தெற்காசிய நாடுகளில் 26 கோடி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 20 கோடிக்கும் அதிகமான முதியோர்கள் இருக்கின்றனர். அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் ஐ. நா. கூறியுள்ளது. 

வாழ்க்கையில் கல்வியறிவு, பொருளாதார வசதி என அனைத்தையும் பெற்றிருந்தாலும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை வழிநடத்த முதியவர்கள் தேவை. அவர்களது வாழ்க்கை அனுபவங்களை எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அதையும் தாண்டி நம்மை உருவாக்கிய பெற்றோர்களை அவரது இறுதிநாள் வரை பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் அத்தியாவசியக் கடமை. பெற்றோர்களைப் புறக்கணிக்கும் நாமும் ஒருநாள் முதுமை நிலையை அடையத்தான் போகிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுவார்கள்; அதேபோன்று முதியோர்களும் குழந்தைகளும்கூட ஒன்றுதான். சிறுவயதில் நாம் செய்யும் சேட்டைகளைக்கூட ரசிக்கும் பெற்றோர்களைப் பிற்காலத்தில் தொந்தரவாக நினைப்பது இந்த உலகத்தை விட்டுச் செல்லும் தருணத்தில் அவர்களுக்கு எவ்வளவு மன வலியைத் தரும் என்பதை பிள்ளைகள் இந்நாளிலாவது உணர வேண்டும். 

‘கடந்த காலமோ திரும்புவதில்லை; நிகழ்காலமோ விரும்புவதில்லை; எதிர்காலமோ அரும்புவதில்லை’ என்ற கவிஞர் வாலியின் வரிகள்தான் இன்றைய 60, 70களின் நிலை! அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, பிள்ளைகளின் அன்பும் ஆதரவும்தான். முதியவர்களைக் கண்ணியதோடு, மனசாட்சியோடு நடத்தினாலே போதுமானது. 

குழந்தைப் பருவம் போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து, முதுமை எனும் சவாலான காலகட்டத்தை நாமும் ஒருநாள் எதிர்கொள்ளத்தான் போகிறோம் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு,

முதியோர்களை மதிப்போம்! கொண்டாடுவோம்!

<!–

–>