முதியோர் அருமை அறிவோம்!

சமீப காலமாக பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர்விட்டு முளைக்கத் தொடங்கியிருக்கிறது முதியவர்களுக்கான பகல் நேர மையங்கள் (டே கேர் சென்டர்). இதென்ன புதியதாக இருக்கிறதே என விசாரிக்கத் தொடங்கியதில் பல சிறப்பான தகவல்கள் கிடைத்தன.  

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்று சொல்வார்கள்.  குழந்தைகளைப் போல முதியவர்களை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவு, கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் முதியோர் இல்லங்கள் பெருகின.  அதற்கு மாற்றாக வந்திருக்கும் இந்த முதியோர் பகல் நேர மையம் பல சாதகங்களை தாங்கி நிற்கிறது.  

‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி’ என்று வீட்டுக்கு வீடு பெரியவர்களின் வாய்ச்சொல்லை வேதவாக்காக மதித்து நடந்த காலம் ஒன்று உண்டு.  ஆனால் இன்று முதியவர் ஒருவர் பேருந்தில் ஏறினால் ‘ஏன் பெருசு, நீ வீட்டுலயே இருக்க வேண்டியதுதான. நீ நிதானமா நடந்து ஏறி நான் எப்ப வண்டிய எடுக்கறது’ என நடத்துனர்கள் அவர்கள் மீது பாய்கிறார்கள்.  

கூட்டுக்குடும்ப வாழ்வு முறை குறையத் தொடங்கியதால் அவர்களுக்கான முக்கியத்துவமும் படிப்படியாக அருகிவிட்டது.  தனிக்குடித்தன பெருக்கம் காலத்தின் கட்டாயமானதால் யாரையும் குறை சொல்ல முடியாது. இன்றைய நிலையில் முதியவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொண்டாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவர்.  

‘வயசாயிடுச்சுல்ல.. மூலையில உக்காரு.  போதும் ஊர சுத்தினது. கைய கால உடைச்சிக்கிட்டு வந்தா யார் கவனிச்சுக்கறது’  என்ற வசனத்தை தொலைக்காட்சித்தொடர் ஒன்றில் கேட்க நேர்ந்தது.  இதைப் போன்ற பேச்சுக்கள் அவர்களை பெரிதும் அவமானப் படவைக்கின்றன.  பொது இடங்களில் இப்படி கேட்க நேரிட்டால் கூனிக்குறுகி விடுகின்றனர்.  

இந்த பரபரப்பான உலகில் முதியவர்களை கவனிக்க அதிக பொறுமை தேவைப்படுகிறது. அவர்களிடம் உரையாட, அன்பாக விசாரிக்க, இளைய தலைமுறையினரிடம் பொறுமை இல்லை. கால மாற்றத்திற்கு ஏற்ப அவர்களும் இதையெல்லாம் தற்போது இளையவர்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.  நம்மை எப்படி பலப்படுத்திக் கொள்வது என யோசிக்கின்றனர்.  இதற்கு ஒரு சிறந்த வடிகால்தான் இந்த மையம்.  

நாமெல்லாம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது போலவே முதியவர்களையும் இந்த மையத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். நல்ல பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் பணி நிறைவுக்குப் பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்க விரும்புவதில்லை.  ஓய்வு தேவை என பிறர் சொல்லக் கேட்டு தன்னுடைய அனைத்து வேலைகளுக்கும் பிறரை நம்பி இருந்து காலப்போக்கில் அதுவே பழகிவிடுகிறது. பிறகு மனதளவில் பலவீனப்பட்டு விடுகிறார்கள். தம்மால் முடியும் என்பதையே மறக்கின்றனர்.  

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேலைக்குச் செல்வது போலவே இந்த மையத்துக்கும் முதியவர்கள் சென்று வருகிறார்கள். அவர்கள் வயதுடைய முதியவர்கள் இதே நேரத்தில் அங்கு வருகிறார்கள். ஒருவருக்கொருவர் மனம் விட்டு மணிக்கணக்கில் பேசுகிறார்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் இம்மையம் செயல்படுகிறது. இதற்கென கட்டணம் உண்டு. மதிய உணவை அவரவர் வீட்டிலிருந்தே கொண்டுவர வேண்டும். காலை, மாலை இடைவெளி நேரத்தில் சுண்டல், பணியாரம் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகள் மட்டும் கொடுக்கிறார்கள். 

இங்கே பல விதமான புத்தகங்களை வாசிக்கலாம்; விரும்பிய படங்களைப் பார்க்கலாம்; மனம் நினைப்பதை எழுதலாம்.  விரும்பினால் பிறருக்குப் பாடம் நடத்தலாம். இத்துடன் அங்கேயே தேவைக்கேற்ப மருத்துவர்கள் வருகிறார்கள். மனநல ஆலோசகர்கள் வாரம் ஒருமுறை வந்து அவர்களுடன் அளவளாவுகிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  

வயதான காலத்தில் உடல் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுக்காது. அதுவே மனநலனையும் குலைத்துப் போடும்.  ஒருவர் மனதளவில் பலவீனப்பட்டுப் போனால் தேற்றுவது மிகக் கடினம். வீட்டில் பெரியவர்கள் இருப்பது ஒரு பெரிய அகராதி இருப்பதற்கு சமம்.  தம் அனுபவங்களின் மூலம் அனைத்துக்கும் பொருள் தருவார்கள். சில நேரங்களில் வாழ்க்கையில் நம் வழி தவறினாலும் நம்மை சரியான திசைக்கு மாற்றுவார்கள்.  

இவை மட்டுமல்ல, பல்வேறு இடங்களில் பல சிறப்பான காரியங்களை பெரியவர்கள் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.  காலையில் நடைப்பயிற்சி குழு உருவாக்கி உடல்நலனை பராமரிப்பது, சிரிக்கும் குழு அமைத்து விதவிதமாக சிரித்து பழகுவது, ஒன்றாக இணைந்து மரம் நடுவது, வாழ்விடங்களை தூய்மைப்படுத்துவது, நட்ட மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, நீர் நிலைகளைப் பராமரித்து தூர் வாருவது, குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் வசிப்பிட மக்களுக்கிடையே போட்டிகள் நடத்தி பரிசு கொடுப்பது என தங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்பவர்களுக்கு வயது என்பது வெறும் எண்தான். 

‘வீடடங்கி கிடங்க’ போன்ற வார்த்தைகளை அவர்களிடத்தில் பிரயோகிக்காமல் அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வார்த்தைகளை விதைத்தால் அது அவர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும். நம்மைப் பெற்று வளர்த்தவர்களுக்கு நாம் செய்யும் சிறு கைம்மாறு இதுதானே!

முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுள் ஒன்று தம்முடன் பயணித்த வாழ்க்கைத் துணையை இழப்பது. முதுமையில் தனிமை கொடுமை. இளமைக் காலங்களில் மனைவி என்பவள் கணவனை சார்ந்து இருப்பதுபோல் தெரியும். ஆனால் முதுமையில் தன் அனைத்து தேவைகளுக்கும் மனைவியையே ஒரு ஆண் சார்ந்து இருக்கிறான். பெண் மனவலிமையுடன் தனித்து வாழ்ந்து விடுகிறாள்.  

மனைவியை முதுமையில் இழந்து தவிக்கும் ஆண்களின் நிலை பரிதாபம். ஆணுக்கு உடல் வலிமை உண்டே தவிர மனவலிமை குறைவு.  அதனாலேயே தனி மனிதனாக நீண்ட நாள் அவனால் வாழமுடிவதில்லை.  இப்படி இணையை இழந்தவர்களுக்கு இது போன்ற மையங்கள் பெரும் வரப்பிரசாதம். இதனால் அவர்களின் வாழ்நாள் நீடிக்கிறது. வாழும் நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள்.  

பல வீடுகளில் இன்னும் மகனின் கடனை அடைக்க பெற்றோரின் பணம் தேவைப்படுகிறது. ஆனால், பணிநிறைவுக்குப் பின் தனக்கான செலவுக்கு பெற்றோர் தங்கள் பணத்தை தங்களுக்கென செலவழித்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதையே பலரும் மறந்து போயினர். இன்னும் சில இடங்களில் பேரப்பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்காக விருப்பம் இருந்தோ இல்லாமலோ தம் இணையை பிரிந்து வாழ்கின்றனர்.  

இன்றைய இளைய தலைமுறையினர் முதியவர்கள் பற்றி முன்வைக்கும் விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட முடியாது.  ஒருபுறம் நவீன உலகின் வேகம் கழுத்தை இறுக்குகிறது. மற்றொருபுறம் முதுமை அடைந்த பெற்றோர் தம்மீது வைத்திருக்கும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடியாத தவிப்பில் உழல்வது என இருதலைக்கொல்லி எறும்பாக துடிக்கிறார்கள். சில நேரங்களில் முதியவர்கள் காட்டும் பிடிவாதம் அளவிடமுடியாததாக இருக்கிறது.   

முதியவர்களின் பிடிவாதத்தை தகர்ப்பதென்பது முரட்டுக்காளையை அடக்குவதற்கு சமம்.  அவர்கள் வாழ்ந்த அந்த காலத்திலிருந்து வெளிவராமல் ஒரு வட்டத்துக்குள்ளாகவே நிற்பார்கள். காலத்திற்கேற்ற நடைமுறை மாற்றங்களை சொன்னாலும் ஏற்றுக்கொள்வதில்லை. நம் உணர்வுகளை, எண்ணங்களை அவர்களிடத்தில் சொல்லியும் புரியவைக்க முடியவில்லை என இளைஞர்கள் கூறுகிறார்கள்.  

பெற்றவர்களைப் பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக்கொண்டு எண்ணற்ற தியாகங்களைச் செய்தவர்களும் இருக்கிறார்கள்.  ஆள்பலம், பணபலம் இருப்பவர்களுக்கே, படுக்கையில் விழுந்துவிட்ட முதியவர்களை பராமரிப்பது பெரும் சிரமமாய் இருக்கும் போது, அதுபோன்ற எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லாத நடுத்தர மக்களின் நிலை மிக மிக கவலைக்குரியது.  இதனால் இளையவர்களும் பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களும் சில விஷயங்களில் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

இருப்பினும் முதியோர் உணர்வுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஏனெனில் இளையவர்கள் தம் வயதில் எதையும் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவர்களாக இருப்பதால் அவர்கள் முதியவர்களை பராமரிப்பதையே ஒரு வாழ்வனுபவமாக, வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி வாழ்ந்து நிறைந்தவர்களைப் பராமரிப்பதால் இறைவன் நமக்கு வழங்கும் ஆசி நமக்கு மாபெரும் மனபலத்தைக் கொடுக்கும். உள்ளத்தில் கோபத்தைத் தேக்காமல், அன்பை மிகுதியாகத் தேக்கி வைப்பதே இவை அனைத்திற்குமான தீர்வாக இருக்கும்.

முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இதைப் போன்ற பகல் பொழுது மையங்கள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதாகவும் புது ரத்தம் பாய்ச்சுவதாகவும் இருக்கிறது.  ஊர்தோறும் இதைப்போன்ற மாற்று ஏற்பாடுகள் தோன்றினால் அவர்களின் உணர்வுகளுக்கு இந்த சமூகம் உண்மையிலேயே மதிப்பளித்தது போல் இருக்கும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>