முஸ்லீம் என்பதால் இவ்வளவு பிரச்னையா ? விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' திரை விமர்சனம்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள ‘எஃப்ஐஆர்’ வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு படிப்புக்கு ஏற்ற சரியான வேலைக்கு முயற்சித்து வருகிறார் இர்ஃபான் அஹமத். தற்காலிகமாக ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐஎஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தமிழகத்தில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கிறது.

இர்ஃபான் அஹமத்தான் அந்த தீவிரவாதி என உளவுப்பிரிவினர் சந்தேகிக்கின்றனர். தனக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க போராடுகிறார் இர்ஃபான். அவரது போராட்டம் வென்றதா? இல்லையா? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம்தான் எஃப்ஐஆர். 

இதையும் படிக்க | விக்ரமா ? துருவா ? வெல்வது யார் ? ‘மகான்’ – திரை விமர்சனம்

இர்ஃபான் அஹமத்தாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என படத்தில் பெண் கதாப்பாத்திரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிதாக காதல் காட்சிகள் இல்லாதது ஆறுதல். கௌதம் மேனனுக்கு இந்தப் படத்தில் கௌரவ தோற்றம். இறுதிக் காட்சியில் அவருடைய குரல் வழியாக சில உண்மைகளை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பது சிறப்பு.

ஒரு முஸ்லீம் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மன நிலைக்கு எதிராக பேசுவது இயக்குநரின் நோக்கமாக இருக்கிறது. எங்கு சென்றாலும்,  நீங்கள் மதவாதியா என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறார் இர்ஃபான்.  அவர் முஸ்லீம் என்பதனாலேயே வேலை கொடுக்கத் தயங்குகின்றனர். அந்த காட்சிகள் ஒரு முஸ்லீம் இளைஞனின் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால் அவரே தவறான பிம்பத்தையும் கட்டமைக்கிறார். அந்தப் படம் உண்மையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தமிழகத்தில் செயல்படுதுபோல் காட்டப்படுவது அந்த சமூக மக்களுக்கு இன்னும் சிக்கலைத் தான் ஏற்படுத்தும். அதனை இயக்குநர் சற்று கவனமாக கையாண்டிருக்கலாம்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மதமாற்றம் பெரிதாக விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில் மதமாற்றம் தொடர்பாக படத்தில் வரும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.  

எல்லா காட்சிகளுமே மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கிறது. விஷ்ணு விஷால் கதாப்பாத்திரம் மேலோட்டமாக காட்டப்படுவது புரிகிறது. காரணம் அவர் தீவிரவாதியா இல்லையா என்ற சந்தேகத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த அவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருக்கும் அவரது அம்மாவுக்குகூடவா விஷ்ணு விஷாலைப் பற்றி தெரியாமல் இருக்கும். 

மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா என பிற கதாப்பாத்திரங்களும் மேலோட்டமாகவே இருக்கிறது. விஷ்ணு விஷாலைத் தவிர்த்து வேறு எந்தக் கதாப்பாத்திரமும் மனதில் பதியவில்லை. இருப்பினும் இடைவேளைக்கு முந்தைய பகுதிகள் நம்மை இருக்கை நுனிக்கு வரவழைத்திருக்கின்றன. அந்த இடங்களில் இயக்குநரின் எழுத்து நன்றாக இருக்கிறது.

இசையமைப்பாளர் அஸ்வத் தனது இசையின் மூலம் படத்துக்கு கூடுதல் பரபரப்பை அளித்திருக்கிறார். அவரது பாடல்கள் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. பிரதமராக மோடி போன்ற தோற்றமுடையவரைக் காட்டுகிறார்கள். அவர் தீவிரவாதியின் பெயரைக் கேட்டுவிட்டு, ”தீவிரவாதி என்றால் தீவிரவாதிதானே, பெயரில் என்ன இருக்கிறது” என்கிறார். இதனை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. 

இதையும் படிக்க | விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ – ஏன் பார்க்க வேண்டும் ? – திரை விமர்சனம்

ஹேக்கிங் போன்ற விஷயங்கள் கூட மிக எளிதாக நகைச்சுவையாக காட்டப்படுகிறது. படத்தில் சவாலான விஷயங்கள் கூட எளிதாக நடந்துவிடுகிறது. அதற்கு படத்தின் இறுதியில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிக முக்கிய பிரச்னையை எடுத்துக்கொண்டு அதனை அலட்சியமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். முதல் பாதியில் பார்வையாளர்களிடம் இருந்த பதைபதைப்பு இரண்டாம் பாதியில் காணாமல்போகிறது. 

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த எஃப்ஐஆர் திரைப்படம் ஒரு நல்ல திரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கும். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>