யாருடனும் கூட்டணி இல்லை, 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான்!

seeman

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி கூட்டணி இன்றி போட்டியிடவிருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் சீமான் போட்டியிடப் போவதில்லை. அவருடைய கட்சி சார்ந்து நிறைந்த கல்வியறிவு பெற்ற பொருத்தமான நபர்கள் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்படவிருக்கின்றனர். அதற்கான முன் ஆயத்தங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கூட்டணி இன்றி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? தோல்வி கண்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சீமான் அளித்த பதில்;

‘என்னை யாரும் இந்தத்தேர்தலில் நீ வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. நாங்கள் மாற்று அரசியலுக்கான ஒரு விதையைத் தூவும் வேலையை செய்திருக்கிறோம். இதில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் மக்களுக்கானதாகத் தான் இருக்குமே தவிர, போட்டியிடுபவர்களுக்கானது அல்ல. எனவே அதைப்பற்றிய கவலையெல்லாம் எனக்கு இல்லை. நான் சொல்ல வேண்டிய கருத்துகளை, கொள்கைகளை நாடாளுமன்றத்தில் பேச எங்கள் கட்சியில் பொருத்தமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை இந்தத் தேர்தலில் களமிறக்க விருக்கிறோம். எனவே வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் எங்களுக்குப் பயமில்லை என சீமான் பதில் அளித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, சீமானை தமிழகத்தில் களமிறக்கியதே பாஜக தான் என்றொரு வதந்தி சமூக ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆரம்பம் முதலே தேசிய கட்சிகளின் மீதான எங்களது நிலைப்பாடு அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதே. அப்படியிருக்க பாஜக என்னை வளர்த்து விடுகிறது என்பதெல்லாம் அவதூறான செய்திகள். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்கவேண்டுமென்பது தான் எங்களுடைய குறிக்கோள். அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி என்னை களமிறக்க முடியும்? ஒருவேளை அவர்கள் எங்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்கள் என்றால் நான் நிச்சயம் அதை வரவேற்கிறேன் என்று சிரிக்கிறார் சீமான்.

நான் மாற்று அரசியலை முன்வைத்தே அரசியலுக்கு வந்தேன். பணமும், புகழும் மட்டும் தான் குறிக்கோள் என்றால் அது எனக்கு நான் இருக்கும் சினிமாத்துறையிலேயே அளவில்லாமல் கிட்ட வாய்ப்புண்டு. அதை விட்டு விட்டுத்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இதை கேலி, கிண்டல் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும். அதற்காக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நான் அமைதியாகி விட மாட்டேன். என்று சீமான் பதில் அளித்துள்ளார்.
 

<!–

–>