யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது? எப்போதெல்லாம் கருவாடு தவிர்க்கவேண்டும்?

zkaruvadu

அசைவ உணவுகளில் அதிகமாகக் கொழுப்புச் சத்து இல்லாதது மீன் மற்றும் கருவாடு தான். கருவாடு சாப்பிடும் போதும் மீன், நண்டு உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இது உணவு நச்சாதலுக்கு வழிவகுத்து மருத்துவர்கள் குறிப்பிடும் ஃபுட் பாய்சனில் கொண்டு விடும். 

கருவாடு சமைக்கும் போது அதில் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகை உணவுப் பதார்த்தங்களைச் சேர்த்துச் சமைத்தால் ஆரோக்யமானதாக இருக்கும். இதை கருவாட்டுச் சாறு என்பார்கள். பார்ப்பதற்கு ரசம் போல இருக்கும் இந்தக் கருவாட்டுச்சாறு அஜீரணக் கோளாறு, மாந்தம், பசியின்மைக்கு மிகச்சிறந்த நிவாரணமளிக்கக் கூடியது.

எண்ணெய் தேய்த்து தலை முழுகும் நாட்களில் மீன், கருவாடு, நண்டு, இறால், தயிர், மோர் சாப்பிடக் கூடாது, சைனஸ் தொல்லை, சளி, இருமல், ஆஸ்த்துமா தொல்லை இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று இவற்றையெல்லாம் சாப்பிட்டால் சைனஸ் பிரச்னை அதிகமாகும் அபாயம் உண்டு.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் உப்பு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கருவாட்டில் உப்பு மிக அதிகமாக இருக்கும் எனவே இந்தப் பிரச்னை இருப்பவர்கள் கருவாட்டைத் தவிர்த்து விடுவது நல்லது.

சரும நோய் அல்லது ஒவ்வாமை இருப்பவர்களுக்கும் கூட கருவாடு தடை செய்யப்பட்ட உணவாகவே இருக்கிறது. ஏனெனில் கருவாடு சருமப் பிரச்னை உடையவர்களின் ஜென்ம எதிரி என்றால் மிகையில்லை. சரும நோய் உள்ளவர்கள் கருவாடு சாப்பிட்டால் உடலில் நமைச்சலும், அரிப்பும் ஏற்பட்டு மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாவார்கள்.

<!–

–>