யு-19 உலகக் கோப்பை காலிறுதி: இலங்கையை வெளியேற்றி அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் அணி

 

மேற்கிந்தியத் தீவுகளில் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை (யு-19 உலகக் கோப்பை) போட்டி நடைபெற்று வருகிறது.

கூலிட்ஜில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 47.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்துல் ஹதி 37, நூர் அகமது 30 ரன்கள் எடுத்தார்கள். வினுஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறைந்த ஸ்கோரை விரட்ட வேண்டும் என்பதால் இலங்கையின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை அணி. 7 பேட்டர்களில் 6 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பிறகு, கேப்டன் துனித்தும் ரவீன் டி சில்வாவும் பொறுப்புடன் விளையாடி சரிவைத் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் துனித் 34 ரன்களுக்கும் ரவீன் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். ஆப்கானிஸ்தான் அணி 32 வைட்களை வீசியும் இலங்கை அணியால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. அந்த அணி 46 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பேட்டர் ரன் அவுட் ஆனதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது ஆப்கானிஸ்தான் அணி. 

பிப்ரவரி 1 அன்று நடைபெறும் அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி. நாளை நடைபெறும் காலிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>