'ரஜினிகாந்த் படத்தை நான் இயக்க மாட்டேன் என்றேனா?'' : பிரபல இயக்குநர் அதிர்ச்சி தகவல்

நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. 

தமிழகத்திலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நயன்தாரா நடிப்பில் கோல்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரேமம் வெளியான போது ஒரு இயக்குநராக, ரஜினிகாந்த் படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன். 99 சதவிகித இயக்குநர்களுக்கு அவர் படத்தை இயக்கவேண்டும் என்பது கனவாக இருக்கும். 

ஒருநாள், இணைய ஊடகத்தில் அல்போன்ஸ் புத்ரன் ரஜினிகாந்த் படத்தை இயக்க மாட்டார் என்று செய்தி வெளியிட்டன. அந்த செய்தி எல்லா இடங்களிலும் பரவியது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் என்னிடம் இதுகுறித்து கேட்டபோது, அந்தத் தகவல் உண்மை இல்லை. நான் யாருக்கும் பேட்டியளிக்கவில்லை என்று மறுத்துவிட்டேன். அவரும் ரஜினிகாந்த்திடம் என் நிலை குறித்து விளக்கினார். ஒரு வழியாக பிரச்னை முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோல்டு படக் கதையை ஒருவரிடம் விவரித்தேன். அவர் என்னிடம் நீங்கள் ரஜினிகாந்த்துடன் இணைய மாட்டேன் என்று சொன்னீர்களா என்று என்னிடம் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

கடந்த 2015ல் இருந்து ஒரு பொய் செய்தி என்னை மிகவும் பாதிக்கிறது. எனக்கு ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்தப் படம் மக்களை மகிழ்வித்து ரூ.1000 கோடி வசூலிக்கும். அரசுக்கும் நிறைய வரி கிடைக்கும். தற்போது இழப்பு எனக்கும், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், அரசுக்கும் தான். 

ஒருநாள் பொய் செய்தியை வெளியிட்டவர் என் கண் முன் வருவார். அந்த நாளுக்காக காத்திருங்கள். ரஜினிகாந்த் படத்தை நான் இயக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.   

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>