'ராக்கி' படம் எப்படி இருக்கிறது?: இவ்வளவு வன்முறை தேவையா? -திரைவிமர்சனம்

 

வழக்கமான பழிவாங்கல் கதையை வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கும் படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்.ஏ.ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ராக்கியாக வசந்த் ரவி. தரமணியைத் தொடர்ந்து நடிப்பதற்கு நல்ல வேடம். அவரது தோற்றம் மற்றும் குரல் அந்த வேடத்துக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அவரும் நன்றாக நடித்திருக்கிறார். நடிகராக இயக்குநர் பாரதிராஜாவுக்கு முக்கியமான வேடம். அப்பா மற்றும் தாத்தா என தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்தவருக்கு இந்தப் படத்தில் முக்கியமான வேடம். ரோகினி, ரவீனா ரவி உட்பட பிற நடிகர்கள் தேர்வு கச்சிதம். 

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பெரும்பாலும் லாங் ஷாட் மூலம் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அவை புகைப்படத்துக்கு உண்டான ஃப்ரேம்கள். குறிப்பாக இடைவேளைக்கு முன் அவரது சண்டைக்காட்சியில் அவரது பணி சிறப்பு. இந்தப் படத்தின் நாயகன் அவர் தான். 

நான் லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நிகழ்காலம் மற்றும் ஃபிளாஷ் பேக் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் நடக்கிறது என்பது சொல்லப்படவில்லை. அதற்கு ஃபிளாஷ் பேக் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக விடை சொல்லப்படுகிறது. பிளாஷ் பேக் கருப்பு வெள்ளையிலும், நிகழ்காலத்தை வண்ணக் காட்சிகளாகவும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்கள். 

படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக நீளமானதாக இருக்கிறது. அதனால் படம் நிதானமாகவே நகரத் துவங்குகிறது. படத்தில் வன்முறைக் காட்சிகள் மிக அதிகம். அதுவும் நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.  தர்புகா சிவாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை மிகவும் சுவாரசியப்படுத்துகிறது. 

மிக எளிய பழிவாங்கல் கதை தான். அதனை நான் லீனியர் முறையில் சொன்ன விதத்தில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார். 6 அத்தியாயங்களாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. தமிழில் ஒரு வித்தியாசமான முயற்சி. 

முதலில் சொன்னது போல படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம். ஒவ்வொரு கொலைகளையும் மிக கொடூரமாக செய்கிறார் வசந்த் ரவி. அவர் ஏன் அவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. ரோகினி, ரவீனா ரவி தவிர எல்லோரும் மிக மோசமானவர்களாக இருக்கிறார்கள். கொலைகளை மிக கொடூரமாக செய்கிறார்கள். படத்தில் வன்முறை காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் அதிர்ச்சியாக்க வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. 

துவக்க காட்சியில் வசந்த் ரவி சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் ஏன் சிறை சென்றார், அவரை ஏன் தாக்க முயற்சிக்கிறார்கள்,  என்பதற்கான விடைகள் ஃபிளாஷ் பேக் மூலம் சொல்லப்படுகின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் சொல்வதற்குள் நாமே யூகித்து விடுகிறோம். ஆனால் கிளைமேக்ஸில் வரும் திடீர் திருப்பம் எதிர்பாராதது. அது வெகு சிறப்பாக இருந்தது.  

படத்தில் வசனங்கள் நன்றாக இருந்தன. ஆங்காங்கே சில தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை படத்தை சுவாரசியப்படுத்தின. ஆனால் அவை ஒரு கட்டத்துக்கு மேல் திகட்டத் துவங்கி விடுகிறது.  

மேலும் வசந்த் ரவி தரப்பும், பாரதிராஜா தரப்பும் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் காவல்துறையை ஒரு ஒப்புக்குக் கூட படத்தில் காட்டவில்லை. 

இருப்பினும் வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து வித்தியாசமான படங்களை விரும்புவர்களுக்கு இந்த ராக்கி நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா? என்பது சந்தேகம்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>