ருத்ர தாண்டவம் : திரைப்பட விமரிசனம்

 

மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி,  கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ருத்ர தாண்டவம்.  

போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்கும் காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் எதிர்பாராத விதமாக கொலை வழக்கில் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அதன் பின்னணியில் சாதியப் பிரச்னை தலைதூக்குகிறது. தான் ஒரு குற்றமற்றவர் என்பதை அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதே ருத்ர தாண்டவம் படத்தின் கதை. 

படத்தின் கதாநாயகன் ருத்ர பிரபாகரனாக ரிச்சர்டு ரிஷி. காவல் ஆய்வாளராக தோற்றத்தில் நிரூபிக்கும் அவர், நடிப்பில் தட்டு தடுமாறுகிறார். ஆனால் திரௌபதியை ஒப்பிடும்போது சற்று தேறியிருக்கிறார்.  படத்தில் வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன். அவரது பட வில்லன்களைப் போல வசனங்களை உச்சரிக்கிறார். ஆனால் நடிப்பில் தான் திணறுகிறார். 

படத்தின் முதல் பாதி முழுக்க ரிச்சர்டு, நேர்மையான, அநியாயத்தைக் கண்டால் பொங்குகின்ற காவல் ஆய்வாளர் என்பதை காட்டுவதற்கான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அவையெல்லாம் தமிழ் சினிமாவில் காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களில் பார்த்து பழக்கப்பட்ட காட்சிகள் என்பதால் சலிப்பைத் தருகின்றன.   

முதல் காட்சியில் பப் ஒன்றில் இளைஞர்கள் சிலர் போதை மருந்துகளை பெண்களுக்கு கொடுத்து அவர்களை நிர்வாணமாக படமெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ரிச்சர்டு ரிஷிக்கு வருகிறது. தன் குழுவில் இருக்கும் பெண்ணை அந்த பப்புக்கு அனுப்பி , தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திராத வகையில், அந்தக் குழுவினரை பிடிப்பார். தொடர்ச்சியாக ஒரு பப்பில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது என்றால் அந்த பப்பை முதலில் சந்தேகத்திற்குட்படுத்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இப்படி பல காட்சிகள் மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கிறது.

ரிச்சர்டு ரிஷி ஒரு நேர்மையான காவல் அதிகாரி என்று நிரூபித்த பின்னர், கதைக்குள் செல்கையில் ஒரு யுகம் கடந்து விடுகிறது.  போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் சாதி, மத பிரச்னைகள் அதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அவற்றையெல்லாம் ஒற்றை சார்பு நிலையில் பதிவு செய்திருக்கிறார். 

குறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (பிசிஆர்) தவறாக பயன்படுத்துவதால் ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் பாதிப்பை கூறுகிறது படம்.

போதைப் பொருள் கடத்தல் எப்படி நடைபெறுகிறது மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை  மிக அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்துவதால் அவரது குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வுப்பூர்வமான காட்சிகளால் விளக்கியிருப்பதற்கு பாராட்டுகள்.

வழக்கறிஞராக வரும் ராதாரவி, அம்பேத்கர் சாதியத் தலைவராக மாற்றப்பட்டு விட்டதாக வேதனை தெரிவிக்கிறார். மற்றொரு காட்சியில் தான் தலித் என்றாலும் தன் வீட்டில் முத்துராமலிங்கத் தேவரின் படம் இருப்பதாக பெருமை பேசவைத்திருப்பது இயக்குநரின் புரிதலின்மையைக் காட்டுகிறது.

மேலும் கிறிஸ்தவ சபைக் கூட்டம் நடப்பதாக காட்டப்படுகிறது. அதில் பாதிரியார் ஒருவர் இந்து மதத்தவர்களை சாத்தான் என விமரிசிப்பதாக காட்டப்படுகிறது. மேலும் மதம் மாற்றம் குறித்து காரணத்தைக் கூறும்போது, ஒரு சிலர் அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டுவிட்டு மதம் மாறுவதாக வசனம் இடம் பெறுகிறது. இப்படி படம் முழுக்க ஒற்றை சார்புநிலையிலேயே நகர்கிறது. கட்டாய மத மாற்றத்தை  விமரிசிப்பது இயக்குநரின் நோக்கமாக இருந்தாலும் அதற்கு அரசியல்வாதிகளை காரணம் காட்டுவது பிரச்னையை நீர்த்துப்போகச் செய்வதாகக் காட்டுகிறது.

மேலும் கௌதம் மேனன் இந்தப் படத்தின் வில்லன். ஒரு காட்சியில் அவர் கருப்பு சட்டையும் , மற்றொரு காட்சியில் நீல சட்டையும் அணிந்திருக்கிறார். சில காட்சிகளில் அவர் சார்ந்த அரசியல் கட்சி குறித்த பதாகைகள் சிவப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்கிறது. இப்படி வலது சாரி சிந்தனைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை ஒரே கதாப்பாத்திரத்தின் மூலம் வில்லனாக சித்திரிப்பதாக புரிந்துகொள்ள முடிகிறது. வலது சாரி சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்க முடியும். மேலும் படத்தில் காட்டப்படும் சில அரசியல்வாதிகள் நிஜ அரசியல் தலைவர்களை நினைவுபடுத்துகிறார்கள். 

கௌதம் மேனன் சில போராட்டங்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்வது போல் காட்டப்படுகிறது. ஆனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எல்லாம் தவறான நோக்கத்துடனே போராடுவதாக மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப் படம் உருவாக்கக்கூடும். 

ஒரு காட்சியில் ரிச்சர்டு ரிஷியின் மனைவியாக வரும் தர்ஷா, சாமிக்கு தீபாராதனை காட்டும்போது அந்தத் தட்டு தவறி கீழே விழுகிறது. உடனே ஏதோ தவறு நடக்கப்போகிறது என அஞ்சி, தனது கணவருக்கு எச்சரிக்கைவிடுக்கிறார். அவர் நினைத்தது போலவே நடக்கிறது. இப்படி பல புதுமையான காட்சிகளில் தன்னுடைய கிரியேட்டிவிட்டியை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர். 

படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் வருகின்றன. ஆனால் அவை சரியாக படமாக்கப்படாததால் ரசிக்கமுடியவில்லை. ஆங்காங்கே ஹெலிகேம் ஷாட்கள் மூலம் படத்தை பிரம்மாண்டமாக  காட்ட முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா. குறிப்பாக கடலில் இரண்டு படகுகள் செல்லும் காட்சியை மிக நேர்த்தியுடன் பதிவு செய்திருக்கிறார்.  பின்னணி இசை மூலம் படத்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். குறிப்பாக மாஸான காட்சிகளில் ஒலிக்கும் பின்னணி இசை அசுரன் பட இசையை நியாபகப்படுத்தினாலும் நன்றாகவே இருந்தது.  

மொத்தத்தில் வலதுசாரி சிந்தனை உடையவர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ருத்ர தாண்டவம்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>