லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் அணியின் இலச்சினை அறிமுகம்

 

ஐபிஎல் போட்டிக்கான லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி உரிமையாளராக இருந்தது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  2021 ஐபிஎல் போட்டி கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முதல் பாதியும் அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்தவே பிசிசிஐ விரும்புகிறது. எனினும் கரோனா பாதிப்பு குறையாவிட்டால் இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக மீண்டும் வெளிநாட்டில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. 

லக்னெள அணியின் பெயர் – லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அணியின் இலச்சினை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இலச்சினைக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

பண்டைய இந்தியத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. புராணங்களில் இடம்பெற்றுள்ள, சக்தி வாய்ந்த பறவையான கருடனை அடிப்படையாகக் கொண்டு இறக்கைச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியக் கலாசாரத்தில் கருடனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூவர்ண இறக்கைகள், லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இந்திய அளவிலான கவனத்தை வெளிப்படுத்துகிறது. நேர்மறை எண்ணங்களைக் கொண்டு மேலும் பல வெற்றிகளுக்கான அம்சம் இதில் உள்ளது. லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒவ்வொரு இந்தியனுக்கானது. இந்த அணி, நாட்டை ஒன்றிணைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>