வங்கதேச டி20 அணி: 2008-க்குப் பிறகு முதல்முறையாக நீக்கப்பட்ட பிரபல வீரர்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியிலிருந்து பிரபல வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் நீக்கப்பட்டுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது. அடுத்ததாக, சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 2 டெஸ்ட் ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது. நவம்பர் 19 முதல் டி20 தொடரும் நவம்பர் 26 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2008-க்குப் பிறகு முதல்முறையாக வங்கதேச அணியிலிருந்து விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் நீக்கப்பட்டுள்ளார். மூத்த வீரரான 34 வயது ரஹிம், 2006 முதல் வங்கதேச அணிக்காக டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறார். இதுவரை 99 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் 57*, 29, 8, 0, 1 என சுமாராக விளையாடியதால் அணியிலிருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். இதனால் 16 பேர் கொண்ட அணியில் கேப்டன் மஹ்முதுல்லா மட்டுமே அதிக அனுபவம் கொண்ட வீரராக உள்ளார். செளம்யா சர்கார், லிடன் தாஸ், ருபல் ஹுசைன் போன்ற வீரர்களும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் யு-19 ஒருநாள் உலகக் கோப்பையை வங்கதேச அணி வென்றது. அந்த அணியில் விளையாடிய சயிப் ஹாசன், ஷஹிதுல் இஸ்லாம், யாசிர் அலி, அக்பர் அலி போன்றோர் வங்கதேச டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>