வரமாக வந்தது சாபமாக மாறலாமா?

கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவும், நாகசாகியும் குண்டுகள் போட்டுத் தகர்க்கப்பட்டபோது மனமுடைந்து போனார். ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய அறிவியல், அழிவுக்கும் பயன்படுகிறதே என்று ஆதங்கப்பட்டார். 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் வளர்ந்து வருகிறது. ஆனால், மனித குலத்திற்கு வரமாக அமைந்திருக்க வேண்டிய அறிவியல் வளர்ச்சி, மனித குலத்திற்கே சாபமாக மாறத் தொடங்கியிருக்கிறதோ என்ற கவலை தற்போது மேலோங்கி வருகிறது. 

இன்றைய காலகட்டத்தில், நொடிப்பொழுதில் ஒரு செய்தியை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கொண்டு சேர்க்கின்ற அளவுக்கு அறிவியல் அதீத வளர்ச்சியடைந்திருக்கிறது. 

செய்திகளை பாரபட்சமின்றி உண்மையாகக் கொண்டு சேர்ப்பதில்  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகத் துறைக்கு மிகுந்த பொறுப்புணர்வு இருக்கிறது. ஆனால், ஒருசில ஊடகவியலாளர்களின் போக்கு அந்தத்  துறைக்குக் களங்கம் விளைவிக்கும் விதத்தில் இருக்கிறது என்பதையும் கூறவேண்டியிருக்கிறது.  

ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுவது, சுயநல நோக்கத்தோடு செயல்படுவது போன்ற அறமற்ற செயல்பாடுகள் ஊடகத் துறையில் அவ்வப்போது தலைதூக்குகின்றன. 

இந்தப் போக்கு மக்களாட்சியின் மாண்பை சிதைத்து விடக்கூடியது.  இந்த அறம் பிறழ்ந்த செயல்பாடுகளுக்குக் கட்டியம் கூறும் வகையில் அமைந்திருக்கிறது சமீபத்தில் “இந்திய பத்திரிகை குழு (பிரஸ் கவுன்சில் ஆ ஃப் இந்தியா)”  வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை. 

ஊடகவியலாளர்களுக்கு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிடுவதில் இருந்து ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும்; வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆராயாமல் வெளியிடக் கூடாது’ என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறது. 

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது ஒருபுறம் பயனுள்ளதாக இருந்தாலும், மறுபுறம் கவலையளிப்பதாகவும் உள்ளது. சமீபத்தில் ஒரு திரையுலகக் குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையேயான பிரிவு பற்றி பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும், ஏனைய சமூக ஊடகங்களும் நிகழ்த்தியிருக்கும் வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்குள் ஏன் பிரிவு வந்தது என்பதைப் பற்றி விலாவரியாகப் பேசுவதும், எழுதுவதும் அநாகரிகத்தின் உச்சமாகவே படுகிறது. 

திரையுலகைச் சார்ந்தவர்களும் அடிப்படையில் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களே. அவர்கள் திரைப்படங்களில் அநாகரிகமாக நடிப்பதையும், ஆபாசமாக வசனம் பேசுவதையும் கண்டிக்கிற உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், அதே நேரம், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து அவர்களைப் பற்றியும், அவர்களது குடும்பங்களைப் பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் எழுதுவதும், பேசுவதும் பண்பாடற்ற செயல்களல்லவா? அதற்கான அதிகாரத்தையோ உரிமையையோ எந்தச் சட்டமும் யாருக்கும் வழங்கவில்லை.  

சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினால் அதுபற்றி விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு மாத்திரமே உரிமை உள்ளது. தங்கள் விருப்பம்போல மற்றவர்களைப் பற்றி எழுதுவதும், கருத்துகள் பதிவிடுவதும், பேசுவதும்  சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்பதைப் பற்றி இவர்கள் சற்றும் கவலைப்படுவதில்லை. அடுத்தவர்களின் துயரத்தில் சுகம் காண்பவர்களும் ஒருவகை மன நோயாளிகளே. 

அதுபோலவே, அரசியல்வாதிகளையும் இத்தகையவர்கள் விட்டுவைப்பதில்லை. அரசியல்வாதி ஒருவரின் குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை சமுதாயத்தைப் பாதிக்கின்ற வகையில் அமையும்போது அவரது அந்தக் குறிப்பிட்ட நடவடிக்கையைப் பற்றி விமர்சிக்கிற, கண்டிக்கிற உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த அரசியல்வாதியின் அந்தரங்கங்களைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் மிகவும் அநாகரிகமான செயல்.  

துப்பறிதல் (இன்வெஸ்டிகேஷன்) என்ற பெயரில் வதந்தியான செய்திகளைப் பதிவு செய்வதும், எழுதுபவர்கள் தப்பித்துக்கொள்ளுகிற வகையில், “என்று பேசிக் கொள்கிறார்கள்’ என்கிற பாணியில் எழுதுவதும் அண்மைக்காலமாக அதிகமாகி வருகின்றன. 

சில பாரம்பரிய ஊடகங்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இவற்றுக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம்  செல்லும் வாய்ப்பு உண்டு என்றாலும், கால விரயம், பணச் செலவு மட்டுமன்றி, பொதுவெளியில் அது பேசுபொருளாகிவிடும் என்பதாலும் பெரும்பாலானோர்  அத்தகைய நடவடிக்கையைத் தவிர்த்து விடுகிறார்கள்.  

ஒரு அரசியல் தலைவரைப் பற்றி ஒரு பேச்சாளர் மேடையில் தரக்குறைவாகப் பேசிய வழக்கு ஒன்றில் கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி, “இப்படித் தரக்குறைவாகப் பேசுபவர்களின் பேச்சுகளை பலரிடமும் கொண்டு சேர்க்கும் யூடியூப் நிறுவனமும் குற்றவாளிதான்’ என்று சொல்லியிருப்பது கவனத்தில் கொள்ளப்பட  வேண்டிய முக்கிய அம்சமாகும்.   

எத்தனையோ நல்ல செயல்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், எதிர்மறையான நிகழ்வுகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நல்ல செயல்களுக்கு நாம் கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.  

கடந்த ஆண்டு, கேரளத்தில் ஆலுவா என்ற பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் ஸ்மிஜா என்ற பெண்ணை, ஒரு வாடிக்கையாளர் தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட எண் உள்ள லாட்டரி சீட்டைத் தனக்காக வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த லாட்டரி சீட்டுக்கான இருநூறு ரூபாய் பணத்தைப் பின்னர் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். 

அந்த லாட்டரிச் சீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது. லாட்டரி சீட்டு முகவரான ஸ்மிஜா, கடனாக லாட்டரிச் சீட்டு வாங்கியவரிடம் சென்று, பரிசு விழுந்த விவரத்தைக் கூறி, அந்தச்  சீட்டினைக் கொடுத்து, அதற்குரிய இருநூறு ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற செய்திகளை அதிகம் பகிர்ந்தால் சமுதாயத்தில் “ஸ்மிஜா’க்கள் பெருகுவார்கள்.

ராஜபாளையம் அருகில் வசிக்கும் மனவளம் குன்றிய மூதாட்டி ஒருவரை, அவருடைய பத்து வயது மகள், தனது மகளைப் பராமரிப்பதுபோல பராமரிக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று உதவியிருக்கிறார்.  மனிதநேயம் மிக்க இன்னும் சிலரும் அங்கு சென்று அவர்களுக்கு வேண்டிய பண உதவியும்,  அந்தப் பெண்ணின் கல்விக்கான உதவியும் செய்திருக்கிறார்கள்.  

இவை போன்ற மனிதநேயமிக்க நல்ல செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு, தேவையற்ற செய்திகளைப் பற்றிப் பேசுவதிலும், எழுதுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமான சமுதாயத்துக்கான அடையாளமன்று.

தீநுண்மி பரவத் தொடங்கியதிலிருந்து கணினிகளும், அறிதிறன்பேசிகளுமே பள்ளிக் குழந்தைகளின் வகுப்பறைகளாகி விட்டன. எனவே, அவர்களை இதுபோன்ற கருவிகளிலிருந்து ஒதுக்கி வைக்க முடியாத கையறு நிலையில் பெற்றோர்களாகிய நாம் இருக்கிறோம். எவ்வளவு நேரம்தான் அவர்கள் அருகிலேயே இருந்து கண்காணிக்க முடியும்?  

அதுவும் பதின்பருவம் என்பது மிகவும் லாகவமாகக் கையாளப்பட வேண்டிய பருவம்; சிந்தனைகள் சிதறக் கூடிய பருவம்; காதலுக்கும், கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். சமூக ஊடகங்களில் நாம் விரும்பாத பல பதிவுகள் அழையா விருந்தாளிகளாக வந்து நம்மை அடைகின்றன. அவற்றைப் பார்க்கிறபோது தேவையற்ற எண்ணங்கள் இளைஞர்களின் இதயங்களில் புகுந்து விடுமே என்ற அச்சம் மேலோங்குகிறது.  

மூன்று வயதுக் குழந்தையொன்று, தனது தந்தையின் அறிதிறன்பேசியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆபாசக் காட்சியொன்று அந்தத் திரையில் தோன்ற, அந்தக் குழந்தை தனது தந்தையிடம் அதற்கு விளக்கம் கேட்க, அவர் செய்வதறியாது திகைத்து நின்ற காட்சியை நான் அண்மையில் கண்ணுற்றேன்.  

ஒரு வீட்டில் இரவு நேரத்தில் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த மனைவி, தன்னையறியாமல் “நேரலைப் பதிவு” பொத்தானை அழுத்தியிருக்கிறார். அதன் பின்னர் அவர் தனது கணவனுடன் பேசிக்கொண்டிருந்த உரையாடல்கள் அனைத்தையும் நேரலையாக அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் பார்க்க, அவரது உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார். அந்த தம்பதி வெட்கத்தில் தலைகுனிந்து போன சம்பவமும் சமீபத்தில் நடந்திருக்கிறது.  

இதுபோன்ற பல தவறுகள் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைச் சுற்றி தினந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, கணினி, அறிதிறன்பேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள், குறிப்பாக மாணவ, மாணவியர் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.  

ஆபாசமான மற்றும் பிறர் மீது அவதூறு சுமத்துகின்ற வகையில் உள்ள காணொலிகளையும், பதிவுகளையும் பார்ப்பதில்லை என்று சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். 

இதுபோன்ற காணொலிகளை வெளியிடுகின்ற தனிப்பட்ட நபர்கள் மீதும்,  தொடர்புடைய ஊடக நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய – மாநில அரசுகள் தயக்கம் காட்டக் கூடாது.       

மனித குலத்திற்கு வரமாகக் கிடைக்கப்பெற்ற அறிவியலும், அறிவியல் சாதனங்களும் சாபமாகிவிட ஒருபோதும் நாம் அனுமதிக்கலாகாது.

கட்டுரையாளர்:
மத்திய அரசு உயர் அதிகாரி (ஓய்வு).
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>