வாழத் தகுதியற்றதா சென்னை? தரம் குறையும் காற்று!

 

சிங்காரச் சென்னை என்ற பெயரைச் சொன்னாலே மாநிலத்தின் மற்ற  பகுதியில்  வசிப்பவர்களுக்கு ஒரு வியப்பு. அனைத்து வசதிகளும் நிறைந்து  பொருந்திய ஒரு நகரம் என்பதாகத்தான் நினைத்துக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலிருந்தும் சென்னைக்கு  படையெடுப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  குறிப்பாக வேலைவாய்ப்புக்காக சென்னையை நாடி வரும் மக்கள், வசதி கருதி அப்படியே குடிபெயர்ந்தும்விடுகின்றனர்.

இந்தக் குடியேற்றங்களால், 2014 ஆம் ஆண்டு 70 லட்சமாக  இருந்த  சென்னையின் மக்கள்தொகை, இன்று ஏறத்தாழ ஒரு கோடியைத்  தாண்டியுள்ளது.

மக்கள்தொகை ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, மற்றொருபுறம் சென்னையின் காற்று மாசும் அதிகரித்து  வருகிறது. சென்னை மட்டுல்ல, தில்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாகனப் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. 

காற்று மாசுபாடு என்பது மனிதர்களை அமைதியாகக் கொல்லும் காரணி என்று வரையறுக்கிறார்கள் நிபுணர்கள். அதிலும் மோசமாக, காற்றின் தரம் குறைந்துகொண்டே போவது நகரத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர். 

காற்று மாசு

மனிதன் வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான காற்று. ஆனால் நகரங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கிறதா? என்றால் இல்லைதான். 

தேசிய சுற்றுப்புற காற்று தரநிலை, எட்டு காற்று மாசுபடுத்திகளான பி.எம்.10, பி.எம். 2.5, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, ஓசோன் அல்லது ட்ரை ஆக்சிஜன், அம்மோனியா, லெட் ஆகியவற்றின் 24 மணிநேர சராசரி கால அளவினை வைத்து ஆறு நிலைகளில் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது. 

இவற்றில், 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண் துகள்கள் பி.எம். 10 என்றும், 2.5 மைக்ரோ மீட்டர் வரையிலான விட்டம் கொண்ட நுண்துகள்கள் பி.எம். 2.5 என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் பி.எம். 2.5 நுண்துகள்கள்தான் உடலுக்கு அதிக அளவிலான தீங்கை விளைவிக்கும் தன்மை கொண்டது. 

இந்நிலையில் சென்னையில் காற்றின் தரம் குறித்து சுற்றுசூழல் மற்றும் சுகாதார ஆய்வு செய்யும் அமைப்பான ஹெல்தி எனர்ஜி இனிஷியேட்டிவ் (இந்தியா) நடத்திய ஆய்வில், காற்றில் சிலிக்கா, மாங்கனீஸ், நிக்கல் ஆகியவற்றின் அளவு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து நான்காவது ஆண்டாக, சென்னையில் காற்றின் தரக் குறியீடு அளவான பி.எம். 2.5, அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1.1 முதல் 3.8 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஆய்வுக்காக, 2021 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் சென்னை  மாநகரில் பரவலாக  20 இடங்களில் இருந்து 24 மணி நேர மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 17 இடங்களில் பி.எம். 2.5 அளவு 1.1 முதல் 3.8 மடங்கு உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஒரு கன மீட்டர் காற்றில் உள்ள மைக்ரோகிராம் நுண்துகள்கள் (பி.எம்.2.5 அளவு) 60 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளன.  தேசிய சுற்றுப்புற காற்றின் தரநிலை ஆய்வறிக்கையின்படி இது ‘ஆரோக்கியமற்றது’. 

சென்னையில் குறிப்பாக திரிசூலம் (விமான நிலையத்திற்கு அருகில்), பாரிஸ் கார்னர் மற்றும் வியாசர்பாடி (மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில்) ஆகிய  பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இங்கு பி.எம்.2.5 அளவு 228-176 மைக்ரோ கிராம் என்ற அளவிலும் இது ‘மிகவும் ஆரோக்கியமற்றது’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இடம் பி.எம்.2.5 அளவு
திருவொற்றியூர் 128.6
காசிமேடு 126.3
துரைப்பாக்கம் 80.8
குருவிமேடு 58.9
சோழிங்கநல்லூர் 69.3
வேளச்சேரி 83.5
நொச்சிக்குப்பம் 57.8
கொடுங்கையூர் 121.5
மீஞ்சூர் 72.5
ஊரணம்பேடு 84.7
சேப்பாக்கம் 110
காட்டுப்பள்ளி குப்பம் 53.1
ஸ்ரீபெரும்புதூர் 124.9
தி. நகர் 102.7
பாரிஸ் கார்னர் 175
திரிசூலம் 228.6
வியாசர்பாடி 214.2
அத்திப்பட்டு 121.7
காட்டுக்குப்பம் 98.7
அம்பத்தூர் 103.2
இருக்க வேண்டிய சராசரி அளவு 60

திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகத்திற்கு அருகில்), துரைப்பாக்கம் (கழிவுகள் கொட்டும் இடத்திற்கு அருகில்), குருவிமேடு (வள்ளூர் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சாம்பல் கழிவுக் குளம் அருகே), சோழிங்கநல்லூர் (ஓஎம்ஆர் நெடுஞ்சாலைக்கு அருகில்), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர், சேப்பாக்கம் (வடசென்னை அனல்மின் நிலையத்தின் நிலக்கரி சாம்பல் கழிவுக் குளத்திற்கு அருகில்), ஸ்ரீபெரும்புதூர், தி. நகர், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பி.எம் 2.5 அளவு 128 முதல் 59 மைக்ரோகிராம் கொண்டிருக்கின்றன. 

மாதிரிகள் எடுக்கப்பட்ட 20 இடங்களில் 19 இடங்களில் சிலிக்காவின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை (3 மைக்ரோ கிராம்) விட அதிகரித்தும் அவற்றில் திரிசூலம் முதலிடத்திலும் உள்ளது. 

அதுபோல மாங்கனீஸ் (0.05 மைக்ரோகிராம்) 20 இடங்களிலும், நிக்கல் 19 இடங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை (0.0025 மைக்ரோகிராம்) விட அதிகரித்துக் காணப்படுகின்றன. 

சிலிக்காவின் அளவு அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள், சில நேரங்களில் கடுமையான அல்லது ஆபத்தான நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

இதில் மாங்கனீஸ், நியூரோடாக்சின் என்று அறியப்படுகிறது. இது நரம்பியல் செயல்பாடுகளை பாதிக்கிறது. அதிகமாக வெளிப்படும்போது நிறைந்த மூளை சிதைவை ஏற்படுத்தும். நிக்கல், உடலில் உள்ள சுவாச, நோயெதிர்ப்பு மண்டலங்களைப் பாதிக்கும். 

தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒரு வலுவான, உள்ளூர் அளவிலான காற்றின் தரம் குறித்து கண்காணித்து, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. 

ஆய்வு மேற்கொண்ட காற்று மாசுபாட்டு ஆராய்ச்சியாளர் கஜப்ரியா கூறுகையில், ‘இதுபோன்ற இடங்களைச் சுற்றி வாழும் மக்கள் காற்றை சுத்தப்படுத்தும் உரிமையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. கரோனா  தொற்றுநோய் இருந்தபோதிலும், சென்னையில் மாசுபட்ட காற்றின் ஒவ்வொரு மூச்சும் அவர்களின் நுரையீரல் திறனைக் குறைத்து ஆயுள்காலத்தையும் குறைக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்புகள் ஆகிய சுகாதார மதிப்பீட்டின் மூலமக அடையாளம் காண முடியும்’ என்று தெரிவித்தார். 

அமைப்பின் ஆய்வாளர் விஸ்வஜா சம்பத் கூறுகையில், ‘காற்று மாசுபாடு ஒரு கண்ணுக்குத் தெரியாத கொலையாளி. இந்த போரை சமாளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இதுகுறித்த பாதிப்பை தெரிவிப்பதுடன் முறையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார். 

நவீன வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு வரும் நடுத்தர மக்கள் பலரும் இன்று அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அல்லல்படுகின்றனர்.  வேலைவாய்ப்புக்காக வந்து முன்னேறியவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அடிப்படை வசதிகள் கிடைக்காமல் திரும்பியவர்களும் உண்டு. 

மனிதனுக்கு சுத்தமான காற்று, குடிநீர் இந்த இரண்டும் அவசியம் என்ற நிலையில் சென்னையில் இந்த இரண்டுக்குமே தட்டுப்பாடு என்பதுதான் உண்மை நிலை.  அந்த வகையில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகர்.  எனினும்  சென்னையை நோக்கி மக்களின் படையெடுப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>