வாழ்க்கைல சிக்கல்னா அதுக்குப் பல தீர்வுகள்… ஆனா கூந்தல்ல சிக்கல்னா ஒரே தீர்வு சிகைக்காய் மட்டும் தான்! 

நீங்க இதுவரைக்கும் உங்க கூந்தலுக்கு எத்தனை விதமான ஷாம்பூ உபயோகப் படுத்தியிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்?! 

சந்திக்கக் கூடிய ஒவ்வொரு பெண்ணிடமும் ஏன் ஆண்களிடமும் கூடத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்களேன். நிச்சயம் ஒவ்வொருவருமே தனித்தனியாக குறைந்த பட்சம் இரண்டு மூன்று பிரபல ஷாம்பூக்களையாவது பயன்படுத்திப் பார்த்து அதன் மூலம் திருப்தி கிடைக்காமல்  சோர்ந்து போயிருப்பார்கள். ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி பார்த்து விட்டு கடைசியில் ஏதாவதொன்றில் முழு திருப்தி இல்லாமலே கூட நிலை பெற்றிருப்பார்கள். அப்படியானவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

ஷாம்பூக்கள் அனைத்துமே ரசாயனக் கலப்புகள் எனும் நிலையில் அவற்றுக்குச் சிறந்த மாற்றாக நமது பாரம்பர்யம் முன் வைப்பது சிகைக்காய்த் தூளைத்தான். டி.வி யில் சிகைக்காய் விளம்பரம் வரும் போதெல்லாம் இது நிஜமாகவே கூந்தலுக்கு நல்ல பலனைத் தருமா? உச்சந்தலையைக் குளிர வைத்து உடல் சூட்டைக் குறைக்குமா? பொடுகுத் தொல்லையை நிரந்தரமாக அகற்றுமா? கேசத்துக்குப் பள பளப்பைத் தருமா? போஷாக்கைத் தருமா? கூந்தல் இழைகளுக்கு வலுவூட்டுமா? என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் நம் மனதில் எழும். இதற்கு நமது பாட்டிகளும், அம்மாக்களும் வைத்திருக்கும் ஒரே ஒரு சமரசமான பதில் என்ன தெரியுமா? 

‘முதல்ல சிகைக்காய் யூஸ் பண்ணிப் பாருங்க… அப்புறம்…தெரியும். மத்த ஷாம்பூக்களைப் போல இதில் பக்க விளைவுகள் இல்லை என்கிறார்கள். 

அதோடு, சிகைக்காய் பயன்படுத்துவதால் கேசம் வளர்கிறதோ இல்லையோ… வளர்ந்த கேசம் உதிராமல் இருப்பதற்கு நிச்சயம் உத்தரவாதமுண்டு. என்கிறார்கள்.

சரி பாட்டிகள் தான் இவ்வளவு தூரம் சொல்கிறார்களே! பெரியவர்கள் சொன்னால் அது பெருமாள் சொன்ன மாதிரி ஆச்சே! என்ற மரியாதைக்காவது இதுவரை சிகைக்காய் பக்கமே எட்டிக் கூட பார்க்காதவர்களும் கூட ஒரே ஒருமுறை வீட்டிலேயே சிகைக்காய் அரைத்துப் பயன்படுத்தித் தான் பார்ப்போமே.

நேச்சுரல் ஷாம்பூ சிகைக்காயை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

சிம்பிளான முறையில் சிகைக்காய் தயாரிக்கத் தேவையான பொருட்கள்…

 • நன்கு காய்ந்த சிகைக்காய் – 1 கிலோ
 • காய்ந்த கறிவேப்பிலை + மருதாணி இலைகள் + ரோஜா இதழ்கள் – 200 கிராம்
 • வெந்தயம் – 200 கிராம்
 • பச்சைப் பயறு – 200 கிராம்
 • காய்ந்த நெல்லிக்காய் – 200 கிராம்
 • பூலாங்கிழங்கு – 2000 கிராம்
 • காய்ந்த ஆவாரம் பூ – 200 கிராம்
 • விதை நீக்கப்பட்ட புங்கங்காய் அல்லது பூந்திக் கொட்டை –  200 கிராம்.

இது வழக்கமான எல்லோருக்கும் பழக்கமான சாதாரண முறையில் சிகைக்காய் தயாரிக்கும் முறை. இதைத்தவிர நறுமண சிகைக்காய் தயாரிக்கும் முறை ஒன்றும் கூட உள்ளது. அதன்படி சிகைக்காய் தயாரித்தால் சைனஸ் உள்ளவர்களும் கூட சிகைக்காய் பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.

நறுமண சிகைக்காய் தயாரிக்கத் தேவையான பொருட்கள்….

 • சிகைக்காய் – 1/4 கிலோ
 • பூந்திக்கொட்டை – விதை நீக்கியது 15
 • சுருள் பட்டை – ஒரு சுருள்
 • சுக்கு – 1 சிறு துண்டு (உடல் சூட்டைக் குறைக்க)
 • பார்லி – 1 டேபிள் ஸ்பூன் (  இதில் செலினியம், அயர்ன்,காப்பர் இருப்பதால் கேசத்தைச் சுத்தம் செய்ய உதவும்)
 • ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன் (நேச்சுரல் கண்டீசனராகச் செயல்பட்டு முடிக்கு பளபளப்பைத் தரும்)
 • கொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
 • நெல்லிக்காய்கள் – 5 (விதை நீக்கி நன்கு காய வைத்த மலை நெல்லிக்காய்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்)
 • மிளகு – 1/2 டீஸ்பூன் ( கூந்தலின் வேர்ப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும், முடியில் பூஞ்சைத் தாக்குதல் அல்லது பொடுகு நீக்கியாகவும் இது உதவும்.)
 • நன்னாரி வேர் – 6 சிறு துண்டு (உடலைக் குளிர்விப்பதுடன் சிறந்த நறுமணத்தையும் தரக்கூடியது.
 • சீரகம் – 1/2 டீ ஸ்பூன்
 • பாதாம் பருப்பு – 7 முதல் 8 (பாதாமில் இருக்கும் புரதம் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு வேர்ப்பகுதி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவும்)
 • வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன் ( சிகைக்காயில் நுரை வருவதற்கும் உச்சந்தலையில் சூட்டைத் தணிக்கவும் உதவும்)
 • கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன் (கூந்தலிலுள்ள அழுக்கைப் போக்கி கூந்தல் மென்மையாக உதவும்)
 • பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன் (சிகைக்காயை வடிகஞ்சியில் கலந்து கூந்தலில் தடவுவதற்குப் பதிலாக நேரடியாக பச்சரிசியும் சேர்க்கலாம்.. இது கூந்தலை சுத்தப் படுத்துவதோடு பளபளப்பையும் தரும்)
 • உளுந்து – 3 டேபிள் ஸ்பூன்

பொதுவாக சிகைக்காய் பொடி தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் அனைத்துமே உடலுக்குக் குளிர்ச்சி அளித்து உடல் சூட்டைக் குறைக்கக் கூடியவையாகவே இருக்கும். ஆனால், அது சைனஸ் பிரச்னை இருக்கக் கூடிய சிலருக்கு ஒத்து வராது. அப்படியான நேரங்களில் நாம் சிகைக்காய் பொடிக்கான அடிப்படைப் பொருட்களுடன் குளிர்ச்சியை சமப்படுத்தக்கூடிய வகையிலான சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலையில் நீர் கோர்த்து சளி பிடிக்காமல் இருக்க சேர்க்க வேண்டியவை…

 • வால்மிளகு – 1/4 டீஸ்பூன்
 • கிராம்பு – 1/4 டீஸ்பூன்
 • கருஞ்சீரகம் – 1/4 டீஸ்பூன்
 • கடுகு – 1/4 டீஸ்பூன்
 • வெட்டி வேர் – 1 சின்ன பாக்கெட் 
 • செம்பருத்தி இலை – 20 செம்பருத்தி இலை நன்கு காய வைத்தது.
 • வெள்ளை கரிசலாங்கண்ணி – காய வைத்த இலைகள் ஒரு கைப்பிடி அளவு
 • கறிவேப்பிலை – 1 கொத்து
 • வேப்பிலை – 1 கொத்து
 • நொச்சி இலை – 1 கைப்பிடி அளவு
 • துளசி – 1 கைப்பிடி
 • கற்றாழை – தோல் நீக்கி உள்ளிருக்கு சோற்றை வெட்டி எடுத்து மிக்ஸியில் அரைத்து மேலே சொல்லப்பட்ட பருப்புகளுடன் சேர்த்துக் காய வைக்கவும்.
 • எலுமிச்சை – 1 ( சாற்றை கற்றாழை போலவே பருப்புகளின் மீது பிழிந்து காய வைத்து விட்டு எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக்கி காய வைக்க வேண்டும். சாற்றுடன் காய வைத்தால் பூஞ்சை வரலாம்.
 • திரிபலா சூரணம் – சிகைக்காய் அரைத்த பின் அதில் 3 டீஸ்பூன் சேர்க்கவும்.
 • அதிமதுரப் பொடி -1 டீஸ்பூன்

செய்முறை….

மேலே சொல்லப்பட்ட பொருட்கள் அத்தனையையும் அதே அளவுகளில் எடுத்துக் கொண்டு அவற்றை இரண்டு நாட்கள் பொரிகிற வெயிலில் நன்கு காய வைத்து எடுங்கள். பிறகு மெஷினில் கொடுத்து நைஸாக அரைத்து வாங்குங்கள். 1 கிலோ சிகைக்காய்ப்பொடி அரைத்து வைத்தீர்கள் என்றால் அது குறைந்தத் 6, 7 மாதங்களுக்கேனும் வரும். மொத்தச் செலவு உங்களது 6,7 மாத ஷாம்பூ செலவோடு ஒப்பிடும் போது மிக, மிகக் குறைவாகவே இருக்கும். மற்றபடி கூந்தலின் ஆரோக்யத்துக்கும் 100% கியாரண்டி உண்டு.

மேலே சொல்லப்பட்ட அளவு பொருட்களை எடுத்துக்கொண்டால் அரை கிலோவுக்கும் அதிகமான நறுமண சிகைக்காய்த் தூள் கிடைக்கும். இவற்றை நன்கு காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வாங்க வேண்டும். வீட்டில் மிக்ஸியில் அரைப்பது வேலைக்கு ஆகாது. அதோடு சிகைக்காய் அரைத்து வாங்கியதும் அதில் திரிபலா சூரணம் மூன்று டீஸ்பூன் சேர்த்துக் கொண்டால் வாதம், பித்தம், கபத்தினால் உண்டாகக் கூடிய தொல்லைகளையும் தவிர்க்கலாம். திரிபலா சூரணம் என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காயின் கலவையே! திரிபலாவை அடுத்து சிகைக்காய்த்தூளோடு அதிமதுரப் பொடியும் 1 டீஸ்பூன் சேர்த்தால் நேச்சுரல் ஹெர்பல் ஷாம்பூவான நறுமண சிகைக்காய்த்தூள் பயன்படுத்தத் தயாராகி விட்டது என்று அர்த்தம்.

நேச்சுரல் ஹெர்பல் சிகைக்காயை எப்படிப் பயன்படுத்துவது?

அவரவர் கூந்தலின் நீளத்துக்கு ஏற்ப 1 ஸ்பூனோ, 2 ஸ்பூன்களோ நறுமண சிகைக்காய் எடுத்துக் கொண்டு அதை வெது வெதுப்பான வெந்நீரில் கரைத்து தலையில் கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை படும் படி நன்கு தேய்க்கவும். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே காய விட்டு சிகைக்காயில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் மற்றும் வாசனைப்பொருட்களின் சத்துக்கள் எல்லாம் கூந்தலில் இறங்கும் வண்ணம் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை நன்கு அலசி எடுக்கவும். அவ்வளவு தான் வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை.

மேலே சொன்ன இரண்டு முறைகளில் அவரவருக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்து சிகைக்காய் தயாரித்து பயன்படுத்திப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.

<!–

–>