விதைத்தது போலக் கிடந்தன சடலங்கள்: சுனாமியைக் கண்டவரின் நேரடி சாட்சியம்

சுனாமி – தமிழுக்கும் தமிழருக்கும் முதன்முதலாக அறிமுகமாகும்போதே ஆயிரக்கணக்கான உயிர்களை அள்ளித் தின்றுவிட்டு அறிமுகமானது, அடுத்த நாளில்தான் அதன் பெயரும் உச்சரிப்பும் அனைவருக்கும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட கடற்கரையோரங்களில் இன்னமும் ஆறாவடு என, குறிப்பாக,  நாகை மாவட்டத்தின் மீனவப் பகுதிகளில், ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது சுனாமி.

சுனாமி தாக்கி இன்றைக்குப் பதினேழு ஆண்டுகளாகிவிட்டன. சுனாமி நாளில் என்ன நடந்தது? என்றறிய, முதலாண்டு நினைவு நாளையொட்டி, நேரில்  பார்த்த ஒருவரைச் சந்திக்க முயன்றபோது மக்களால் அழைத்துச்  செல்லப்பட்டவர்தான் இவர்.

கீச்சாங்குப்பம் என்ற நாகப்பட்டின மீனவ கிராமத்தில் அவரைச்  சந்தித்தபோது, அன்று அவர் சொன்ன சொற்கள் யாவும் இன்றும்  சுனாமியை நம் கண் முன்னே கொண்டுவருபவை.

ஆழிப் பேரலைகள் உள்புகுந்ததில் தொடங்கி ஒரு மாதம் வரைக்கும்  கொத்துக்கொத்தாக சடலங்களைப் பூமிக்குள் ஆழ்த்தியதன்  கண்ணீர் சாட்சி இவர்.

மீனவ கிராமமான கீச்சாங்குப்பத்தின் பெரியவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார்   தோற்றத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாமல் வெற்று மனிதராக அவற்றை விவரிக்கும்போதே கண்ணீர் விட்டழுதார்.

“இதோ கண் முன்னால் இருக்கும் அந்த இரு இடங்களிலும்தான் அந்த உடல்கள் எல்லாமும் பூமிக்குள் கிடத்தப்பட்டிருக்கின்றன. உறவுகள், நட்புகள், குழந்தைச் செல்வங்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்.

 “மீன் விற்பனை வளாகத்தில் இப்போதுள்ள சுற்றுச்சுவருக்கு உள்ளே 126 பேர், டீசல் விற்பனை நிலையத்தையொட்டி 313 பேர். புதைக்கப்பட்டவர்கள். 

“அன்று காலை 8.50 மணி. வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். மீன் இறங்குதளம் பக்கமிருந்து ஆண்கள் எல்லாம் கடல் பொங்கி வருகிறது என்று ஓடிவந்தார்கள். மகனை அழைத்துக்கொண்டு பார்க்க வந்தபோது  வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகள்களும் உடன் பயிலும் மாணவிகளும் அப்பா கடல் பொங்கி வருகிறதாம் என்று வெளியே வந்தார்கள்.

“எல்லாரையும் இழுத்துக்கொண்டு, கடலைப் பார்ப்பதற்காக மாடிக்குப் போனால்…

“மீன் இறங்குதளத்தில் ஆண்களும் பெண்களும் அலறியடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சில வினாடிகள்தான்… பனை உயரத்துக்கு கன்னங்கரேலென வந்த அந்தப் பேரலை அவர்களுடன் அத்தனையையும் விழுங்கியது.

“துறைமுகப் பணிக்காக வைத்திருந்த பனை மரங்கள் எல்லாம் கடலோடு சுழன்றடித்தன. சின்னதும் பெரியதுமான படகுகள் இழுத்துச் செல்லப்பட்டன. மின்கம்பங்கள் பறித்தெறியப்பட்டு, வீடுகள் இல்லாமல், எல்லாம் துவம்சம் – ஏழரை நிமிஷங்கள்தான், எதுவும் மிச்சமில்லை.

“அடுத்த சில நிமிஷங்களில் மற்றொரு பேரலை. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட படகுகள் எல்லாம் அலைமீதேறிவந்து ஒன்றோடொன்று மோதி நொறுங்கின. 

“வானம் இடிந்து விழுவதைப் போல தொடர் சப்தம். சுமார் 25 டன் எடையுள்ள படகுகள் எல்லாம் ‘அனாயசமாக’ப்  பறந்துவருகின்றன. திரும்பிச் சென்ற அலை எல்லாவற்றையும் – 300க்கும் மேற்பட்ட வீடுகள், மின் கம்பங்கள் -உள்ளுக்குள் இழுத்துச் சென்று விட்டது.

“அடுத்த சில நிமிஷங்களில் மீண்டும் ஒரு பேரலை. நடந்தவையெல்லாம் மீண்டும் ஒருமுறை நடந்தன. 4-வதாகவும் ஓரலை வந்தது.  ஆனால், அடக்கமாகச் சென்றுவிட்டது.

“தப்பியவர்கள் எல்லாம் நாகைக்கு ஓடிச்சென்று கிடைத்த இடங்களிலும் தெருக்களிலும் தங்கினோம்.

“மறுநாள் அதிகாலை 21 இளைஞர்களுடன் இங்கே வந்தபோது கடுவையாற்றுப் பாலத்தை மோதியபடி, நொறுங்கிய படகுகள் அடைத்துக் கொண்டுவிட்டிருந்தன.

“இடிபாடுகளுக்குள் புகுந்து இங்கே வந்தபோது…. பிணங்கள், பிணங்கள், பிணங்கள்.

“தாயும் பிள்ளைகளும், தந்தையும் மகன்களும்.  நாலைந்து சின்னக் குழந்தைகளை ஒன்றாக. மார்போடு அணைத்தபடி,  கட்டிப் பிடித்தபடி, கைகளைப் பிடித்தபடி, கால்களைப் பிடித்தபடி எல்லாம்  இறந்த உடல்கள் ஊதிக் கொண்டிருக்கின்றன. 

“கல் மனதுடன் இந்த இடங்களில் இரு பெரும்பள்ளங்களைத் தோண்டி சடலங்களைச் சேகரித்துப் புதைத்தோம். எத்தனை முகங்கள்.

“அது நடந்தே இருந்திருக்கக் கூடாது. என் பேத்தியைப் போல அவள். என் கடைக்கு வரும்போது, கணக்குத் தெரியாமல் சில்லறைகளைத் தந்து, ‘தாத்தா மிட்டாய் கொடு’ என்பாள். ஆனால், அந்தக்  குழந்தையை ஊதிப்போன சடலமாக இந்த இரு கைகளால்தான் தூக்கிக் குழிக்குள் வைத்தேன். அன்று மீண்டும் சுனாமி பீதி. தப்பியோடினோம்.

“28 ஆம் தேதி: பிணங்கள் எல்லாம் துர்நாற்றமடிக்கத் தொடங்கிவிட்டன. இடிந்த வீடுகளில் சடலங்களைத் தேடி அங்கங்கேயே கூரைகளைப் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரியூட்டத் தொடங்கினோம்.

“அக்கரையில் 10 சடலங்கள் கிடப்பதாகச் சொன்னார்கள். தேடிப் போனால் எல்லாரும் பெண்கள். முள் செடிகளில் முடி சிக்கிக் கிழிந்த அரைகுறைத் துணிகளுடன் நீரில் ஏற்ற இறக்கத்துக்கேற்ப உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன. 

“இந்த அளம் (கடல் உயர்ந்து வந்தால் நீரேறி நிற்கும் பகுதிகள்) எல்லாம் விதைத்து விட்டதைப்போல பிணங்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 6, 7 என ஆங்காங்கே கண்டெடுத்துக் கொண்டிருந்தோம். காது அறுக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்டு, மூக்கு துண்டாகி… நகைகளுக்காகத் தேடிச் சென்றவர்கள் அந்த இடத்திலேயே குழிவெட்டிப் புதைத்துவிட்டாவது சென்றிருக்கலாம். கொடுமை.

“இங்கே 618 சடலங்கள். அக்கரைப்பேட்டையில் புதைக்கப்பட்டவை 300-க்கும் அதிகம். இந்தப் பக்கமெல்லாம் கிடந்து புதைத்தவை, எரித்தவை 1,200 வரை.  எல்லாமாக 2,100 இருக்கும்.”

கடைக்கு வரும் ஒவ்வொருவரையும் காட்டி, இவனுடைய அம்மா இறந்து விட்டாள். இவருடைய 2 குழந்தைகள் இறந்துவிட்டன. இவன் உறவு, உடைமை எல்லாவற்றையும் இழந்து வீதியில் அலைகிறான் என்று கூறிக் கொண்டிருந்தார்.

தெளிவாக இருப்பதாகத் தோன்றினாலும் இன்னமும் அந்த நாள்களின்  அதிர்ச்சியில் இருந்துவிடுபடாமல்தான் அப்போது இருந்தார் ராஜேந்திர நாட்டார்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பின் சுனாமி பற்றி தற்போது என்ன நினைவுகூர்கிறார் ராஜேந்திர நாட்டார்?

“17 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், இதே கிழமை. அன்று திருவாதிரை, ஆருத்ரா தரிசனம். கடல் கோரத் தாண்டவம் ஆடியது. கடலோர மக்களை ஆழிப்பேரலை அழித்தொழித்தது. எங்கு பார்த்தாலும் சடலங்கள். ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகு பிப்ரவரி 6-ஆம் தேதியன்றுதான் முடிந்தது, ஆழிப் பேரலையில் உயிர் விட்ட சடலங்களை முழுமையாக மண்ணுக்குள் ஆழ்த்தும் பணி. 

“எதை நினைப்பது, எதை மறப்பது? விதைக்கப்பட்டது போல எங்கு பார்த்தாலும் கிடந்த சடலங்களை மறப்பதா? இறந்துகிடந்த உறவுகளைக் கண்டு ஓடியவர்களை நினைப்பதா? முகம் தெரியாதவர்கள் எல்லாம் ஓடிவந்து உதவியதை மறப்பதா? 
 
“சுனாமி ஏற்பட்டு ஏறத்தாழ 10 நாள்களாகியிருக்கும். கட்டட இடிபாடுகளுக்குள்  ஒரு பெண் சடலம். கால் மட்டும்தான் வெளியே தெரிந்தது. காலைப் பிடித்து  இழுத்து சடலத்தை அப்புறப்படுத்த முயன்றபோது, ஊதிப்போயிருந்த அந்த உடலிலிருந்து கால் கழன்று, கையோடு வந்தது. பிறகு இடிபாடுகளுக்குள் இறங்கி, ஆடையின்றிக் கிடந்த அந்தப் பெண்ணின் சடலத்தின் மீது மீன்  வலையைச் சுற்றி அப்புறப்படுத்த முயன்றோம். அப்போது, எங்களுடன்  சேர்ந்து சடலத்தை அகற்ற முன்வந்தவர் அப்போதைய ஆட்சியர் ஜெ. ராதாகிருஷ்ணன், மறக்க முடியாத மனிதர்.

“சொந்தங்களையும், சொத்துகளை இழந்ததால் ஏறத்தாழ மனநிலை  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த எங்கள் மக்களின் ஏச்சுகளையும்   பேச்சுகளையும் எல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு எல்லாவித உதவிகளையும் செய்தார் அவர்.

“ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் பதிவு செய்திருந்தன. இதில், குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் உண்மையிலேயே தன்னலமற்ற தொண்டாற்றியதை மறக்க முடியாது. அதே நேரத்தில், கட்டாத வீடுகளைக் கட்டியதாகக் கணக்குக் காட்டிய தொண்டு நிறுவனங்களையும் மறக்க முடியாது. 

“பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவச் சேவையாற்றுவதற்காக முதலில் களம் இறங்கிய புட்டபர்த்தி சாய்பாபா டிரஸ்ட் மருத்துவர்கள் குழு, தன் உறவினர்களின் உதவியைக் கொண்டு 3 கன்டெய்னர்கள் நிறைய உதவிப் பொருள்களைக் கொண்டு வந்து அளித்த அப்போதைய நாகை மாவட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றுக்கும் தன் சொந்த செலவில் உதவிப்  பொருள்களை அளித்த துளசி அய்யா வாண்டையார் என எண்ணற்றோரின்  தன்னலமற்ற சேவையைக் காலத்துக்கும் மறக்க முடியாது. 

“புதுச்சேரி பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச்  சந்தித்துவிட்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமைச்  சந்தித்தோம். எப்படி பாதிப்பு ஏற்பட்டது? இனி பாதிப்பு ஏற்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? என சுமார் 45 நிமிடங்கள் பேசிய அவரிடம், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூற நீங்கள் நேரில் வர வேண்டும் என்றேன். அதன்படியே அவரும், நாகை வந்தார். தன் தந்தை மீனவராக இருந்து  அனுபவித்த கஷ்டங்களையும், தன்னுடைய தன்னம்பிக்கை தனக்குக் கை கொடுத்ததையும் அவரது பிள்ளைத் தமிழில் பேசி, எங்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். 

“பின்னர்,  கீச்சாங்குப்பம் கிராமத்தில் இறந்த 618 பேரின் நினைவாக  கீச்சாங்குப்பம் கடலோரத்தில் 618 மரக்கன்றுகளை நட்டுச் சென்றார். 6  மாதங்கள் நாங்கள் அந்த மரக்கன்றுகளைப் பராமரித்தோம். ஆனால், வனத்  துறை போதுமான கவனம் செலுத்தவில்லை. அதனால், அடுத்த சில மாதங்களில், அவர் நடவு செய்த அத்தனை மரக் கன்றுகளையும் கடல் கொண்டுவிட்டது. இப்போது, அவர் நினைவாக நாங்கள் சுமார் 100 மரக் கன்றுகளை அங்கு நட்டுப் பராமரிக்கிறோம். 

“கடற்கரைக்கும் கடலோர கிராமங்களுக்கும் இடையே இருந்த பல கிளை நதிகள், கடலோர கிராமத்துக்கும் கடற்கரைக்கும் இடையே சுமார் 100 முதல் 200 மீட்டர் தொலைவுக்கு சுமார் 50 அடி முதல் 100 அடி உயரம் வரை இருந்த மணல் குன்றுகள், அந்த மணல் குன்றுகளில் இருந்த நெய்தல் நிலக் காடுகள் எனத்  தமிழக கடலோரங்களில் இருந்து, இழந்த இயற்கை அரண்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இல்லை.

“ஆழிப்பேரலை அழித்தொழித்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், அந்த இழப்புகளை மறக்கவும் முடியவில்லை, நினைக்கவும் முடியவில்லை” என்றார் ராஜேந்திர நாட்டார்.

ஆறா வடு சுனாமி!

[நாகையிலிருந்து எம். சங்கரின் தகவல்களுடன்]

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>