விருந்தாகவும் மருந்தாகவும் பள்ளிப்பாளையம் சிக்கன்!

நாமக்கல்: உணவகங்களுக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் அசைவப் பிரியர்களின் உணவுப் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவது பள்ளிப்பாளையம் சிக்கன். 

நாமக்கல் மாவட்டம், முட்டைக்கும், கோழிகளுக்கும் பெயர் பெற்ற மாவட்டமாக விளங்கினாலும், கோழிப்பண்ணைகளே இல்லாத பள்ளிப்பாளையம் பகுதி சிக்கன் உணவுக்கு பெயர் பெற்ற நகரமாக உருவெடுத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. நாமக்கல் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும், சர்வதேச அளவிலும் பள்ளிப்பாளையம் சிக்கனை ருசித்து பாராதோர் இருக்க மாட்டார்கள்.

திருவிழா ஒன்றில் சமையல் பணிக்காக ஒருவரை அழைத்துச் சென்றபோது அவர் கோழி உணவை தன்னுடைய கைப்பக்குவத்தில் சமைத்து கொடுத்து மகிழ்ந்தார். அவர் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ருசி காலப்போக்கில் மற்ற சமையல் கலைஞர்களிடத்திலும் பரவத் தொடங்கியது. அன்று முதல் செட்டிநாடு சிக்கன், சிந்தாமணி சிக்கன் வரிசையில் பள்ளிப்பாளையம் சிக்கனும் இடம் பெற்றதாக அங்குள்ள மக்கள் தரப்பில் கூறப்படும் தகவல்.

தென்னிந்தியாவில் பல இடங்களில் கோழி உணவு சமைத்தாலும் பள்ளிப்பாளையம் சிக்கனை குறிப்பிட்டுச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், கார மிளகாயும், தேங்காய் துருவலும்தான் முக்கியமானதாக கூறப்படுகிறது. ஆம்… வழக்கமான கறியைப் போல் பள்ளிப்பாளையம் சிக்கன் கறியை செய்வதில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிப்பாளையம் சிக்கன் என்பது வருவல் மட்டுமே. மண்சட்டியில் காரமிளகாய், வெங்காயம், இஞ்சி-பூண்டு அரைத்தது, சீரகம், கொத்தமல்லி, நல்லெண்ணெய், கருவேப்பிலை, மஞ்சள்தூள், கல் உப்பு போட்டு நன்கு வதக்கி விட்டு, பின்னர் சுத்தம் செய்த நாட்டுக் கோழி அல்லது பிராய்லர் கோழியை ஒரு கிலோ அளவில் அதில் போட்டு வதக்கி விட்டு, அதனுடன் சற்று முற்றிய தேங்காயை சிறுக, சிறுகத் துண்டாக்கி கறியுடன் இணைத்து வேகவைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் கறி வெந்துள்ளதா என்பதைப் பார்த்து இறக்கிவிட்டால் ருசியான பள்ளிப்பாளையம் சிக்கன் தயார். இந்த கறியை உணவில் குழம்பாக இட்டு பயன்படுத்த முடியாது. சாதாரணமாக ஒவ்வொரு கறித்துண்டுகளாக எடுத்து ருசித்து சாப்பிட முடியும்.

சேலம், நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் உள்ள தாபாக்கள், அசைவ உணவகங்களில் பள்ளிப்பாளையம் சிக்கனை விரும்பி உண்போர் ஏராளம். அங்கு பலருக்கு விருந்தாகவும், மருந்தாகவும் இந்த பள்ளிப்பாளையம் சிக்கன் காணப்படும்.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால், ஐப்பசி மாதம் பிறந்ததும், நாவை வருடும் பள்ளிப்பாளையம் சிக்கனை ருசித்து பார்க்க மறக்காதீர்கள்…

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>