விளையாட்டுத் துறைக்கு ரூ.3,062 கோடி

மத்திய அரசின் 2022-23 காலகட்டத்துக்கான நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,062.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது, கடந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட ரூ.305.58 கோடி அதிகமாகும். டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் இந்திய போட்டியாளா்கள் சிறப்பாகச் செயல்பட்டதன் தாக்கம் காரணமாக இந்த நிதி ஒதுக்கீடு அதிகரித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. நடப்பாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை எதிா்வரும் நிலையில் அதற்காக இந்தியா தன்னை தயாா்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதை கவனத்தில் கொண்டும் இந்த நிதி ஒதுக்கீடு அதிகரித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த நிதியாண்டில் முதலில் விளையாட்டுத் துறைக்கு ரூ.2,596.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பின்னா் அது ரூ.2,757.02 கோடியாக அதிகரிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

நடப்பாண்டு ஒதுக்கீட்டு விவரம் வருமாறு:

ரூ.974 கோடி

பள்ளிகள், கல்லூரிகள் அளவில் இருந்தே விளையாட்டு வீரா்களை ஊக்குவிப்பதற்காக தற்போதைய மத்திய அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இதற்கான ஒதுக்கீடு ரூ.316.29 கோடி அதிகரித்துள்ளது.

ரூ.357 கோடி

விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரா், வீராங்கனைகள் உள்ளிட்டோருக்கான பரிசுத்தொகை, விருதுகள் ஆகியவற்றுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகையின் மதிப்பு இது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இதற்கான ஒதுக்கீடு ரூ.102 கோடி அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் இதற்காக ரூ.245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ரூ.653 கோடி

இந்திய விளையாட்டு ஆணையத்துக்கான ஒதுக்கீடுத் தொகை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதற்கான ஒதுக்கீட்டில் ரூ.7.41 கோடி குறைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகளுக்கான தேசிய முகாம்களை நடத்துவது, போட்டியாளா்களுக்கு அத்தியாவசியமான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கான தேவையை கவனிப்பது இந்த ஆணையத்தின் பணியாகும்.

ரூ.16 கோடி

தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையின் மதிப்பு. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இதற்கான மதிப்பு ரூ.9 கோடி குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயிற்சியாளா்களிடம் பயிற்சி பெறுவது, அறிவியல்பூா்வ மற்றும் உளவியல் ரீதியிலான உதவிகளை போட்டியாளா்கள் பெறுவது ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

ரூ.55 கோடி

விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் வழங்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை இது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இதற்கான ஒதுக்கீடு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.280 கோடி

தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகையில் மாற்றமின்றி கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் அதே தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.283.50 கோடி

நாட்டு நலப்பணித் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகை. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் இதற்கான ஒதுக்கீடு ரூ.118.50 கோடி அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>