விஸ்வரூபம் எடுக்கும் பெங் ஷுவாய் விவகாரம்: சீனாவில் டென்னிஸ் போட்டிகளை ரத்து செய்த டபிள்யூடிஏ

 

சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து மகளிர் டென்னிஸ் போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) அறிவித்துள்ளது.

சீன ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகா் ஜாங் காவ்லி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் கடந்த மாத தொடக்கத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டாா். இது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பதிவு நீக்கப்பட்டது. அதன் பிறகு பெங் ஷுவாய் வெளியுலகத் தொடா்பில் இல்லாத நிலையில் இருந்தாா். அவரைத் தொடா்பு கொள்ள முடியாத நிலையும் இருந்தது. வெளியுலகம் கேள்வி எழுப்பியதை அடுத்து பெங் ஷுவாய் பாதுகாப்பாக இருப்பதாக சீன அரசு ஊடகம் பதில் தெரிவித்தாலும், அதைப் பல்வேறு தரப்பினரும் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் சா்வதேச அளவில் குரல் எழுந்து சீனாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. பிறகு, பெங் ஷுவாய் ஒரு உணவகத்தில் உள்ள காணொளியை சீன அதிகாரிகள் வெளியிட்டார்கள். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மூத்த அதிகாரிகளிடம் பெங் ஷுவாய் விடியோ அழைப்பில் பேசுகிற ஏற்பாடும் செய்யப்பட்டது. எனினும் மகளிர் டென்னிஸ் சங்கம் இதனை ஏற்கவில்லை. 

35 வயது  பெங் ஷுவாய், 2014-ல் இரட்டையர் தரவரிசையில் நெ.1 வீராங்கனையாகத் திகழ்ந்தவர். இந்த உயரத்தை அடைந்த முதல் சீன வீராங்கனை. இரட்டையர் பிரிவில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 

டபிள்யூடிஏ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் சைமன்

இந்நிலையில் ஹாங்காங் உள்பட சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து டபிள்யூடிஏ போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 

டபிள்யூடிஏ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் சைமன், இந்த நடவடிக்கை குறித்து அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது:

பெங் ஷுவாயால் சுதந்திரமாகப் பேச முடியாமல், பாலியல் குற்றச்சாட்டை மறுத்துக் கூறும்படியான அழுத்தம் உள்ள நிலையில் இதர வீராங்கனைகளை எப்படி சீனாவுக்கு அனுப்ப முடியும்? 2022-ல் சீனாவில் போட்டிகள் நடைபெற்றால் வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலையைக் கண்டு கவலை கொள்கிறேன். 

நவம்பர் 2 அன்று பெங் ஷுவாய் சீன அரசின் மூத்த அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியபோது அவருடைய தகவலைக் கொண்டு தீவிரமான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என மகளிர் டென்னிஸ் சங்கம் கருதுகிறது. உண்மையைச் சொல்வதால் ஏற்படும் ஆபத்தை அறிந்தாலும் பொதுவெளியில் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தார். அவருடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன். அதிகாரம் மிக்கவர்களால் பெண்களின் குரலை அடக்க முடியும், குற்றச்சாட்டை மறைக்க முடியும் என்றால் எந்தக் காரணத்துக்காக டபிள்யூடிஏ தொடங்கப்பட்டதோ – பெண்களுக்கான சம உரிமை – அது பின்னடைவைச் சந்திக்கும். டபிள்யூடி அமைப்புக்கும் அதன் வீராங்கனைகளுக்கும் இது நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். 

சீனா, ஹாங்காங்கின் டென்னிஸ் சமூகத்தில் அற்புதமான மனிதர்கள் உள்ளார்கள். அவர்களுடன் இணைந்து பல வருடங்கள் பணியாற்றியுள்ளோம். நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சீனா நடவடிக்கை எடுக்காவிட்டால், சீனாவில் போட்டிகளை நடத்தி எங்களுடைய வீராங்கனைகளுக்கும் ஊழியர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தித் தரமாட்டோம். இம்முடிவை எடுக்கும் நிலைக்கு சீன அதிகாரிகள் எங்களைக் கொண்டு வந்துவிட்டார்கள். எங்களுடைய கோரிக்கைக்குச் செவி சாய்த்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தகுந்த நடவடிக்கைகளை சீன அதிகாரிகள் எடுப்பார்கள் என நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>