வையத் தலைமை கொள்வோம்

 

அண்மையில், புவி அறிவியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்திய பருவநிலை மாற்றம் தொடர்பான மதிப்பீடு, கடந்த 1901 முதல் 2018 வரை இந்தியா 0.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அடைந்ததை சுட்டிக்காட்டியது. அதிலும் கடந்த 2010 முதல் 2019 வரையிலான பத்தாண்டு காலம், சராசரியையும் தாண்டி 0.36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையுடன் மிகவும் வெப்பமான காலமாகத் திகழ்ந்தது. 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக வாகன இயக்கம் பெருமளவு குறைந்தபோதிலும், பசுமை இல்ல எரிவாயு உமிழ்வு குறைவதற்கான அறிகுறி இல்லை. மேலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியா 44.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை எட்டக்கூடும் என புவி அறிவியல் துறை எச்சரித்துள்ளது.

உலகில் கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட 10 பருவகால பேரிடர்களில், இந்தியா மட்டுமே இரண்டை சந்தித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு தாக்கிய “அம்பான்’ புயலால் சுமார் ரூ.9,756 கோடி பொருட்சேதம் ஏற்பட்டது. ஜூன் முதல் அக்டோபர் வரை பருவமழைக்கால வெள்ளப்பெருக்கினால் ரூ.7,503 கோடிசேதத்தையும், 1,600 உயிரிழப்புகளையும் தேசம் சந்தித்தது. மெல்ல அதிலிருந்து மீண்டுவந்த நிலையில், “அம்பான்’ புயல் அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதுதான் உலகிலேயே 7-ஆவது நீடித்த கனமழையாகக் கருதப்படுகிறது. இதுதவிர இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு புயல்களை இந்தியா சந்தித்தது. அதில் “டவ்-தே’ புயல் மேற்கு கடற்கரையையும், “யாஸ்’ புயல் கிழக்கு கடற்கரையையும் தாக்கின. 

இந்தியாவில் பருவகாலப் பேரிடரால் ஏற்படும் துயரம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிடுவதாக சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு மைய அறிக்கை தெரிவிக்கிறது. உத்தரகண்டில் கடந்த 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை இழந்து வேறு வேறு பகுதிகளில் குடியேறினர். 

இந்தியாவில், 2050-ஆம் ஆண்டுக்குள் மழையளவு 6 சதவீதமும், வெப்பநிலை 1.6 டிகிரி செல்ஷியஸýம் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி, பருவநிலை மாற்றம் சார்ந்த கடல் மட்ட உயர்வால் ஏற்படும் அரிப்பு காரணமாக, கடந்த 1999 முதல் 2016 வரை சுமார் 235 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாம் இழந்திருக்கிறோம்.

இதன் காரணமாக கடந்த 2008 முதல் 2017 வரையிலான பத்தாண்டு காலத்தில், நம் நாட்டில் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 17 கோடி பேரில், 30.6 லட்சம் பேர் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். இதுதவிர, கடந்த ஆண்டில் “அம்பான்’ புயல் காரணமாக 30.90 லட்சம் பேர் இடம்பெயர நேரிட்டதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டில் கடந்த 1876-ஆம் ஆண்டு முதல் இதுவரை நேரிட்ட 17 மிகப்பெரிய வறட்சிகளில், தக்காண பீடபூமி மட்டும் 8 முறை கொடிய வறட்சியை சந்தித்திருக்கிறது. இதில் தக்காண பீடபூமியின் மையமாக விளங்கும் கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். 

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் ஹட்கர்வாடி கிராமத்தில் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்த நிலையில், தற்போது வெறும் 15 குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அங்கு தண்ணீருக்குக் கூட தட்டுப்பாடு நிலவியதால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் வெளியான பருவநிலை மாற்ற செயலாக்க குறியீட்டில் (சிசிபிஐ), சிறப்பாக செயல்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது வரவேற்புக்குரியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தவிர பிற அனைத்து நிலைகளிலும் இந்தியாவின் செயல்பாடு உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. 

புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும், புதைபடிவ எண்ணெய் அல்லாத பசுமை எரிசக்தி வளங்களை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 40% அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டு பாரீஸ் பருவகால ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டு, தேசிய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை (என்டிசி) சமர்ப்பித்தது.

மேலும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தி ஆற்றலை மலிவு விலையில் பெறும் வகையில், பிரான்ஸýடன் இணைந்து கடந்த 2015-ஆம் ஆண்டில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை (ஐஎஸ்ஏ) இந்தியா ஏற்படுத்தியது. இந்த அமைப்பில் சூரியசக்தி ஆற்றல் நிறைந்த 120 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. இவ்வாறு சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இந்தியா முன்னிலை வகித்தபோதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என பருவநிலை மாற்ற செயலாக்க குறியீடு கூறுகிறது. 

ஆகையால், இந்த உலகளாவிய கூட்டணியும் கொள்கைகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா அல்லது சொற்ப அளவிலான நடைமுறையுடன் வெறும் உறுதிமொழியாக மட்டுமே நீடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா உறுதியளித்தவாறு, 2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை விரைவில் எட்டும் என நிபுணர்கள் தெரிவித்தாலும், பாரீஸ் ஒப்பந்தத்தின் நீண்டகால வெப்பநிலை இலக்கை எட்டுவதில் தாமதம் நீடிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, பாரீஸ் ஒப்பந்த இலக்கை அடைய இந்தியா இன்னும் 2.50 கோடி மரங்கள் முதல் 3 கோடி மரங்கள் வரை நட வேண்டும் என கார்பன் உமிழ்வு அறிக்கை விவரிக்கிறது.

இந்தியா, வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகைப் பெருக்கத்தில் சீனாவை புறந்தள்ளி நுகர்வு கலசாராம் வாயிலாக சர்வதேச பருவநிலையில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை மறுக்க இயலாது. இந்தச் சூழலில் வரும் 31-ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கும் சர்வதேச பருவநிலை மாற்ற மாநாட்டில் பார்வையாளராகப் பங்குபெறும் இந்தியா, சாதகமான பருவநிலை இலக்குகளை நிர்ணயித்து உலகுக்கே வழிகாட்டும் வல்லமையைப் பெறவேண்டும். அத்துடன் தன் சர்வதேச நிலையையும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இதை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>