1. எங்களால் முடியும், வாய்ப்புக் கொடுங்கள்!

குழந்தைகள் இரண்டு வயதிலிருந்தே, இப்படிப் பேசத் தெரிந்தால் நம்மிடம் கூறுவார்கள்: குழந்தைகள்தான் நாங்கள். நாள் முழுவதும் நீங்கள் பல வேலைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் அது போல் செய்ய வேண்டும் என்று கொள்ளை ஆசை. எல்லாம் முடியாவிட்டாலும், சிலவற்றை ஓரளவிற்குச் செய்ய முடியும். எங்களையும் வீட்டில் ஒத்தாசை செய்ய விடுங்கள்!”.

நாங்கள் பிறந்ததிலிருந்து எந்த கருவியை எங்கே பார்த்தாலும், அது என்ன? எப்படி இயங்குகிறது? அதை இயக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டறியும், செயல் வல்லமை அடையும் ஆர்வம் எங்களிடம் எப்போதும் இருக்கும். அதனால் தான் நாங்கள் அது? அது? என்று காட்டிக் கேட்பது. எங்களுக்கு வார்த்தைகள் வருவதற்கு முன்பு கூட, எங்களது கை, முகபாவம் என்ற பல செய்கையில், எல்லாவற்றையும் பிரயோகம் செய்து கேட்போம், செய்ய வராததைக் கூட செய்து பார்த்து விஷமம் செய்வோம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

அந்தப் பொருள் கிடைக்கும் வரை, அந்த ஆர்வம் தீரும் வரை விடமாட்டோம். விடாமுயற்சி எங்களது பாணி!”

“பொருட்களை கைகளில் எடுத்துக் கொள்ள, வெவ்வேறு செய்து பார்க்க, ஆர்வமும் ஆசையும் எங்களைத் தூண்டும். முதலில் பலமுறை கொஞ்சம் அப்படி-இப்படி இருக்கும், கீழே விழும், தோல்வி அடைவோம், சரியாகச் செய்ய மாட்டோம், ஆனாலும் விலகிவிடத் தோன்றாது. இப்படித் தான் நாங்கள், புரிய-செய்ய வரும் வரை அதை விடமாட்டோம். சரியாகப் புரிய, இயக்கப் பல முயற்சிகளுக்குப் பிறகே தான் எங்களால் முடியும். நாங்கள் இப்போதுதான் உலகைப் பார்ப்பதே, நேரம் ஆகத்தான் செய்யும்”.

“இப்படி இரண்டு வயதைத் தொடும் போதே எங்களின் பலவிதமான முயலுவதையும், செய்வதையும் பார்த்திருப்பீர்கள். அதனால்தானோ அதை டெரிபில் டூ  என்கிறீர்கள். அந்த வயதுக் காலத்திற்கு முன்பு கூட, நாங்கள், பக்கத்தில் உள்ளதைத் தற்செயலாகத் தொட்டு, தழுவிப் பார்த்து விளையாடியதைக் கண்டிருப்பீர்கள். ஆனால் அப்போது, பெரும்பாலும் நீங்கள் சொல்வதையும், தருவதையும் மட்டுமே எடுத்து, அவற்றை வைத்து விளையாடுவது என இருந்தோம், இப்போது வீடு-சுற்றுப்புறம் முழுவதுமே எங்கள் விளையாட்டுத் திடல்”.

“எங்களுக்குப் பொருட்களை எடுப்பதும், இயக்குவதும், இடம் மாற்றுவதும், வைப்பதும் நல்ல விளையாட்டு. இந்த விளையாட்டை உபயோகமான திசைகளில் நீங்கள் திருப்பினால், அதில் எங்களுக்கு, உங்களுக்கும் கூட, பல விதங்களில் நன்மை. உங்களுடன் ஒத்தாசை செய்வதில் எங்களுக்குள் பலவிதமான .உணர்வுகளை உணர முடிகிறது. எங்கள் செய்கைகளைப் பார்த்து உங்கள் முகத்தில் படரும் உணர்வுகளைக் கண்டு, அவைகளை வியந்து புரிந்து கொள்கிறோம், உங்களிடமிருந்து! அதிக அளவில் அனுகூலமாக இல்லை என்றால் மாற்றி அமைத்துச் செய்யப் பார்ப்போம். நீங்கள் செய்வதைக் கவனித்து, நீங்கள் எவ்வாறு செய்தீர்களோ அதையே எங்களால் கூடிய அளவிற்குச் செய்து பார்ப்போம்.”

“எங்களுக்கு ஒரு சின்ன வருத்தம். அதைப் பகிர ஆசைப்படுகிறோம். இரண்டு வயதிலும் சரி, இருபத்தி இரண்டு வயதிலும் சரி, பெற்றோர் ஆகிய நீங்களும், கூடே இருக்கும் பெரியவர்களும், பலமுறை நாங்கள் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்ய விடாமல் எங்களைத் தடுத்து விடுவதுண்டு. சில சமயங்களில் நீங்களே காரியத்தை முடித்து விடுவதும் உண்டு.”

“ஒரு வேளை உங்களுக்கு “இதைச் சரியாகச் செய்வது முக்கியம், நானே செய்து விடுகிறேன்” என்ற எண்ணமோ, அல்லது குழந்தையைச் செய்ய விட்டால் தாம் “வேலை வாங்குகிறோம், படிக்க வேண்டிய நேரத்தைக் கெடுக்கிறோம், தவறு செய்கிறோம்” என்று தோன்றி விடுகிறதோ, இல்லை எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இல்லையோ?”

“எங்களது வயதிற்கு ஏற்றதாக ஏதோ ஒன்றைச் செய்யத் தொடங்கும் போது கூட, எல்லா இடுக்கு, முடக்குகளிலிருந்தும் எங்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல் பார்த்து, பார்த்து இப்படிச் செய் செய்ய முடியாது, விட்டு விடு வேண்டாம் ஜாக்கிரதையாகச் செய்ய முடியுமா என்று ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டே இருக்கும். நாங்கள் செய்வதை அப்படியே நுணுக்கமாக ஆராய்ந்து, செய்முறையைச் சொல்லித் தந்து கொண்டே இருக்கையில், எங்களுக்குக் குழப்பம் உண்டாகும். நாங்கள் இப்போது தானே செய்யப் பழகிக் கொண்டு இருக்கிறோம் என்ற நினைப்பு இல்லையோ?”

“செய்தது இப்படி- அப்படி என்று நீங்கள் சொன்னதுமே, எங்களுக்குத் தன்மேல் சந்தேகம் வர ஆரம்பிக்கிறது. இதைப் பல முறை சந்தித்தால்,  நாங்கள் செய்வதில் தவறுகள் அதிகம் ஏற்படுகிறது, தன் நம்பிக்கை குறைகிறது. சந்தோஷ் சுப்பிரமணியம் பார்த்ததில்லையோ?

“இப்படி ஒரு பக்கம் இருக்க, எங்களில் சிலருக்குத் தங்களது பொருட்களை எடுக்க-வைக்கச் சுதந்திரமும் பொறுப்பும் உண்டாம். அவர்கள் வீட்டில் வீட்டினருடன் வேலைகளில் உதவுவதாகவும், அவர்கள் வீட்டின் பெரியவர்களும் அதற்குப் பூரணமாக ஒத்துழைப்புத் தருவதாகவும் சொல்கிறார்கள். இதில் எங்கள் நண்பர்கள் பெருமைப்படுவதைக் கேட்டிருக்கிறோம், அவர்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது, எவ்வளவு தன் நம்பிக்கை!

இங்கும் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்! குழந்தைகள் அவர்களின் வயதிற்கேற்ற ஓரிரு வேலைகளை நம்முடன் செய்ய விடுவது, ஒத்துழைக்கச் செய்வது, நம்பி பொறுப்புகள் கொடுப்பது அவர்களின் நன்மைக்கே. அவர்களை ஒன்றும் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டால், அதனால் குழந்தைகள் மீதான தாக்கத்தைப் பற்றியும், அதை ஏன் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய விடும் போது விளையும் நன்மைகளையும் வரும் வாரங்களில் ஆராயலாம். இதில் இடம்பெறுவது: முதலில், உதவி செய்வதின் நன்மைகள், தொடர்ந்து சில குழந்தைகள் ஏன் உதவ மறுக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுவோம். பிறகு, ஒத்துழைப்பினால் வளரும் திறன்கள், பெற்றோர்களுக்குச் சில பரிந்துரைகள், குழந்தைகள் ஈடுபாட்டுடன் வேலைகள் செய்ய எப்படி அணுக வேண்டும் என்பதையும் பார்ப்போம். வெவ்வேறு வயதுக் குழந்தைகள் வயதிற்கு ஏற்றவாறு எதைச் செய்யலாம் என்றும் பட்டியலிடுவோம்.

தொடரும்

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

<!–

–>