2. சொல் பேச்சைக் கேட்காத குழந்தைகள்!

பாகம் 2:  குழந்தைகள் உதவ ஏன் மறுக்கிறார்கள்? 

  • சொல் பேச்சைக் கேட்காத குழந்தைகள்
  • எதிர் பேச்சு பேசுவது
  • அசுத்தமாக இருப்பது
  • பிற்காலத்தில், எந்த மன வருத்தம் இல்லாமல் முதியோர் இல்லம் சேர்ப்பது

இவை குழந்தைகளிடம் காணப்படுவது நிதர்சனம், குழந்தைகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்வது அவசியமாகும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுக்காவிட்டால், இதுதான் நடக்கும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும், வீட்டினருக்கு சிறு சிறு வேலைகளைச் செய்து தர வேண்டும். இப்படி பங்கேற்பின் நன்மைகளின் சில துளிகளை, சென்ற வாரம் அறிமுகத்தில் பார்த்தோம். 

இதில் குறிப்பாகக் குழந்தைகள் தங்களது பொருட்களை, பொம்மைகளை எடுக்க-வைக்க அவர்களையும் நம்முடன் கூடிச் செய்ய வைப்பதினால், மற்ற வகையான ஒத்தாசை செய்வதினால் விளையும் திறன்களின் வளர்ச்சி, அவைகள் மேலும் கூர்மை ஆவதை விவரிக்கப்பட்டது. இவற்றினால் நிகழ்காலத்தில் நன்மைகளைப் பற்றியும் விவரமாகப் பேசினோம். அவசியமாகப் பேச வேண்டியவையே! ஏனெனில், குழந்தைகளின் தேவையான திறன்களின் அஸ்திவாரம் ஆரம்ப காலத்தில்தான். 

குழந்தைகள் தானாகச் செய்ய ஆரம்பித்துத் தொடர்ந்து செய்வார்களா? இல்லை இதை கற்றுத் தந்து வளர்க்க வேண்டியதா? இந்த இரு கேள்விகளின் பதில்கள் சூழ்நிலைகளைச் சார்ந்தது என்பதை இங்கு, சற்று ஆராய்வோம்.

குடும்ப அமைப்பு

சில வருடங்களாகப் பல குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தைதான். அதனால் பெற்றோரின் முழு கவனம் அவர்கள் மேல் மட்டுமே. பெற்றோரின் வாழ்க்கை தன் ஒற்றைக் குழந்தையைச் சுற்றியே, அவர்களின் தேவையை மையமாக வைத்தே எல்லாம் செய்யப்படுகிறது.

பெற்றோரைப் பொருத்தவரை இதையெல்லாம் செய்வதுதான் நல்ல பெற்றோரின் அடையாளம் என்ற அபிப்பிராயம். இப்படிச் செய்தால் மட்டுமே பெரும் அளவிற்குக் குழந்தைகள் மேல் அக்கறை  காட்டுவதாக ஆசுவாசப் படுவதும். அதற்காக அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதும். அதில் சேர்ந்ததுதான், குழந்தைகள் செய்ய வேண்டிய அனைத்தையும் தாங்களாகச் செய்து முடித்து விடுவார்கள். 

இப்படி நிகழ, இன்னொரு காரணியைச் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு, குடும்பங்களில் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் வளர்ந்து வருவார்கள். இருவரும், ஒருவருக்கு ஒருவர் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பார்த்து இருக்கிறோம். முதலில் பிறந்த குழந்தை பெரும்பாலும் தங்களது தம்பியையோ, தங்கையையோ பார்த்துக் கொள்ள வேண்டி வரும். இதிலிருந்து, அடுத்த வரும் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, இந்த “ரிப்பிள் எஃபெக்ட்” (Ripple effect) ஒரு வரப்பிரசாதம். ஆரம்பக்கால அனுபவக் கற்றல் ஆகிறது!

இந்தச் சூழல் இல்லாததில் வளரும் ஒற்றைக் குழந்தைகளுக்கு இது இல்லாமல் போகிறது.

கசப்பின் ஆரம்பம்

சமீப காலமாகப் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவதாக இருக்கிறது. இருவரின் படிப்பை, திறமையை உபயோகிக்கவோ, சமூகத்திற்குத் திருப்பி தருவதற்காகவோ, இல்லை வீட்டில் உள்ள நெருக்கடியைச் சமாளிக்கவோ என்ற பல காரணிகள். இது போன்ற சூழலில் வேலைக்குக் கிளம்பிச் செல்வதும், வந்தபின் வீட்டு வேலைகளைச் சரி பார்த்து முடிப்பதிலும் மும்முரமாக இருப்பதாலும், குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய அனைத்து தேவைகளைத் தானாகச் செய்து விடுவார்கள். 

இங்குதான் சிக்கல் ஏற்படும். எவ்வாறு? குழந்தைக்காக, குழந்தையும், வீட்டினரும் வசதியுடன் வாழச் சம்பாதிப்பதாகக் கருதுவார்கள். வசதிகள் தரப்படும். இதனால், குழந்தைகள்தான் எல்லாம் பெறுபவர்கள், அது தன் உரிமை (entitlement) என்ற தரப்பில் இருப்பார்களே தவிர, தாங்களும் பங்கேற்று, நம் வீடு-நம் மக்கள், நம் பொறுப்பு என்ற எண்ணமோ, மனப்பான்மையோ இல்லாமல் வளர்ந்து வருவார்கள். 

இப்படி இருப்பது, குழந்தைகள் எட்டு-பத்து வயது வரை நாம் ஏற்றுக் கொள்வோம். அதன் பிறகு, திடீரென்று குழந்தைகள் செய்யாததை வார்த்தையால், முறைத்துப் பார்த்து, கடுமையாக விமரிசனம் செய்ய ஆரம்பிப்போம். குழந்தைகளுக்கு இதன் உள் அர்த்தம் புரியாது – என்றைக்கும் செய்யச் சொல்லவோ, விடவோ இல்லை, இப்போது எதிர்பார்த்தால் அவர்கள் எப்படி அர்த்தம் கொள்ள முடியும்? எப்படிச் செய்வது?

இந்த விரிசல் – பத்து வயதாயிற்று, “பெரியவன்/ பெரியவள்”, புரிய வேண்டும். என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு, குழந்தைகள் என்றைக்கும் எதையும் செய்யாததால் அதே போல் இருக்க நினைப்பது – இது, உறவுகளில் கசப்பின் முதல் கட்டமாகும். இதனால் குறையும் பெற்றோரின் மீது அபிமானம், பிற்காலத்தில் அவர்களை முதியோர் இல்லம் அனுப்பும் வரை கொண்டு விடக் கூடும்.

இருவரும் வேலைக்குப் போக, வேலைகளைச் செய்யும் போது குழந்தைகளைப் பங்கேற்கச் செய்வதில் வேலை அதிகரிக்கும், மீண்டும் செய்ய வேண்டி வரும் என்பதாலும் அவர்களை அழைக்க மாட்டார்கள். ஆம் இதுவும் நிதர்சனம். முதலில் பல நாட்களுக்குக் குழந்தைகள் பல முறை ஒத்தாசை சரியாகச் செய்ய வராது. தவறுகள் நிகழும். அவர்கள் செய்ததை மீண்டும் செய்ய வேண்டி வரும். இந்த நிலையைச் சகித்துக் கொண்டு தாண்டி விட்டால், இந்த இடைஞ்சல் உதவியாக மாறிவிடும். பலன்? என்றைக்கும் சேர்ந்து செய்வதின் சந்தோஷம் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இருக்கும். அன்றைய களைப்பு கலைந்து ஓடி விடும், கூடி வாழ்வதின் இதம் தென்படும். 

வாய்ப்புகள்

ஆனால், குழந்தைக்கு எது முடியுமோ அதைத்தான் செய்ய விட வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தை துணிகளை எடுத்துத் தருவது, துவட்டத் துண்டு, டயப்பர் எடுத்துத் தருவது. ஆனால் இப்படி நேர்வதே மிக அபூர்வம். ஆவதோ- இவையெல்லாம் கைக்கு எட்டும் இடத்திலிருந்தாலும் பெற்றோரும், தாத்தா-பாட்டிகள், மற்றவரும் எல்லாம் தானே செய்து விடுவார்கள். கடை பொம்மையைப் போல் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களே தவிர, குழந்தையை ஈடுபடுத்திச் செய்யும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்.

தன் ஈடான ஒருவர் இல்லாததால் குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள் மட்டுமே ஆகிறார்கள். அப்போது அவர்கள் குழந்தைகளுக்கு எந்த வாய்ப்பையும் தராமல் இருந்தால் பங்களிப்பு என்பது தெரியாமலே போய்விடும்.

நம்முள் உலாவும் ஒரு கருத்தும் நம்மைத் தடுத்து நிறுத்துகிறது. அது, குழந்தைகள் ஓடோடி வந்து செய்ய வந்தாலும் செய்ய விடுவது குற்றம் என்று எண்ணிக் கொள்வதால். வீட்டின் பெரியவர்களும், பெற்றோரும், இத்தனை சிறிய குழந்தையைச் செய்ய விடுவது தப்பு என்பார்கள். அதுவும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள வைத்துள்ள அக்காக்கள் /அண்ணன்கள் குழந்தையை ஏதேனும் செய்ய விட்டால், அதைக் குற்றமாகவே கருதுவார்கள்.

இந்த காட்சிகளை இப்படியும் பார்த்து இருப்போம் – பரவாயில்லை என்று ஒருவர் செய்யவிட, உடனே அங்குள்ள மற்றவர்கள் இவர்களைக் கடிந்து கொள்வார்கள். “குழந்தையென்றால் அப்படி தான் செய்யப் பார்க்கும். அதுக்கு, செய்ய விடுவாயா / சொல்லுவியா?” என்று. அதற்கும் மேல், “வெட்கமாக இல்லை” என்று பல வகை கூறுதல் குவிந்து வரும். இதைத் தவிர்க்க மறுபடி இப்படி நேராமல் பார்த்துக் கொள்வார்கள். இழப்பு, குழந்தைகளுக்கு.

நம் நாட்டில் பெரும்பாலும் குடும்பங்கள் தந்தை வழியாய்ச் செயல்படுகிறது. இதைப் பேட்ரியார்கல் (Patriarchal) என்ற விவரிப்பதுண்டு. இதில் ஆண் குழந்தைகளை எதையும் செய்ய விடாமல் இருப்பது சகஜம்தான். ஆண் குழந்தைகளைப் பொறுத்தவரை மற்றவர்கள் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். செய்யப் பார்க்கையில், “நீ சிங்கம்டா, நீயெல்லாம் செய்யலாமா?” என்றோ “ஆண்பிள்ளை இதையெல்லாம் செய்யக் கூடாது” என்ற தீர்மானமான முடிவையோ முன் வைப்பார்கள். ஆண்பிள்ளை செய்வதைத் துச்சமாக நினைத்து வளருவது ஒரு பக்கம். 

இன்னொரு பகுதியில் அவர்கள் வளரும் பருவத்திலேயே தங்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றிய மனப்பான்மையும் ஸ்திரமாகவிடும். குறிப்பாகச் செல்லமாக வளரும், ஒற்றைக் குழந்தை குடும்பம், ரோஜா நிறம் உள்ளவர், அழகான குழந்தைகளிடம் இந்த உரிமை மனப்பான்மை அதிகமாகத் தென்படும். எந்த குழந்தைகளுக்கு எல்லாம் இவ்வாறு இல்லையோ அவர்களைத் தாழ்வாக நடத்துவதும் இந்த பிஞ்சு வயதிலேயே ஆரம்பமாகும். 

இந்தத் தன்மை இப்போதும் சரி, பிற்காலத்திலும் தென்படும்: தன் உடைமைகளை மற்றவர்கள்தான் பார்த்துச் சரி செய்ய வேண்டும். பால்-காப்பி அருந்திய தம்ளர், சாப்பிட்ட தட்டை அப்படியே விட்டு எழுந்து விடுவார்கள், எடுத்த பொருளை மறுபடி அதன் இடத்தில் அவர்களாக என்றுமே எடுத்து வைக்க மாட்டார்கள்.

ஏதோ ஒரு வகையில் குழந்தைகளுக்கு மற்றவர் நமக்குச் சேவை செய்ய வேண்டும், அது தன் உரிமை என்ற எண்ணம் வளர்ந்து விடக் கூடும். அது வந்து விட்டால்,  தானும் இந்த குடும்ப உறுப்பினர் என்றும், தானும் மற்றவர்களுடன் வேலைகளில் பங்கு கொள்ள வேண்டும் என்ற எண்ணம், பங்கு கொள்ளும் பழக்கம் வளராது. இதை எட்டு-பத்து வயதில் மாற்றுவது சற்றுக் கடினம், ஆனால் பொறுமை, விடாமுயற்சியுடன் செய்து வந்தால் மாற்றி அமைக்க முடியும். 

ஆக மொத்தம், குழந்தைகளுக்கு முடிந்த வரையில் சௌகரியங்களை அமைத்து வளர்ப்பதினால் அவர்களை எதையும் செய்ய விடுவதில்லை. வளர்ந்த பின்னர் இவர்கள் தானாகச் செயல்படத் தெரியாதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற குணங்கள் துளியும் இருக்காது. இதனால் பெற்றோர்களை மேலும் “உபயோகிக்க” முடியவில்லை என்றவுடன் நிராகரித்துக் கைவிட, முதியோர் இல்லம்தான் கதி என்று ஆகிறது.

பெற்றோர், பெரியவர்களினால் பிக்மேலியன் (Pygmalion Effect) இருக்கும். அப்படி என்றால்? அதைப் பற்றி வரும் வாரத்தில் மேலும் விவரமாகப் பார்க்கலாம்.

தொடரும் 

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் malathiswami@gmail.com

<!–

–>