21-வது கிராண்ட் ஸ்லாம் பந்தயம்: ஃபெடரர், ஜோகோவிச்சை நடால் தாண்டிச் சென்றது எப்படி?

 

21-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியை வெல்லும் வீரர் யார்?

இந்தக் கடுமையான போட்டி ஃபெடரர், நடால், ஜோகோவிச் இடையே இருந்து வந்தது. கடந்த வருடம் கடகடவென மூன்று கிராண்ட் ஸ்லாம்களை வென்று ஃபெடரர், நடாலுக்குச் சவால் அளித்தார் ஜோகோவிச். அவரே 21-வது பட்டத்தையும் வெல்வதாக இருந்தது. 

2018-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்ற ஃபெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆடவர் என்கிற சாதனையைப் படைத்தார். அப்போது நடால் 16 பட்டங்களையும் ஜோகோவிச் 12 பட்டங்களையும் மட்டுமே பெற்றிருந்தார்கள். அதன்பிறகு ஃபெடரரால் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்ல முடியாததால் நடாலும், ஜோகோவிச்சும் பந்தயத்தில் அவருடன் சுலபத்தில் இணைந்து கொண்டார்கள். 

2020-ல் பிரெஞ்சு ஓபன் போட்டியை வென்றார் நடால். அதுவே அவருடைய 20-வது கிராண்ட் ஸ்லாம். (2005-ல் இதே பிரெஞ்சு ஓபன் போட்டியை வென்று கணக்கைத் தொடங்கினார்.)

2021-ல் லட்டு போல ஆஸி. ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று பட்டங்களை வென்றார் ஜோகோவிச். 2021 விம்பிள்டன் பட்டத்தை வென்று தனது 20-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி ஃபெடரர், நடால் வரிசையில் நின்று கொண்டார். 

இந்த மூவரில் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லப் போகிறவர் யார் என்கிற சுவாரசியமான போட்டியைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது.  

நடால், ஃபெடரர், ஜோகோவிச். இந்த மூவரின் ஆதிக்கத்தைத் தாண்டி இன்னொருவரால் உள்ளே நுழைந்து ஆளுமை செலுத்த முடிகிறதா என்ன! மெத்வதேவ், டொமினிக் தீம் எல்லாம் என்ன செய்தாலும் இந்தக் கோட்டையைத் தகர்க்க முடியுமா? இன்று நேற்றா இந்த மூவரும் அட்டகாசம் செய்கிறார்கள்!

மூவரில் முதல் சாதனையாளர் ஃபெடரர் தான். 

2003 முதல் 2007 வரை நடைபெற்ற 20 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 12 பட்டங்களை வென்று குவித்தார் ஃபெடரர். எத்தகைய ஆதிக்கம் அது என எண்ணிப் பாருங்கள். 

இப்போதுதான் நடால் உள்ளே நுழைந்தார். டென்னிஸ் உலகில் புதிய போட்டி ஆரம்பித்தது. ஃபெடரரும் நடாலுமே மாறி மாறி கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்ல ஆரம்பித்தார்கள். 2008 முதல் 2010 வரை நடால் மட்டுமே ஆறு பட்டங்களை வென்றார். இந்தக் காலகட்டத்தில் இவர்களுக்குப் பதிலடி தந்தார் ஜோகோவிச். 2008 ஆஸி. ஓபனை வென்று இருவருக்கிடையிலான போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். 

அதுதான் தொடக்கம். 2011 முதல் 2016 வரை ஃபெடரர், நடால் ஆகிய இருவரின் ஆதிக்கத்தையும் பின்னுக்குத் தள்ளி 11 கிராண்ட் ஸ்லாம்களை வென்றார் ஜோகோவிச். அந்தக் காலகட்டத்தில் ஃபெடரர் ஒரு பட்டமும் நடால் 5 பட்டங்களும் வென்றார்கள். 2015, 2016-ல் காயங்களால் பலமுறை அவதிப்பட்டபோதும் 2017 முதல் 2020 வரை பிரெஞ்சு ஓபன் பட்டங்களை அள்ளிக் கொண்டார் நடால். 2020 பிரெஞ்சு ஓபன் பட்டம் தான் நடாலின் 20-வது கிராண்ட் ஸ்லாம். 2017, 2019 யு.எஸ். ஓபன் வெற்றிகளும் அவருக்குக் கிடைத்தன. 

21-வது பட்டத்தை ஜோகோவிச் தான் முதலில் வெல்வதற்கான சூழல் இருந்தது. கடந்த வருடம் மூன்று பட்டங்களை வென்ற ஜோகோவிச், யு.எஸ். ஓபன் போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், அப்போது தடைக்கல்லாக இருந்து சாதனையைத் தடுத்தவர், நேற்று நடாலிடம் தோற்ற மெத்வதேவ். நேர் செட்களில் ஜோகோவிச்சைத் தோற்கடித்தார். 2017 முதல் கடந்த 19 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்,  மூவரைத் தவிர கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 2-வது வீரர் ஆனார் மெத்வதேவ். (2020 யு.எஸ். ஓபனை டொமினிக் தீம் வென்றார்.) 

29 கிராண்ட் ஸ்லாம் இறுதிச்சுற்றுகளில் விளையாடி 21 பட்டங்களை நடால் வென்றது மகத்தான சாதனை. ஆனால் இதெல்லாம் நடக்கும் என அவரே கடந்த மாதம் எதிர்பார்க்கவில்லை. 

2021 ஜூன் மாதம் – விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நடால் அறிவித்தபோது மீண்டும் எப்போது விளையாட வருவார் என ரசிகர்கள் ஏங்கினார்கள். பிறகு யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்தும் விலகினார். செப்டம்பர் 11 அன்று இன்ஸ்டகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார். ஊன்றுகோல் உதவியுடன் நடால்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rafa Nadal (@rafaelnadal)

முடிந்தது கதை. இதிலிருந்து மீண்டு வந்து எப்படி 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என்றே பலரும் நினைத்தார்கள். ஒரு மாதம் கழித்து ஓய்வு பற்றி பேச ஆரம்பித்தார் நடால். எப்போது மீண்டும் விளையாட வருவேன் என எனக்குத் தெரியாது. சில விஷயங்களை என்னால் 100% கட்டுப்படுத்த முடியாது என்றார். இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். திரும்பத் திரும்ப ஒரே கேள்வி தான் – மீண்டும் எப்போது விளையாட வருவீர்கள்?

டிசம்பர் மாதம் மீண்டும் விளையாட வந்தார் நடால். அபு தாபியில் காட்சி ஆட்டங்களில் பங்கேற்றார். அதில் தோல்வியடைந்தாலும் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் டிசம்பர் 20 அன்று கரோனாவால் பாதிக்கப்பட்டார் நடால். உடலளவில் மிகவும் பாதிப்படைந்ததாகத் தகவல் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. புத்தாண்டுக்காக ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்தார். மெல்போர்ன் – ரால் லேவர் அரங்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் நடால் பங்கேற்பது உறுதியானது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rafa Nadal (@rafaelnadal)

மெல்போர்னில் முதல் சுற்றை வென்ற பிறகு நடால் கூறினார் – காலில் காயம், கரோனா போன்ற காரணங்களால் ஒன்றரை மாதத்துக்கு முன்பு மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுவேனா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது என்றார். 

காலிறுதியில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு டெனிஸ் ஷபோவலோவை வென்ற நடால், அரையிறுதியில் அட்டகாசமாக விளையாடினார். ரசிகர்கள் எதிர்பார்த்த பழைய நடாலின் ஆட்டம் வெளிப்பட்டது. இப்போது 21-வது பட்டம் வென்று முடிசூடா மன்னனாகி விட்டார். 

கிராண்ட் ஸ்லாம் இறுதிச்சுற்றில் நீண்ட நேரம் விளையாடிய வீரர்களில் நடால் – மெத்வதேவ் ஆட்டத்துக்கு 2-ம் இடம். இவர்கள் 5 மணி நேரம் 24 நிமிடங்கள் விளையாடினார்கள். இதற்கு முன்பு 2012-ல் ஆஸி. ஓபனில் நடாலும் ஜோகோவிச்சும் 5 மணி நேரம் 53 நிமிடங்களுக்கு விளையாடியதை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

என்னை விடவும் ஃபெடரரும் ஜோகோவிச்சும் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இந்த விளையாட்டில் சிறப்பான விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம். அதைக் கொண்டாட வேண்டும். மற்றதெல்லாம் பெரிய விஷயமில்லை என்று சொல்லிக்கொண்டு ஃபெடரர், ஜோகோவிச்சைத் தாண்டிச் சென்றுவிட்டார் இந்தத் தன்னம்பிக்கைப் புயல். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>