3 விக்கெட்டுகளை இழந்த தெ.ஆ. அணி: மதிய உணவு இடைவேளையில் 100/3

 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில், 2-ம் நாள் உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை.  

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் தெ.ஆ. அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 8 ரன்களும் நைட் வாட்ச்மேன் மஹாராஜ் 6 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். எல்கரை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா.

இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே மார்க்ரமை 8 ரன்களில் போல்ட் செய்தார் பும்ரா. நைட் வாட்ச்மேனான மஹாராஜ் சில பவுண்டரிகள் அடித்து 25 ரன்கள் வரை எடுத்து அசத்தினார். பிறகு உமேஷ் யாதவின் அற்புதமான பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பீட்டர்சன் – வான் டர் டுசென் ஜோடி சிறப்பாக விளையாடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. 

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சன் 40, டுசென் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்றைய நாளின் முதல் பகுதியில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சனும் டுசெனும் இந்திய அணிக்கு மேலும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>