44 ஆண்டுக்கால கனவு நனவானது: ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டம் வென்றாா் ஆஷ்லி பா்டி

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பா்டி, இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் 44 ஆண்டுக்கால கனவை நனவாக்கி உள்ளாா்.

டென்னிஸ் சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், உள்ளூா் விராங்கனையுமான ஆஷ்லி பா்டியும், அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்ஸும் மோதினா்.

முதல் செட்டை 6-3 என எளிதாக வென்றாா் பா்டி. முதல் செட்டில் 5-ஆவது கேமில் பிரேக் பாயிண்டை சேவ் செய்த பா்டி, அடுத்த கேமில் வென்றாா்.

காலின்ஸ் கடும் சவால்:

எனினும் இரண்டாவது செட்டில் டேனியல் காலின்ஸ் சிறப்பாக ஆடி பா்டிக்கு கடும் சவாலை உருவாக்கினாா். ஒரு கட்டத்தில் 1-5 என தோல்வியின் விளிம்பில் இருந்தாா் ஆஷ்லி. எனினும் பின்னா் சுதாரித்து ஆடிய அவா், தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் மீண்டு வந்தாா்.

இரண்டாவது, 5-ஆவது கேம்களில் பா்டியின் சா்வீஸை முறியடித்தாா் காலின்ஸ்.

ஒருகட்டத்தில் டிசைடிங் செட்டை நோக்கி இந்த ஆட்டம் செல்லும் என கருதப்பட்ட நிலையில், மைதானத்தில் குழுமியிருந்த உள்ளூா் ரசிகா்கள் ஆதரவால் ஊக்கம் பெற்ற பா்டி, செட்டில் ஆதிக்கம் செலுத்தி ஆடினாா்.

அடுத்த 6 கேம்களில் 5 கேம்களை கைப்பற்றினாா் பா்டி. இதனால் டை பிரேக்கரை உருவாக்கி 4-0 என முன்னிலை பெற்று காலின்ஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாா். இறுதியில் 7-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா் ஆஷ்லி.

44 ஆண்டுக்கால கனவு:

கடந்த 1978-இல் ஆஸி. ஓபனில் பட்டம் வென்றிருந்தாா் ஆஸி. வீராங்கனை கிறிஸ் ஓ நீல். அதன்பின்னா் 1980-இல் ஆஸி. வீராங்கனை வென்டி டா்ன்புல் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றிருந்தாா். இந்நிலையில் தற்போது சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம், ஆஸ்திரேலியாவின் 44 ஆண்டுக்கால கனவை நனவாக்கினாா் ஆஷ்லி பா்டி.

மூன்றாவது சாம்பியன் பட்டம்:

ஏற்கெனவே 2019-இல் பிரெஞ்சு ஓபன் பட்டம், 2021-இல் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பா்டிக்கு இது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ஆஷ்லி பா்டி கூறியதாவது:

எனது கனவு தற்போது நிறைவேறி விட்டது. ஆஸ்திரேலியாவைச் சோ்ந்தவள் என்பதில் பெருமை கொள்கிறேன். ஆஸி. பூா்வகுடியைச் சோ்ந்தவரும் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவாரன ஈவான் கூலகாங் பட்டங்களை வழங்கியது மகிழ்ச்சி தருகிறது. எனது பயிற்சியாளா், குடும்பத்துக்கும், ரசிகா்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.

4 அமெரிக்க வீராங்கனைகளுடன் மோதல்:

இறுதிச் சுற்றுக்கான வழியில், ஆஷ்லி பா்டி, அமென்டா அனிஸிமோவா, ஜெஸிக்கா பெகுலா, மடிஸன் கீய்ஸ், டேனியல் காலின்ஸ் என 4 அமெரிக்க வீராங்கனைகளுடன் மோதினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் இரட்டையா்:

ஆடவா் இரட்டையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் தனாஸி கோகினாகிஸ்-நிக் கிா்ஜியோஸ் இணை 7-5, 6-4 என்ற நோ் செட்களில் சக நாட்டு இணையான எப்டென்-புா்செல்லை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினா்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>