50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

 

புதுதில்லி: நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விகிதாசாரம் கடந்த முறையைவிட அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலன், குடும்ப நலன்கள், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை, “தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்.எஃப். எச். சர்வே)’ என்ற பெயரில் மத்திய குடும்ப நல அமைச்சகம் ஒவ்வொரு முறையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி என்.எஃப். எச். சர்வே-5  இன் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் கடந்த 2020, டிசம்பரில் வெளியிடப்பட்டன. அதில் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்ட (என்.எஃப். எச். சர்வே-5 ) ஆய்வு முடிவுகளை மத்திய குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு: அருணாசல பிரதேசம், சண்டீகர், சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், தில்லி, ஒடிஸா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 14 மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த முடிவுகளை முதல் கட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து விகித குறைபாடு 38-இலிருந்து 36 சதவீதமாகவும், உணவை வீணாக்குவது 21-சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகவும் குறைந்துள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 36-இலிருந்து 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.

14 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்பட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு 180 நாள்களுக்கும் மேலாக இரும்புச்சத்து மாத்திரைகள் (அயர்ன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்) வழங்கப்பட்டபோதும் இந்தப் பாதிப்பு குறையவில்லை. இந்திய அளவிலும் இது பாதியாகும்.

6 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது 2015-16-இல் 55 சதவீதமாக இருந்தது. அந்த விகிதம் 2019-21-இல் 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம் இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்விலும் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம்: மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 79 சதவீதத்திலிருந்து 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியிலும், தமிழகத்திலும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு 100 சதவீதத்தைத் தொட்டுள்ளது. 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த விகிதாசாரம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது.

மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் இந்த விகிதாசாரம் அதிகம்.

குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 13 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் 12 முதல் 23 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி விகிதம் 62 சதவீதத்திலிருந்து 76-ஆக அதிகரித்துள்ளது. 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில்  இந்த விகிதாசாரம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒடிஸாவில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை 90 சதவீதம் பெற்றுள்ளன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசின் “இந்திர தனுஷ் மிஷன்’ திட்டம் தொடங்கப்பட்டது முக்கியக் காரணமாகும்.

ஒரு பெண்ணின் சராசரி கருத்தரிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களின் கருத்தரிப்பு விகிதாசாரம் மொத்தமாக 2.2 சதவீதத்திலிருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களைத் தவிர ஏனைய மாநிலங்களில் இந்த விகிதம் 2.1 சதவீதம் என்ற இலக்கை அடைந்துள்ளது.

கருத்தடை செய்வதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர ஏனைய மாநிலங்களில் ஒட்டுமொத்த கருத்தடை செய்யப்படும் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. கருத்தடை செய்வதற்கு நவீன முறைகளைக் கையாள்வதும் அதிகரித்துள்ளது.

என்.எப்.எச்.எஸ்.-4 மற்றும் என்.எப்.எச்.எஸ்.-5 உடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் வங்கிக்  கணக்குகளை பெண்கள் கையாளுதல் ஆகியவை 53 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக அதிகரித்துள்ளன. 

மத்திய பிரதேசத்தில் இந்த விகிதாசாரம் 37 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் ஏனைய மாநிலங்களில் ஏற்கெனவே 70 சதவீத பெண்கள் வங்கிக் கணக்குகளை கையாளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த ஆய்வுகள் நாட்டில் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலம் சார்ந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும், தரவுகளை ஒப்பிடவும் உதவுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>